வயாவிளான் மக்களின் ஒன்றுகூடல் -பிரான்சு 2018

1161

ஊர்கூடித் தேரிழுத்து மகிழ்ந்ததொரு பொற்காலம்.  அப்பொற்காலம் மீண்டும் மலர இக்காலத்தில் நாம் ஒன்றுகூட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆம்… ஊரெனும் தேரை நாம் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால்த்தான் ஊரில் நாம் ஒன்று கூடி தேரிழுத்து மகிழலாம்.

அத்தகையதொரு ஒன்று கூடலை கடந்த 2016 இல் வயாவிளான் மக்கள் ஒன்றியம் – பிரான்சு நடத்தி இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு மீண்டுமொரு ஒன்றுகூடலை அவ்வமைப்பு நடத்த இருக்கிறது. இம்முயற்சிக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிப்பதோடு மட்டும் நின்று விடாது பங்களிப்புகளையும் நல்க வேண்டும். இது எங்களது தட்டிக்கழிக்கக் கூடாத பொறுப்பு வாய்ந்த கடமையும் கூட.

கடந்த ஒன்றுகூடல் பல எழுச்சிகளை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்று கூடல் ஆகும். கடந்த ஒன்று கூடலின் பின் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் வயவை மக்களின் பார்வை வயவைப்பக்கம் திரும்பியது. புலம் பெயர் நாடுகளில் வயவையூரின் வளர்ச்சிக்கான அமைப்புகள் உருவாக்கம் பெற்றன.  வயவையூரில் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகள் வீச்சம் பெற்று விரைவு பெற்றன. அவை மேலும் விரிவாக்கம் பெற்று, வயவையின் சமூக நலமும் பொருளாதாரமும் புதிய பரிமாணமும் பரிணாமும் பெற எதிர்வரும் மே 27 இல் பிரான்சில் நடைபெறும் ஒன்று கூடல் அவசியமானதும் கட்டாயமனாதும் ஆகும்.

எமது கல்லூரியும் ஊரின் சில பகுதிகளும் மக்கள் பாவனைக்கு விடுபடத் தொடங்கிய போது இங்கிலாத்தில் வயாவிளான் நலன் புரிச் சங்கம் தோற்றம் பெற்று, எமது கல்லூரியின் மீள் கட்டுமானத்துக்கு பெரும் உதவிகளைச் செய்து வந்தது. இதை விட வேறு சிலரும் தனிப்பட்ட ரீதியாக நலத்திட்டங்கள் சிலதைச் செய்து வந்தனர். இவை அனைத்தும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை பிரான்சில் வயாவிளான் மக்கள் ஒன்றியம் தோற்றம் பெற்றது. தோற்றம் பெற்ற சில காலங்களில் ஒன்று கூடல் ஒன்றை நடத்தியது.

பிரான்சின் புறநகர்ப் பகுதிகளின் ஒன்றான பொண்டி நகரில் நடைபெற்ற இவ்வொன்று கூடலில் பிரான்சின் வெளி மாநிலங்களிலிருந்தும் பல வயவையூர் மக்கள் கலந்து கொண்டனர். இதைவிட சிறப்பம்சம் என்னவெனில் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்தும், ஸ்கண்டிநேவிய நாடுகளிலிருந்தும், கனடாவிலிருந்தும் பல வயவையூர் மக்கள் கலந்து கொண்டமை ஆகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்று கூடலின் நல்விளைவுகள் வயவையூரின் மீள் எழுச்சிக்கு வித்திட்டன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இவ்வொன்றுகூடலின் பால் ஈர்க்கப்பட்ட, இதர நாடுகளிலிருந்து வந்த வயவையூர் மக்கள், தங்கள் நாடுகளிலும் இவ்வாறான ஒரு அமைப்பை தங்கள் நாட்டில் நிறுவி அந்நாட்டில் வாழும் வயவையூர் மக்களை ஒன்றிணைத்தனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, சுவிசு போன்ற வயவியூர் மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் வயவையூர் அமைப்புகள் உருவாக்கம் பெற்றன. வயவையூர் மக்கள் குறைந்தளவில் வாழும் நாடுகளில் அமைப்புகள் உருவாக்கம் பெறாவிட்டாலும், அந்நாட்டில் வாழும்ல் வயவை மக்கள் அயல் நாட்டு அமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இவ்வாறு வெளிநாடுகளில் உருவாக்கம் பெற்ற அமைப்புகளின் கவனயீர்ப்புக் குவிவு மையமாகவும், புல அமைப்புகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் கள அமைப்பாகவும் வயவிளான் மக்களின் மீளெழுச்சிக்கான உதவுங் கரங்கள் அமைப்பு உருவாக்கம் பெற்றது.

வயவையூரில் குடியேறிய மக்களின் நடைமுறைச் சிக்கல்கள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், சமூக நலத் தேவைகளை கண்டு, கேட்டு அறிந்து, புலம் பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகளுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் உதவியுடன் அம்மக்களின் மீள் எழுச்சிக்கு உதவும் மகத்தான பணியைச் செய்து வருகிறது. அதாவது களத்துக்கும் புலம்பெயர் நாட்டுக்கும் இடையில் உறவுப்பாலமாகவும், மீளெழுச்சிக்கான செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் மூளையாகவும் உதவும்கரங்கள் அமைப்புச் செயற்பட்டு வருகிறது.

இத்தகு நல்லுருவாக்கங்களையும் எழுச்சியையும் தந்த ஒன்று கூடல் சில சொல்லடிகளையும் எதிர்கொண்டது. அதன் பின் உள்ள அரசியல்களை மக்கள் நன்குணர்ந்து புறந்தள்ளி மீளெழுச்சிப் பணியில் கலந்து உழைக்கின்றார்கள் எனில் அச்சொல்லடிகளை ஒன்று கூடலுக்குக் கிடைத்த நாவூறுக் கழிப்புகளாகவே நாம் கொள்ள வேண்டும்.

அச்சொல்லடிகளில் சில ஆரோக்கியமானவையாகவும் இருந்தன. அவை உள்வாங்கப்பட்ட உள உரண் உயர்ந்த செயற்பாட்டாளர்களையே இன்று நாம் காண்கின்றோம்.

இதே போன்ற இன்னும் பல நல்லுருவாக்கங்களை வயவை மண் காண வேண்டும். அதற்கு அதே நுண்ணறிவுடனும், உணர்வுடனும் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒன்று கூடலும் பெரு வெற்றி அடைய நாம் அனைவரும் திரள வேண்டும்.

எம்மூருக்கென்று தனித்துவமான சில கலை வடிவங்கள் உண்டு. சில பல பண்புகள் உண்டு. அவற்றை எல்லாம் ஒவ்வொன்று கூடல் அரங்கு கொண்டிருக்க வேண்டும். ஒட்டு மொத்தத்தில் எம்மூர்த் திருவிழாவை கலைகளின் தலைநகரான பிரான்சு மண்ணில் நடைபெறும் ஒன்று கூடல் பிரதிபலிக்க வேண்டும், அந்தப் பிரதிபலிப்பில் எம்மூரில் விடியல் பிறக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோட்டில் அனைவரும் அணியாக வேண்டும். உறுதி கொள்வோம். உளம் மகிழ்வோம்.