மானம்பிராயான் வழிபாட்டில் குறைந்தளவு மக்கள் கலந்து கொள்வதன் பின்னணி – 2

195

வயவையூர் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் ஆண்டவன் அனைவருக்குமானவன்; ஆலயம் பொதுவானது எனும் கோட்பாடுகள் மறக்கப்பட்டன.

வயவர்களின் மானம்பிராயான் என்பதை மறந்து, பிற்போக்குச் சிந்தனையுடன் குறித்த சாதிகளைச் சேர்ந்த வயவர்களுக்கான ஆலய உரிமைகள் மறுக்கப்பட்டன.

வெளிவீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட அவர்கள் அமைதி பேணல் போர்வையில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆண்டவன் அடியார்கள் என்பதை மறந்து ஒரு வித அருவருப்புடனும் மேட்டுமைக் குடி மனப்பாங்குடனும் ஆலய முன்றலில் அவர்கள் நடத்தப்பட்டனர்.

வலிந்து திணிக்கப்பட்ட ஏற்றத் தாழ்வு முறையினால் வறுமையின் பிடியில் அல்லலுற்ற அவ்வயவர்களைத் தீண்டத் தகாதவர்களாக்கிப் பிரசாதங்கள் பிச்சை போடுவது போல் வழங்கப்பட்டன.

இவற்றை எல்லாம் எவரேனும் மறுப்பார்களேயானால், ஆலய பரிபாலன சபை வரலாற்றை ஒரு முறை புரட்டிப் பார்க்கலாம்.

ஆலயத்திலிருந்து ஒதுக்கப்பட்ட வயவர்களுக்காக உரிமைக் குரலெழுப்பி பரிபாலன சபை பதவியிலிருந்து விலகிய நிகழ்வுகள் ஆலய வரலாற்றில் உண்டு..

இப்படி இருந்த சூழலின் சூடுகள் ஒதுக்கப்பட்ட அவ்வயவர்களை விட்டு விலகி இராது. பட்ட அடிகளும் அடைந்த வேதனைகளும் ஒதுக்கப்பட்ட அந்த வயவர்கள் நெஞ்சங்களில் இப்போதும் இருக்கும். ஏனெனில் அந்த விரும்பத்தகாத வடுக்களின் மேல் களிம்புகள் இன்று வரை பூசப்படவில்லை.

ஒரு வேளை அவர்கள் அதை மன்னித்து மறக்கத் தயாராக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்திய வயவர்கள் மாறி விட்டார்களா என்ற சந்தேகமும், எங்களை ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கமும் அவர்களுக்கு இருக்கக் கூடும்.

எனவே, இறங்கிப் போக வேண்டியவர்கள் இறங்கிப் போய்ப் பழகி ஒதுக்கப்பட்ட அம்மக்களின் மனத் தழும்புகளுக்கு மருந்திட வேண்டும். சந்தேகமும் தயக்கமும் களையப்பட வேண்டும்.

ஒதுக்கப்பட்ட மக்கள் மற்றவரிடும் மருந்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். சந்தேகத்தையும் தயக்கத்தையும் கைவிட வேண்டும். 

பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் நிகழ்ந்து “நாங்கள் வயவர்கள்” எனும் கோட்டில் அணியாக வேண்டும்.

சாதி பேதம் எங்களூரின் நாசம் என்பதை அனைவரும் உணர்ந்து நம்பிக்கையூட்டப்பட வேண்டும்.

இது நிர்வாகத்தின் வேலை எனக் கடந்து செல்லாமல் ஒவ்வொரு வயவனும் மனமாற்றத்துடன் வேலை செய்தால் மானம்பிராயான் கண் திறப்பான்.

-தொடர்ந்து உரையாடுவோம்-