“முள்ளாகிப் போன பூ”பாளம்

முப்பெரும் தேவியரும்
உத்தரிய மாதாவுடன் கைகோர்த்து
உலாவந்த புனித பூமி வயவை!

பொன்விளையும் பூமியெனப் புகழ்பெற்ற 
செம்மண் தாயகத்தில்,
முட்கள் முளைத்ததேன்..?

வயவை அன்னையின் தங்க மேனியில்… 
முட்கள் முளைத்ததேன்..?

முத்தமிழ் ஓங்கிய மண்ணில்
முட்கள் முளைத்ததேன்..?
முருகா நாம் செய்த பாவமென்ன?
முப்புரம் எரித்த சிவனாரே
நாம் செய்த பாவமென்ன?

முள்முடி தரித்த யேசு பிரானே
நாம் செய்த பாவமென்ன?
பாவப்பட்ட எமக்காய்
தேவனே நீ சுமந்த முட்கள்
எம் ஊரில் வீழ்ந்ததுவோ?

மூதேவி வலாயம் செய்தது போதும்
பகையே 
முழு நிலத்தையும் விட்டு விலகு நீ! -இனி
சீதேவி வாலாயம் செய்ய விடு

சிங்கபாகு
மகவே !
வேட்டொலி போட்டு நீயாடிய 
ஆட்டம் போட்டது போதும் பகையே,

சலங்கையொலியும் 
சங்கொலியும் கேட்ட எம்மூரில்!
மீண்டும் அதைக் கேட்க விடு படையே!

முகாரி இராகம் இனி வேண்டாம்- எமை 
பூபாளம் இசைக்க விடு சிங்கபாகு மகவே!

(மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த மகன் சிங்கபாகு ஆகும்.)

 

– வயவையூர் அறத்தலைவன்-