நாள் : 53
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : வாழ்க்கைத் துணைநலம்
செய்யுள் :3
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
சிவந்த நிறம், உயரம், அழகிய முக அமைப்பு, மெல்லிய இடை, இனிய குரல், கவரும் நடை உடை பாவனைகள், கை நிறைய வருமானம், சொத்துக்கள், தலை நிறைய கருமையான முடி, நுனி நாக்கு ஆங்கிலம், சமையல் திறமை, ஆடல் பாடல் திறமைகள் இத்யாதி இத்யாதி…
இன்றைய மணமக்கள் தேவை விளம்பரங்களைப் பாருங்கள். ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க அவர்கள் கொடுத்திருக்கும் விவரக் குறிப்புகளைப் பாருங்கள்.
சிறந்த குணமுள்ள, தெய்வ பக்தியுள்ள, குடும்பப் பாங்கான இந்த மூன்று குணம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளைத் தவிர குணம் பற்றி ஒரு வார்த்தையேனும் கண்டதுண்டா? எது சிறந்த குணம்? ஒவ்வொருவருக்கும் அது வேறுபட்டுக் கொண்டே இருக்கும். இன்னின்ன குணங்கள் என நம் குடும்ப குணங்களையே நம்மால் பட்டியலிட முடியவில்லை.
குடும்பப்பாங்கு என்பது சிக்கனம் என்று அர்த்தமா? விருந்தோம்பல் என அர்த்தமா? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என அர்த்தமா? என்ன அர்த்தம்? எது சிறந்த குணம்? அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதா? எல்லோருக்கும் உதவுவதா? பணம் சேர்த்து வைப்பதா? எது சிறந்த குணம்?
ஆக நம் குடும்பம் இன்னின்ன குணங்களை சிறந்த குணங்களாக கொண்டிருக்கிறது என்ற அறிவு முதலில் நமக்கு இருக்க வேண்டும். அந்தக் குணங்களைப் பூரணமாகக் கொண்ட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்பொழுது அங்கே சந்தோஷமும், நிறைவும் இருக்கும்.
ஆக வாழ்க்கைத் துணை நாம் நம் குடும்ப அமைப்பு முறையில் சிறப்பாக கருதும் சிறந்த குணங்களைக் கொண்டவராக இருந்தால் அங்கே மன நிறைவு இருக்கும். வாழ்க்கை நிறைவாக இருக்கும்.
அக்குணங்கள் இல்லாது போனால், வாழ்க்கையே வெறுமையாகத் தெரியும். பல மாடி வீட்டு ஏழைகளின் கதை இதுதான்.
பல கோடீஸ்வரர்கள் தற்கொலை செய்து கொள்ள முக்கியக் காரணம் இது போன்ற மன நிறைவு இல்லாமல் போவதே..
ஆக இந்த மூன்று செய்யுள்களில் வள்ளுவர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
முதலில் உன் குடும்பத்தின் சிறப்பை, அங்கே சிறப்பாய் கருதப்படும் குணங்களை அறிந்து கொள்.
அந்தக் குணங்கள் நிறைந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடு.
அதுவே மனம் நிறைந்த, புகழ் நிறைந்த, பெருமை நிறைந்த அனைத்தும் நிறைந்த வாழ்விற்கு ஆதாரம்.
இதை இந்த வயதில் படிக்கிறோம். நம்ம குழந்தைகளுக்காவது சரியான துணை தேர்ந்தெடுக்க உதவுவோம்.