மறைந்திருக்கும் நல்லவன்

570

மகாபாரதத்தில் பதினான்காம் நாள். இறுகிய முகத்துடன் கிருஷ்ணன் கூறுகிறார்.. “இன்று மிகவும் நல்லவன் ஒருவன் இறக்கப் போகிறான்”. அதைக் கேட்டதும் அனைவருடைய கண்களும் தருமரை மொய்த்தன. கவலையில் ஆழ்ந்தனர். போர் தேவையா என்று எண்ணினர். எது பற்றியும் கவலை கொள்ளா கிருஷ்ணன் தேரை போர்க்களம் நோக்கிச் செலுத்துகிறான். மற்றவர்கள் பின் தொடர்கின்றார்கள்.

போர்க்களத்தில் பீமனை எதிர்கொள்கிறான் விகர்ணன். பாஞ்சாலி துகிலுரியப்பட்ட போது அறமில்லை என அவையை எதிர்த்த ஒற்றை அறங்காவலன். அதனைக் காரணம் காட்டி பீமன் விகர்ணனை அப்பால் போகப் பணிக்கிறான். விகர்ணன் மறுக்க உன்னைக் கொல்ல என் கதாயுதம் கூட விரும்பாது.. ஒன்றில் விலகிச் செல்.. இல்லையேல் எம் பக்கம் வா என்கிறான் பீமன். விகர்ணன் மறுக்க வேண்டா வெறுப்பாக சண்டை செய்தான் பீமன்.

விகர்ணன் அறவாளன் மட்டுமல்ல பெருவீரன் என்றும் உணர்ந்தான். அவனுடைய உள்ள உறுதியைக் கண்டு வியந்தான். எடுத்த சபதம் முடிக்க அவன் கதையை முடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தான். கதாயுதத்தை ஓங்கி வீசினான். விகர்ணன் வீழ்ந்தான்.

அன்றைய நாட் போர் முடிந்து பாசறை திரும்பிய அனைவரும் பரிதவிப்புடன் தருமனைத் தேடினர். தருமர் பாசறையில் உள்ளதை கண்டு ஆறுதல் அடைந்தாலும் தருமனை விட நல்லவன் உள்ளானா என மருகினர்.

கிருஷ்ணன் கூறினார்.. “நல்லவர்களோடு இருக்கும் நல்லவனை விட கெட்டவர்களுக்குள் இருந்த நல்லவன் மேலானவன். விகர்ணன் அப்படிப் பட்டவன். துட்டர்களுடன் இருந்து அவர்கள் கெட்ட செய்ல்களைத் தட்டிக் கேட்டான். முடி தருகிறேனென பீமன் சொன்ன போது அதைத் தட்டிக் கழித்தான். மற்றவர்கள் எல்லோரும் தனிப்பகைக்கும் சுய கௌரவத்துக்கும் பெயர் புகழுக்குமாக அங்கே இருக்க இவன் மட்டுமே எதையும் எதிர்பார்க்காது அண்ணனுக்காக மட்டும் அங்கே இருந்து உயிர் விட்டான். அவனை விட்ட நல்லவன் உண்டா சொல்லுங்கள்” என்றான்.

தருமன் அதை மனமொத்து ஏற்றுக்கொண்டான். பீமனின் கதை நழுவிக் கீழே வீழ்ந்தது.

வெளியில் தெரியும் நல்லவர்களை விட வெளிச்சம் படாமல் இருக்கும் விகர்ண நல்லவர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றார்கள்.