பார்வைகள் பலவிதம்

262

ரெயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அடித்துப்பிடித்து வண்டிக்குள் அந்தக்குடும்பத்தினர் ஏறினார்கள். இருக்கையைத்தேடி அமரும் போது அருகே ஒரு முதியவரும், கண்ணாடி அணிந்த ஒரு இளைஞனும் அமர்ந்திருந்தார்கள்.

அந்த இளைஞன் வருபவர்கள் போவோர்கள் எல்லோரையும் உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

வண்டி கிளம்பியது. சில நிமிடங்களுக்குப் பின் அந்த இளைஞன் சந்தோசத்தில் கத்த ஆரம்பித்தான் – “அப்பா இங்க பாருங்க… எல்லாமே எவ்ளோ நல்லா இருக்கு..!”. அவனது அப்பாவான அந்த முதியவரும் ஆமோதிப்பவராக தலையசைத்தார்.

பழங்கள் விற்பவர்கள் வந்தார்கள். அந்த இளைஞன் – “ஹைய்யா… அப்பா… அதானே சாத்துக்குடி…. அதானே ஆப்பிள்” என்றான்.
அந்த முதியவரும் “ஆமாம்..பா” என்றார்.

அடுத்தடுத்து இதே போல நடந்த நிகழ்வுகளில் அந்த இளைஞனைப் பார்த்து அந்தக்குடும்பத்தினர் எரிச்சல்பட்டுக் கொண்டே முணுமுணுக்க
ஆரம்பித்தார்கள். அந்த இளைஞன் கண்டுகொள்வதாயில்லை.

சற்று நேரத்தில் லேசான தூறல் ஆரம்பித்தது.

“ஹைய்யா… மழை…! அப்பா.. மழை பாருங்கப்பா…!!” என்று அவ்விளைஞன் குதிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் மழை வலுத்து, மழை நீர் வண்டியின் உள்ளேயும் தெறிக்க ஆரம்பித்தது.

“சன்னலை மூடுங்க” – என்ற அந்தக் குடும்பத்தினரின் குரலை அந்த இளைஞன் பொருட்படுத்தவில்லை.

அந்த இளைஞன் மழைநீரில் கைகளை நனைத்து விளையாட ஆரம்பித்திருந்தான். மழை நீர் லேசாக அந்தக்குடும்பத்தினரின் ஆடைகளிலும் பட ஆரம்பித்திருந்தது.

அந்தக்குடும்பத்தில் ஒருவர் கோபத்துடன் “ஏன் சார்.. கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா..? பப்ளிக் பிளேஸில் எப்படி நடந்துக்குறதுன்னு
தெரியாதா..? எத்தனை வயசாச்சு…! இன்னும் இப்படியா..? மூளை சரியில்லன்னா மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டியதுதானே..? அதை விட்டுட்டு, இப்படி கூப்பிட்டு வந்து ஏன் எல்லார் உயிரையும் வாங்குறீங்க..?” என்றார்.

அந்தப் பெரியவர் சொன்னார் – “மன்னிச்சுக்கோங்க. நேத்துதான் ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் பண்ணுனாங்க.. பிறவியில் இருந்தே அவனுக்கு பார்வை இல்லாம இருந்துச்சு. இங்க இருக்குற ஆஸ்பத்திரியில பெரிய டாக்டருங்க இருக்காங்கன்னு சொன்னதால வந்தோம். ஆபரேசன் செஞ்சு கண்பார்வை சரியானதுனால அவனுக்கு பாக்குற எல்லாமே ஆச்சரியமா இருக்கு. இத்தன வருசமா தடவிப்பாத்து மட்டுமே தெரிஞ்சிகிட்டவன் இன்னைக்கு நேருல பாக்குறதால அப்படி நடந்துக்குறான். தெரியாம அவன் உங்களுக்கு தந்த தொந்தரவுக்கு தயவு பண்ணி மன்னிக்கணும். நாங்க
வேணும்னா வாசல் பக்கத்துல போயி நின்னுக்குறோம்.”

பார்வைகள் பலவிதம்.

நன்றி – பாரதி – தமிழ்மன்றம்