வல்லாதிக்க ஆழிகளின் அலைக்கரங்களால் அலைகழிக்கப்படும் எம் மாங்கனித்தீவில் கொல்லப்பட்ட உறவுகளுக்காய் அகவணக்கம் செலுத்துவோம்.

82

இலங்கைத் தீவில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பலர் சாவடைந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். வழிபாட்டுத் தலத்தில் வழிபட்டுக்கொண்டிருந்த தமிழர்கள் உட்பட, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை தீவிரவாதத் தாக்குதலால் உயிரிழந்தும் காயமுற்றும் உள்ளார்கள்.

இஸ்லாமியத் தீவிரவாட இயக்கம் இந்த மிலேச்சனத்தனமான தாக்குதலை நடத்தியதாக ஸ்ரீலங்காப் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. அதன் பின் இசுலாமிய சகோதர்கள் மீதான காழ்ப்புணர்வையும் கவலையையும் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இசுலாமியச் சகோதரர்களும் கவலையும் கண்டனத்தையும் தெரிவிப்பதோடு, குருதி தேவைப்பட்ட தமிழர்களுக்கு முன்னின்று குருதிக் கொடை வழங்கியும் வருகின்றனர்.

இன்னொரு பக்கம் தாக்குதல்தாரிகள் இசுலாமியர்கள் அல்லர் என்று இசுலாமிய நண்பர்களும் இல்லை.. இல்லை… நீங்கள்தான் என்று ஏனைய நண்பர்கள் சந்தர்ப்பவாத பயனாளிகளாகவும் மாறி சண்டையிட்டு வருகின்றனர்.   மேலும் பாரிய அனர்த்தங்களை எமக்களிக்கக் காத்திருக்கும் தீய சக்திகளுக்கு எமது இந்த சண்டையும் ஒற்றுமை இன்மையும் வாய்ப்புகளை வழங்கும். எனவே ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை தவிர்க்க வேண்டும்.

நாசகாரிகளான தீவிரவாதிகள் தமிழரோ, முசுலிமோ, சிங்களவரோ, இந்துவோ, கிருத்தவரோ, பௌத்தரோ அல்லர்.  அவர்கள் தீவிரவாதி எனும் இனத்தினர். தீவிரவாதம் எனும் மதத்தை பின்பற்றுவோர். எம்முடம் கலந்திருக்கும் அவர்களை நாமே இனங்கண்டு வெளிக்கொண்டு வந்து தீவிரவாதத்தை அழிக்க வேண்டும். இதனால் மட்டுமே ஒவ்வொரு மதமும் இனமும் புனிதமடையும். ஒரு இனத்தை இன்னொரு இனம் குற்றம் சாட்டுவது தவிர்க்கப்படும். வேறு சக்திகளின் தலையீடு தடைபடும்.

இதுவே கொல்லப்பட்ட எமது மக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.