ஆறும் அறுபதும்.. காலக் கணக்குகளும்… வாழ்க்கை நோக்குகளும்

ஆறு காலங்கள், ஆறு பருவங்கள், ஆறு வாழ்க்கைப் பகுதிகள் அப்படின்னு பார்த்த நாம ஆறோட இன்னும் பல பரிமாணங்கள் நம் வாழ்க்கையில் கலந்து ஆறு (வழி ) காட்டுவதைப் பார்க்கலாம்.
 
எத்தனை நீரென்றாலும் ஆற்று நீர்தான் நல்ல நீர்
எத்தனை தெய்வமென்றாலும் ஆறுமுகன் தான் தமிழ் தெய்வம்
 
அவனுக்கு படை வீடுகளும் ஆறு
 
ஆறு அறிவுகளும் படைத்தவன் தானே மனிதன்.
 
ஆறின்றி ஆருண்டு?
 
தேன் கூட்டின் அறுகோண வடிவம் வேற கண்முன் வந்து கண்ணா மூச்சி ஆடுது.
 
உயிருக்கு ஆதாரமான கரிமத்தின் அடிப்படையும் ஆறு புரோட்டான்கள் எலெக்ட்ரான்கள் கொண்ட அமைப்புதான்.
 
உலக எரிபொருளின் அடைப்படை மூலக்கூறு பென்சீனின் அடிப்படையும் ஆறு..
 
அட்ட போங்கப்பா.. ஆறு ஆறுன்னு யோசிக்க யோசிக்க ஆறாம சூடா எண்ணங்கள் வந்துகிட்டே இருக்கே…
 
ஆறு மனமே ஆறு – அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
 
அப்படின்னு இப்ப பாடறப்ப, புதுச் சந்தோசம் கிடைக்கிறதே..
 
அதனால ஆறு என்பதின் அடிப்படைய பலமா ஆராய வேண்டியதிருக்கு,
 
 
 
 
 
முதலில் சொன்னதை கொஞ்சம் அங்க இங்க தட்டி ஒடுக்கெடுத்து டிங்கரிங் செய்து மீண்டும் தெளிவாக….
 
 
ஒரு நாளின் காலம், ஒரு ஆண்டின் பருவம், ஒரு மனிதனின் பருவங்கள் எனப் பிரிச்சு மேய்கிறேன்.
 
 
 
ஒரு நாள் – ஒரு வருடம் – ஒரு வாழ்க்கை!
 
 
காலம் காட்டும் இவை மூன்றும் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை. எப்படிப் பேரண்டம் ஒழுங்கற்றது போலத் தோன்றினாலும் ஆழ்ந்து ஆராய்ந்தால் எப்படி ஒரு ஒழுங்கு நியதி அமைந்திருக்கிறதோ அப்படி இந்தக் கால அமைப்பிலும் ஒரு ஒழுங்கு அமைப்பு உள்ளது.
 
 
 
ஒரு நாளை இரண்டிரண்டு மணி நேரமாக 12 ஆக பிரிக்கலாம்.
 
ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரிக்கலாம்
 
ஒரு வாழ்க்கையை 10 ஆண்டுகள் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கலாம்
 
 
 
ஒரு நாளில் இரவு – பகல் என இரண்டு பகுதிகள்
 
ஒரு ஆண்டில் உத்தராயணம் தட்சிணாயனம் என இரு பகுதிகள்
 
ஒரு வாழ்க்கையில் கர்ம வாழ்க்கை – தர்ம வாழ்க்கை என இரு பகுதிகள்
 
 
 
ஒரு நாளில் காலை நண்பகல் மாலை முன்னிரவு நள்ளிரவு பின்னிரவு என 6 பிரிவுகள்
 
ஒரு வருடத்தில் பின்பனி, வசந்தம்(இளவேனில்), கோடை (முதுவேனில்), கார்(மழை), கூதிர்(பின் மழைக் காலம்), முன்பனி என ஆறு பருவங்கள்
 
ஒரு வாழ்க்கையில் குழந்தை, இளமை, நடுத்தரமனிதன், முழுமனிதன், பெரியவர், தெய்வீகம் என ஆறு பருவங்கள்
 
 
 
இவ்வளவு மட்டும் தானா? இன்னும் நுணுக்கமான ஒற்றுமைகள் உண்டு.
 
 
முதல் காலகட்டம் – காலை – குளிர்காலம் – குழந்தைப் பருவம்
 
நாள் பிரிவு : காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை . விழித்து உடல்சுத்தி செய்து நம் உடல்பேண வேண்டிய காலம்
 
வருடப் பிரிவு : தை மாதம் – பின்பனி – குளிருக்கு வாடைக்காற்றுக்கு நம் உடலை பேணிக்காக்கும் காலம் அறுவடை முடிந்து நமைக் காக்க களஞ்சியங்கள் நிறைந்துள்ள காலம்,
 
வாழ்க்கைப் பிரிவு : 0- 10 வயது வரை. நம்மை பெற்றோரும் மற்றோரும் பேணும் காலம். குழந்தைப் பருவம்
 
 
இரண்டாம் காலகட்டம் – முன்பகல் – வசந்தம் – இளமைப் பருவம்
 
நாள் பிரிவு : 8:10 மணிவரை உணவுண்டு நம் தொழிலுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டு போய் தொழில் ஆரம்பிக்கும் காலம்,
 
வருடப் பிரிவு : மாசி மாதம் – வசந்தத்தின் ஆரம்பம். வண்ண மலர்கள் பூத்துக்குலுங்க.. உலகே பசிமையாய் மாறும்
 
வாழ்க்கைப் பிரிவு : 10-20 வயது வரை.. கல்வி கேள்விகளில் தேர்ந்து தொழில் கற்று வளரும் காலம்.
 
 
மூன்றாம் காலகட்டம் – முற்பகல் – வசந்தம் – இளமைப் பருவம்
 
நாள் பிரிவு : காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை . உழைக்கும் காலம்.
 
வருடப் பிரிவு : பங்குனி மாதம் – வசந்தம் – வரப்போகும் கோடைக்கும் மாரிக்காலத்திற்கும் தயாராகும் காலம்,
 
வாழ்க்கைப் பிரிவு : 20- 30 வயது வரை.இளமைப் பருவம். திருமணம், மக்கட் பேறு என வசந்தங்கள் வாழ்க்கையில்
 
 
நான்காம் காலகட்டம் – நண்பகல் – கோடை – நடுத்தரப் பருவம்
 
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை மதிய உணவுண்டு மறுபடி முழு உழைப்பு செய்யும் காலம் (மதிய தூக்க நேரமல்ல)
 
வருடப் பிரிவு : சித்திரை மாதம் – கோடை. வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம்.
 
வாழ்க்கைப் பிரிவு : 30-40 வயது வரை.. நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை என கடமைகள் சுட்டெரிக்கும் காலம்
 
 

ஐந்தாம் காலகட்டம் – நண்பகல் – கோடை – நடுத்தரப் பருவம்
 
நாள் பிரிவு : 2:00 4:00 மணிவரை முழு உழைப்பு செய்யும் காலம் (மதிய தூக்க நேரமல்ல)
 
வருடப் பிரிவு : வைகாசி மாதம் – கோடை. வெயில் அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம். இதன் இறுதியில் தென்மேற்கு பருவ மலை ஆரம்பம்.
 
வாழ்க்கைப் பிரிவு : 40-50 வயது வரை.. நடுத்தர வயது. உழைப்பி குடும்ப மேன்மை என கடமைகள் சுட்டெரிக்கும் காலம். இதன் இருதியில்குழந்தைகள் வளர்ந்து உதவ தயார்
 
 
ஆறாம் காலகட்டம் – பிற்பகல் – மழை – முழு மனிதன்
 
நாள் பிரிவு : 4:00 6:00 மணிவரை வேலைகளை, கடமைகளை முடித்து இரவிற்குத் தயாராகும் காலம்.
 
வருடப் பிரிவு : ஆனி மாதம் – தென் மேற்கு பருவ மழை. .
 
வாழ்க்கைப் பிரிவு : 50-60 வயது வரை..முழு மனிதன். வாரிசுகள் மணம் முடித்து தொழில் ஆரம்பிக்கும் காலம்.
 
 

ஏழாம் காலகட்டம் – மாலை –மழை – முழு மனிதன்
 
நாள் பிரிவு : 6:00 8:00 அமைதியான உறக்கத்திர்கு தயாராகும் காலம்.. நல்ல விஷயங்களை சிந்திக்க கேட்க வேண்டிய காலம்,
 
வருடப் பிரிவு : ஆடி மாதம் – மழைக் காலம். விதைப்பு நடக்கும் காலம். அதிகரித்து சூரியன் உச்சியைச் சுட்டெரிக்கும் காலம்.
 
வாழ்க்கைப் பிரிவு : 60-70 வயது வரை.. முழு மனிதன். மகன் பொறுப்பேற்றாயிற்று. நல் கருத்துக்களை சிந்தித்து தது குடும்பத்தில் விதைக்க வேண்டிய காலம்.
 
 
எட்டாம் காலகட்டம் – முன்னிரவு – பின் மழை – பெரியவர்
 
நாள் பிரிவு : 8:00 10:00 அமைதியாக உறங்க வேண்டிய காலம்.
 
வருடப் பிரிவு : ஆவணி மாதம் – பின்மழைக் காலம். அதாவது அடை மழைக் காலம். பயிர் வளரும். சேதமில்லாமல் பாதுகாக்க வேண்டிய காலம்.
 
வாழ்க்கைப் பிரிவு : 70-80 வயது வரை.. குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம், குடும்பம் வளர்வதைக் கண்டு மகிழும் காலம்

 
 
ஒன்பதாம் காலகட்டம் – இரவு – பின்மழை – மூத்தவர்
 
நாள் பிரிவு : 10:00 12:00 மணிவரை உறங்கும் நேரம்
 
வருடப் பிரிவு :புரட்டாசி மாதம் –தென்மேற்கு பருவமழையின் இறுதிக் காலம்
 
வாழ்க்கைப் பிரிவு : 80-90 வயது வரை.. முதியவர். தான் என்ற அகங்காரம் இன்றி அமைதியான வாழ்க்கை.
 
 

பத்தாம் காலகட்டம் – நள்ளிரவு – கூதல் காலம் –மூத்தவர்
 
நாள் பிரிவு : 12:00 2:00 மணிவரை ஆழ்ந்த உறக்ககாலம்.
 
வருடப் பிரிவு : ஐப்பசி மாதம் – வட மேற்கு பருவ மழை. . குளிர்காற்று அடிக்கும்
 
வாழ்க்கைப் பிரிவு : 90-100 வயது வரை..பெரியவர். அமைதியான உறக்கம் போன்ற வாழ்க்கை. .
 
 
பதினோராம் காலகட்டம் – அதிகாலை –கூதல் காலம் – முன்னோர்
 
நாள் பிரிவு : 2:00 4:00 உறக்கத்தின் இறுதிக் காலம்.
 
வருடப் பிரிவு : கார்த்திகை மாதம் – மழை குறைந்து குளிர் வளரும் காலம்.. முகில்களற்ற வானம். தீப காலம்
 
வாழ்க்கைப் பிரிவு : 100-110 வயது வரை.. தீபம் போல ஞானம் தோன்றும் காலம்
 
 

பனிரெண்டாம் காலகட்டம் – விடியற்காலை – குளிர் – முன்னோர்
 
நாள் பிரிவு : 4:00 6:00 உறக்கம் விழிக்கும் காலம். பிரம்ம முகூர்த்தம். தெளிவான மாசற்ற காற்று கிடைக்கும் காலம்.
 
வருடப் பிரிவு : மார்கழி மாதம் – குளிர் காலம். இறைவனின் மாதமாக அறியப்படுவது
 
வாழ்க்கைப் பிரிவு : 110-120 வயது வரை.. குடும்பம் மற்றும் சுய அமைதி நாடும் காலம், தெய்வமாய் வாழும் காலம். குழந்தை போன்ற பாதுகாப்பும் தேவை
 
 

 
குழந்தைக்கு உபநயனம் – வசந்த விழா (நம்ம ஹோலி, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம்)
 
திருமணம் – கோடை விழா (சித்திரைத் திருவிழா)
 
குழந்தைகளின் திருமணம் – ஆடிப் பெருக்கு.
 
அறுபதாண்டு நிறைவு – முன்னோர் வழிபாடு (மஹாளய அமாவாசை)
 
எண்பதாண்டு நிறைவு – தீபத்திருவிழா (தீபாவளி, கார்த்திகை தீபம்)
 
நூறாண்டு நிறைவு – அறுவடைத் திருவிழா (பொங்கல்)
 

 
 
காலமும் பருவமும் பின்னிப் பிணைய திருவிழாக்களும் சேர்ந்திருப்பது எவ்வளவு ஆழமான தத்துவம்.