ஜன்னலுக்கு பின்னே அப்பா நின்ற போது எடுத்த புகைப்படம்!🎖

Injustice anywhere is a threat to Justice everywhere.”

– Martin Luther King Jr –

“அப்பா ஏன் கம்பிகளுக்கு பின்னே பழைய உடுப்புடன் கவலையாக நிற்கிறார்?”

பிறருக்காகவும் வாழ்ந்த அல்லது வாழ்ந்துவரும் வைத்தியக் கலாநிதி து.ஜெயக்குலராஜா அவர்களின் தலைமகன் 1983 ஆம் ஆண்டில் தனது தாயிடம் கேட்ட கேள்விதான் இது.

தமிழீழ மருத்துவக் கல்லூரியின் பீடாதிபதியாக பதவி வகித்த அந்த வைத்தியப் பெருந்தகை பல தொண்டு நிறுவனங்களின் தலைவராய் செயலாளராய் செயல்பட்டவர்.

“உன் அப்பா உரிமைக்காக குரல் கொடுப்பவர்களுக்காக அல்லது உழைப்பவர்களுக்காக மனிதாபிமான உதவி செய்தவர். துடி துடித்த ஓர் உயிரைக் காத்தார் அதற்காய் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.”

என்பதை என் மகனுக்குச் சொன்னால் அந்தச் சிறுவயதில் அவனுக்கு விளங்காது.

ஆதலினால்,

அப்பப்பாவின் பெரிய வீட்டின் ஜன்னலுக்கு பின்னே உன் அப்பா நின்றபடி எடுத்துக் கொண்ட படம் இதுவென்று அந்நாட்களில் சொல்லிச் சமாளித்தேன், என்று சொல்லி அந்த வைத்தியரின் சகியாகிய அந்த ஆங்கில ஆசிரியை எங்களிடம் அழுதார்.

தப்பேதும் செய்யாமல் சிறைவாழ்க்கை வாடு(ழு)ம் மனிதர்களின் அவலம் எத்தகையது என்பதை முதன் முதலில் 1993 அறிந்து கொண்டேன்!

கடவுளின் அவதாரங்களாக எம் மண்ணில் சேவை செய்த வைத்தியப்பெருந்தகைகள் சிறையில் அடைக்கப்பட்டமை தனியே 2009 இல் நடந்த துன்பியல் அல்ல!

1983 ஆம் ஆண்டு மேற்குறித்த வைத்தியரும் வண பிதா சிங்கராசா அவர்களும் சிறையில் வாடினர்கள் என்பதை இளையவர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வணகத்துக்குரிய பிதாவாய் இருந்தாலென்ன கடவுளின் வடிவமாய் உள்ள வைத்தியராய் இருந்தாலென்ன சிங்களவர்களுக்கு மாங்கனித்தீவில்உள்ள  அனைத்துத் தமிழர்களும் தமிழர்களாகவே தெரிகிறார்கள்.

அல்லது பயங்கரவாதிகளாகவே தெரிகிறார்கள்.

அந்த விடையத்தில் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தெளிவாகவே உள்ளார்கள்.

தமிழர்கள் மட்டும் தங்களுக்குள் அன்றும் இன்றும் அதிகம் அதிகம் வேற்றுமைகளைக் காண்கின்றனர்.

விடுதலை தேடிய இளைஞர்களால் சாக்காட்டுக்கு அனுப்பப்பட்ட சாதியத்தை ஊருக்குள் நுழைய அனுமதித்து சிறிய மனிதர்களாக சிதைந்து போகிறார்கள்.

மதவாதம் பேசும் கீழான மனிதர்களின் கருத்துக்களால் கவரப்படுகிறார்கள்.

இவ் அவலநிலையை மாற்றி யாம் புதுயுகம் படைக்க அணிதிரள்வோம்.