மொழிப் பயிற்சி – 11:- பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!

469

கவிக்கோ.ஞானச்செல்வன்

பேசும்போதும், எழுதும்போதும் சொற்றொடர்கள் அமைப்பதில் “அத்து” எனும் சாரியைக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. ஒரு திருமடத்தின் தலைவரைக் (அதிபர்) காண புலவர் பலர் வந்தனர். இறுதியாக வந்தவர் சோழநாட்டின் கடைமடைப் பகுதியைச் சார்ந்தவர். மடாதிபதி சற்றே கேலியாக அந்தப் புலவரை நோக்கி, “வாரும் கடை மடையரே” என்றார்.
புலவர் என்ன ஒன்றும் அறியாதவரா? “வந்தோம் மடத் தலைவரே” என்று திருப்பியடித்தார்.

இப்படி இருபொருள் தோன்றத் தமிழில் நிரம்பச் சொல்லலாம்.
மடத்தலைவர் என்று சொல்லாமல், மடத்துத் தலைவரே என்று சொல்லியிருந்தால் பொருள் நேராக அமையும். இதற்கு “அத்து” என்ற சாரியைப் பயன்படுகிறது. சார்ந்து வருவது சாரியை. இதற்குத் தனியே பொருள் இல்லை.

மனம் என்பது தனித் தமிழ்ச் சொல். (மனசு, மனது வேறு ).
இச்சொல்லுடன் “இல்” உருவு சேர்த்தால் மனத்தில் என்று எழுத வேண்டும். ஏன்?
மனம் + அத்து + இல் என்று இடையில் அத்துச் சாரியை சேர்க்க வேண்டும் என்பது இலக்கண விதி.
குளம் + இல் என்பதும் குளத்தில் (குளம் + அத்து + இல்) என்றுதானே சொல்லப்படுகிறது.
பணத்தில் பாதி என்று சொல்லுகிறோம்.
இங்கு பணம் என்ற சொல்லுடன் அத்துச் சாரியை இணைந்துள்ளது.
ஆக, தமிழில் “அம்” என்று முடியும் பல சொற்களுடன் அத்துச் சாரியைச் சேர்த்தல் என்பது வழக்கத்தில் உள்ள இலக்கண விதியே.
இன்னும் வேண்டுமா?

– குலம் – குலத்தில்
– நலம் – நலத்தில்
– இனம் – இனத்தில்
– வலம் – வலத்தில்

இப்படி எல்லாவற்றிலும் “இல்” உருபு சேர்த்தால் “அத்து” சேர்வதைப் பார்த்தோம். அத்துச் சாரியை இல் உருபோடு மட்டுமே வருவதா?
இல்லை.
“உடன்” எனும் உருபு சேர்த்துப் பாருங்கள்.
– நலம் + உடன் = நலத்துடன்
– சினம் +உடன் = சினத்துடன்

இன்னும் முன் கூறிய பணம், குணம், மனம், மணம் எச்சொல்லோடும் உடன் சேரும்போது அத்துச் சாரியைத் தோன்றும். அத்துச் சாரியையின் அவசியத்தை உணர இவை போதும்.

சொற்றொடர் முடித்தல் வாக்கியங்களை முடிக்கும்போது ஒருமை, பன்மை மாறாதிருத்தல் வேண்டும் என்பதோடு ஐம்பால் வினைமுடிவுகள் பொருத்தமாக அமைத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக:-
– அவன் நல்லவன் அல்லன் (ஆண்பால்)
– அவள் நல்லவள் அல்லள் (பெண்பால்)
– அவர் நல்லவர் அல்லர் (பலர் பால்)
– அது நல்லது அன்று (ஒன்றன் பால்)
– அவை நல்லவை அல்ல (பலவின் பால்)

காலப்போக்கில் இந்த இலக்கணத்தைப் பலரும் பொருட்படுத்துவதில்லை. அல்லது மறந்து போயினர் என்று சொல்லலாம்.
எல்லா பால், இடங்களிலும் நாம் இப்போது பயன்படுத்தும் ஒரே சொல் “அல்ல” என்பது மட்டுமே.
– நானல்ல
– அவரல்ல
– அதுவல்ல
– அவையல்ல
என்றுதான் பேசுகிறோம், எழுதுகிறோம்.
இல்லை, அல்ல இன்மைப் பொருளை உணர்த்த மட்டுமே இல்லை எனும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

புத்தகம் மேசை மீது இல்லை – இது சரியான வாக்கியம்.
“நான் அப்படிப்பட்ட மனிதன் இல்லை” – இது பிழையுடைய வாக்கியம்.
இது “நான் அப்படிப்பட்ட மனிதன் அல்லன்” என்று இருந்தால் சரியாகும்.
– மரத்தில் காய்கள் இல்லை
– வயிற்றுக்குச் சோறு இல்லை
என்பன போன்று இன்மைப் பொருளை உணர்த்தவே இல்லை எனும் சொல் பயன்பட வேண்டும்.

“இன்று பள்ளி இல்லை” என்பது பிழை. “இன்று பள்ளிக்கு விடுமுறை” என்பதே சரியானது.
“அல்லன்”, “அல்லள்” என்பனபோல் “அல்லை” எனும் சொல்லும் உயர்திணைப் பயன்பாட்டில் நம் இலக்கியங்களில் காண முடியும்.
மந்தரையிடம் கைகேயி உரைக்கின்றாள்:-
“எனக்கு நல்லையும் அல்லை என் மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை தருமமே நோக்கில்,
உனக்கு நல்லையும் அல்லை.”
என்று முன்னிலை இடத்தில் வந்து நல்லவள் ஆகமாட்டாய் எனப் பொருள் தந்தது.

தமிழ் வளரும்…..