1990 ஜூன் பிற்பகுதி என்று ஞாபகம். பழக்கப்பட்ட சத்தம் என்றாலும் பதட்டத்துடன் ஓடுவது வழக்கத்துக்கு அமைய, அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்ட வேட்டு “வயவை மண்ணை எம் பாதம் தொடுவதுக்கு வைக்கப்பட்ட வேட்டு” என்பதை அறியாமல், “ஆமி வெளிக்கிட்டானாம்” என்றபடி ஓடத் தொடங்கினோம்.
அதன் பின் பல ஊர்களினூடு தொடர்ந்த ஓட்டம் வெளிநாடொன்றில் வாழ்வோட்டமாக மாற்றம் பெற்றது. அந்த ஓட்டத்தில் ஊரைப் பற்றிய நினைப்பு பலருக்கு நித்திரையாக இருந்திருக்கும். அடிக்கடி அது விழித்தாகும் “பெரிசு”, “பழசு” என்று பட்டம் கட்டப்பட்டு விடும் என்ற காரணத்தால் வெளிக்காட்டாமல் இருந்திருப்போம்.
இதை எல்லாம் உடைத்து ஊரைப் பற்றிய நினைப்பு உலவக் காரணமானது காணி விடுவிப்பு அறிவிப்பு. அதன் பின் “எங்கள் காணிகளை நாங்கள் காண்போமா” என ஒவ்வொருவரும் ஏங்கி இருப்போம். அவ்வேக்கத்தை அதிகமாக்கும் அறிவிப்பு அண்மையில் வந்தது.
வயாவிளான் தெற்கு ஞானவைரவர் ஆலயமும் அதனை அண்டிய பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் எம் அயலூரான குரும்பையூர் மறுமலர்வு எம்முன் வந்தாடும். கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமெனும் முதுமொழிக்கமைய குரும்பசிட்டி முத்துமாரியம்மன் ஆலயம் குரும்பையின் மறுமலர்வுக்கு மையப்புள்ளியானது.
முதலில் வழிபாட்டுக்கு அனுமதி. பின் திருவிழா அனுமதி. பின் நாளாந்த பூசைக்கு அனுமதி.. பின் ஆலய ஈர்ப்பு விசை அழைத்து வந்த மக்கள் குடியேற்ற அனுமதி.. அம்மன் அருளால் அடர்த்தியான குடிப்பரம்பல். மேலும் பகுதிகளி விடுவிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.. இவ்வாறு படிநிலை கொண்டது குரும்பையின் மறுமலர்வு.
இதே படிநிலையில் ஞானவைரவர் ஆலயம் தற்போதைய இயங்குதளம். அந்தப் புலம் தினமொரு நிறமென வனப்பாக மாறும் முகநூல் அலங்காரம் எங்கள் ஊருக்கு நாம் குடிபுகக் கட்டிய தோரணம்.
ஆம்.. ஞானவைரவரின் பால் கொண்ட பற்றால் அண்டிய பகுதிகள் வயவைக்குடிகளால் நிரம்பும். கொஞ்சம் கொஞ்சமாக அயல் குறிச்சிகளும் எம் கை சேர்ந்து வயவையூர் மறுமலர்வு பெறும்.
வயவையூரின் மறுமலர்வுக்காக முன்னின்றும் பின்னின்றும் உழைக்ப்போருக்கு நன்றிகலந்த பாராட்டுகளை வழங்குவதோடு அவர்களை பலப்படுத்த எல்லோரும் கைகோர்க்க உறுதிகொள்வோம்.