முள்ளிவாய்க்கால்

204

என் இரு விழிகள்,
புதைகுழிகள்…
கோரங்களின் விம்பங்கள் சுவைத்த,
சவக்குழிகள்…

சிதறி வீழ்ந்த உடல்களுக்குள்
பதறிப் பதுங்கிய உயிர்களும்..,
இரத்தக் கவசமான
இறுதிச் சுவாசங்களும்..,
இன்னமும்
விழித்திரைக்குள்
விரிந்திருக்கும்
கொலைக்களப் பதிவுகள்…

உணவும் உறக்கமும்
அந்திமக் கணங்களில்
இல்லையென்றாக,
இயற்கை உபாதை கூட
இயலாதென்றான
அந்தக் கணங்கள்,
காலப்பக்கங்களின்
இரத்தக்கறைப் பக்கம்.

பூமிப்பந்தின் அந்திமம்வரையில்,
ஒரு புள்ளி நிலத்திற்கூட,
இனி எக்காலமும்
அக்கொடுங்காலம்
திரும்பிடக்கூடாது.

தமிழ் உள்ளங்களே!

கொன்றவர்களுக்கான நீதியைக்
காலம், தானே கொடுக்கட்டும்.
ஆனால்,
எம்மக்களுக்கான
நிதியைத் தின்றவர்களை,
நாம் தட்டிக் கேட்கவேண்டாமோ?

பதுக்கிக் கனவான்களானவர்களே,
உரிமைப் போராட்ட நிலத்தில்
உணவுக்குத் திண்டாட,
சேகரித்த நிதிகளில்
தின்றாடிக் கொண்டாடும்
நீங்கள், இழிபிறவிகள்…
உங்களை நக்குவோர்,
ஈனப்பிறவிகள்…

நிதிகளைச் சேகரித்தவர்களே,
உங்கள் வம்சத்திற்குப்
பழிகளைச் சேகரிக்காதீர்கள்.

உங்களுக்குச் சேராத
ஒவ்வொரு சதமும்,
உங்கள் பாவக்கணக்கிற்
கோடிகோடியாய்க் கூடிச்,
சாபங்களாய்த் திரும்ப வரும்.

அதன் பின் வருந்தாமல்,
அது வரையில் காத்திராமல்,
மனம் மாறி விடுங்கள்.

வாழ்ந்த நிலத்தில் சிதைந்து
சிதைந்த நிலத்தில் வாழும்
மரணம் மிச்சம் வைத்த உயிர்களின்,
மனங்களும் பசிகளும் ஆறிட வேண்டும்.

அவலத்தில் மரித்த அனைத்து உயிர்களுக்கும்,
அஞ்சலிகள்!!!

jegaans.blogspot.it/2018/05/blog-post.html?m=1