பாகம் – 4
யாப்பு – யாத்தல் (கட்டுதல்), தொழிற் பெயர். இங்கு யாக்கப்படும் (கட்டப்படும்)
செய்யுளுக்கு ஆகி வருதலால் தொழிலாகு பெயர்.
யாப்பு, செய்யுள், பாட்டு, பா, கவி – ஒரு பொருட் சொற்கள்.
எலும்பு, நரம்பு, இரத்தம், கொழுப்பு, தசை முதலியவற்றால் நமது உடம்பு கட்டப்பட்டிருத்தல் போல எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை முதலிய உறுப்புக்களால் கட்டப்பட்டதே செய்யுளாகும்.
செய்யுளின் முதல் உறுப்பான எழுத்தின் தொடர்ச்சியைப்பார்ப்போம்.
ஒற்று அளபெடை
ஒற்றெழுத்து மிகுந்து வருவது ஒற்றளபெடை ஆகும்.
எ.டு:-
அம்ம்பு, தின்ன்னு, எங்ங்கே.
முதல் எழுத்து, சார்பு எழுத்து:-
எழுத்துக்களில் ‘அ’கரம் முதல் ‘ஔ’காரம் வரையிலான 12 உயிர் எழுத்துக்களும்
‘க்’ முதல் ‘ன்’ வரையிலான மெய்யெழுத்துக்கள் 18-ம் முதல் எழுத்துக்களாகும்.
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பு எழுத்துக்களாகும்.
அதாவது இந்த எழுத்துக்கள் சார்ந்தே வரும். தனித்து இயங்கா.
இவற்றுள் குற்றியலுகரம் வெண்பா பாடல்களில் வரும்போது
நன்கு ஆராய்ந்து சொல்லும் நிலையில் உள்ளதால் அதனைப்பற்றி பிறகு விரிவாகக்
காண்போம்.
குறிப்பு: ஐகாரக்குறுக்கம் போன்றே, ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
ஆகியனவும் உள்ளன.
2. அசை
எழுத்திலிருந்து அமைவது அசை. சில பாடல்களில் இடைவெளியை நிரப்புவதற்காக அசைச்சொற்கள்
வரும். அது வேறு!
எ.டு: மாதோ, ஆல்.
“வண்டுகள் இனிது பாட
மருதம் வீற் றிருக்கும் மாதோ!”
இதில், மாதோ என்பது அசைச்சொல்.
அதே போல்
“இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து”
இப்பாடலில் ஆல் என்ற சொல் அசைச்சொல்லாக வந்துள்ளது. அதாவது இத்தகைய சொல்லிற்கு பொருள்
இருக்காது. இவை செய்யுளின் ஓசை நயத்தைக்காக்க வேண்டி வரும்.
ஆனால் நாம் பார்க்கப்போகும் ‘அசை’ என்பது செய்யுளிலில் கணக்கிடப்படும் அலகு (அளவீடு) ஆகும்.
அதாவது வார்த்தைகளை மாத்திரைகளுக்குத் தக்கப் பிரிப்பதை அசை என்போம்.
மரபுக்கவிதையில் அசை பிரிக்கத்தெரிந்தால் தான் அது எந்த வகைப்பா என்பதை அறியமுடியும்.
எனவே இந்த அசைப் பிரித்தலை கவனமாகவும், எளிமையாகவும் எப்படி என்று பார்ப்போம்.
அசை இரண்டு வகைப்படும்.
1. நேர் அசை, 2. நிரை அசை.
1. நேரசை:-
ஒரு குறில் எழுத்து அல்லது நெடில் எழுத்து தனித்தோ, அல்லது ஒற்றுடன்(புள்ளிவைத்த எழுத்துடன்)
சேர்ந்தோ வருவது வருவது நேரசை.
எ.டு:-
‘அ’ அல்லது ‘ஆ’ தனித்துவருதல்.
அல், ஆல், கண், நாள் என்று ஒற்றுடன் சேர்ந்து வருதல்.
கண்கள் – இந்த வார்த்தையை (சீர்) அசைப் பிரிக்கவேண்டுமாயின்
கண் | கள் எனப்பிரிக்கலாம்.
நேர்- நேர் = இதில் இரண்டு நேர் அசைகள் வந்துள்ளன.
2. நிரையசை:-
இரண்டு குறில் எழுத்துக்கள் சேர்ந்து வருதல், இரண்டு குறில் எழுத்துக்களோடு ஒற்றெழுத்து சேர்ந்து
வருதல், ஒரு குறிலையடுத்து ஒரு நெடிலும் அடுத்து ஒற்றும் சேர்ந்து வருதல் நிரையசையாகும்.
** இரு நெடிலோ, அல்லது நெடிலுடன் குறிலோ வர இயலாது.
நிரையசை”
எ.டு:-
படி – இரண்டு குறில்கள் சேர வருவது.
பணம் – இரண்டு குறிலை அடுத்து ஒரு ஒற்று வருவது.
சிவா – குறிலுடன் நெடில் சேர்ந்து வருவது.
சிறார் – குறிலுடன் நெடிலெழுத்து சேர்ந்து ஒற்றுடன் வருவது.
இவற்றையெல்லாம் எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?
ஒரு எளிமையான உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.
ஒரு வீட்டில் கணவன்( நெடில்), மனைவி(குறில்), கணவனின் தங்கை(குறில்), குழந்தை(ஒற்று) இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு இரு சக்கர வாகனத்தில் செல்லவேண்டுமாயின் எப்படி பயணிக்க வாய்ப்பு உள்ளது?
குழந்தை (ஒற்று) தனித்து இயங்க முடியாது.
நேர் அசை=> 1. கணவன் (நெடில்) மட்டும் செல்லலாம்.
2. மனைவி (குறில்) மட்டும் செல்லலாம்.
3. கணவனுடன் (நெடில்) குழந்தை (ஒற்று) செல்லலாம்.
4. மனைவியுடன்(குறில்) குழந்தை(ஒற்று) செல்லலாம்.
நிரை அசை => 1. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்) செல்லலாம்.
2. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்) செல்லலாம்.
3. மனைவியும்(குறில்), கணவனும்(நெடில்), குழந்தையும் (ஒற்று) செல்லலாம்.
4. மனைவியும்(குறில்), கணவனின் தங்கையும்(குறில்), குழந்தையும்(ஒற்று) செல்லலாம்.
** கணவனுடன், மனைவியோ(குறில்) அல்லது கணவனின் தங்கையோ(குறில்) செல்ல முடியாது.
அதாவது குறிலுக்குத்தான் முதல் உரிமை. (அட, டிராபிக் ரூல் நால்லாருக்கே!)
இதையே யாப்பருங்கலக்காரிகை,
“நெடில் குறில் தனியாய் நின்றும் ஒற்றடுத்தும்
நடைபெறும் நேரசை நால்வகையானே!”
என்று நேரசைக்கும்
“குறிலிணை குறில் நெடில் தனித்தும் ஒற்றடுத்தும்
நெறிமையின் நான்காய் வகும் நிரை யசையே”
என்று நிரையசைக்கும் இலக்கணமாக எடுத்தியம்புகிறது.
மற்றொரு எளிமையான உதாரணத்தைப் பார்ப்போம்.
“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். ”
– திருக்குறள் : 282
இதில் முதல் அடி(வரி)யில் 4 சீர்களும்(வார்த்தை), இரண்டாம் அடியில் 3 சீர்களும் வந்துள்ளன.
இதை எப்படி அசைப்பிரிக்கலாம்? பார்ப்போமா?
உள்| ளத்| தால் உள்| ளலும் தீ| தே பிறன்| பொரு| ளைக்
நேர்| நேர்| நேர் நேர்| நிரை நேர்| நேர் நிரை| நிரை| நேர்
கள்| ளத் | தால் கள்| வேம் எனல்.
நேர்| நேர் | நேர் நேர்| நேர் நிரை.
சரி, இன்றைக்கு அசை பிரிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டீர்கள் தானே! திருக்குறளை எடுத்து அதிலுள்ள வெண்பா
பாடல்களை அசை பிரித்துப்பாருங்கள். அடுத்த பாடத்தில் ‘சீர்’ பற்றி படிப்போம்.