ஒரு பணக்கார வீட்டின் வாயில்காப்பாளன் தன் முதலாளி மேல் பாசம் கொண்டவன். கடிந்து பேசாத அவருடைய குணமும் சாந்தமான பார்வையும் அவரை அவன் மனதில் ஒரு உத்தமராக்கின. ஆனாலும் அவனிடத்தில் அவரைப் பற்றிய குறை உண்டு.
முதலாளி எப்போ வருவார் எனக் காத்திருந்து நீண்ட நேரம் அவரைக் காக்க வைக்காது கதவைத் திறந்து விடும் அவனுக்குப் புன்னகையைப் பதிலாக்கினாரே தவிர ஒரு போதும் அவனோடு உரையாடியதில்லை.
முதலாளி அவனுடன் உரையாடாதது பெருங்குறையாக அவனுக்கு இருந்ததால் அவனுடைய வீட்டுக்கஷ்டத்தை அவரிடம் சொல்லி உதவி கோரவோ, சம்பளத்தை உயர்த்திக் கேட்கவோ அவன் விரும்பவில்லை.
திடீரென ஒரு நாள் அவனுடைய மனவி சுகவீனம் உற்றாள். அவளை மருத்துவமையில் சேர்த்தான். சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. அவனிடமோ வசதியில்லை. மனைவியை அருகிலிருந்து பார்க்க விரும்பினாலும் வேலைக்குப் போகாவிட்டால் வருமானம் குறைந்து விடும்; மருந்து மாத்திரை வாங்க காசிராது என்ற காரணத்தால் வேலைக்குப் போனான்.
வழக்கம் போல முதலாளி வெளியே செல்லும் போதும் திரும்பி வரும் போதும் கதவைத் திறந்து விட்டான். முதலாளி வீட்டுக்குள் சென்ற சில நிமிடங்களில் முதலாளி அம்மா வந்து அவனிடம் என்னப்பா உனக்குப் பிரச்சினை என்று வினவினார்.
அவன் திகைப்பாகப் பார்க்க முதலாளி கேட்கச் சொன்னதாகச் சொன்னாள். அவனும் தன்னிலையை உடைத்தான். ஆறுதல் சொல்லிச்சென்ற முதலாளி அம்மா சற்றைக் கெல்லாம் திரும்பி வந்து அவனிடம் பண உறையைக் கொடுத்து “ஐயா குடுக்கச் சொன்னார்” என்றாள்.
ஒருபக்கம் அவனுக்கு மகிழ்வாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையில் ஆழ்ந்தான். “இப்போ கூட தன்னுடன் நாலு வார்த்தை கதைத்து காசைத் தராமல் அம்மாவிடம் குடுத்தனுப்பி உள்ளாரே” என்ற சோகம் அவனுக்குள் ஓடியது. அதை முதலாளி அம்மாவிடம் உடைந்த குரலில் கூறினான்.
“அவருக்குப் பிறவியிலேயே பேச்சு வரவில்கை” என்றாள் முதலாளி அம்மா. காவலாளியின் கண் முன் முதலாளியின் புன்னகை வந்து போனது.
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் அவர் மேல் கோபம் கொள்ளவோ, அவரை விமர்சிக்கவோ கூடாது.