நாள் : 88
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :8
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
விருந்தோம்பல் என்னும் வேள்வியைச் செய்ய முயற்சியே செய்யாதவர், தம் இறுதிக் காலத்திலே என்ன எண்ணுவார்கள்?
பரிந்து ஓம்பும் பற்று அற்றோம் என்று வருந்துவார்கள்.
அன்பும், பரிவும் கொண்டு அவர்களைப் பேணிக்காக்கின்ற பற்றுகளை, உறவுகளை, நண்பர்களை, சுற்றத்தை இழந்தோம் என வருந்துவார்கள்.
பிறர்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என பின்னொரு செய்யுளில் இதை அழுத்திச் சொல்லுவார் வள்ளுவர்.
விருந்தினராய் வருவோர்க்கு ஆதரவு அளிக்காதவன், தன்னுடைய இயலாக்காலத்தில் ஆதரிப்பாரின்றி அவதியுறுவான். வன் காரணமுண்டு. அவனுடைய சந்ததிக்கே விருந்தோம்பலின் அருமை தெரியாது. அவன் குடும்பத்திற்கே பாரமாகிப் போவான். அவன் ஆசையுடன் சேர்த்த செல்வத்தை அவனால் உபயோகப்படுத்த முடியாமல் போகும். அதனால் பின்னர் ஆசையுடன் சேர்த்த அந்தச் செல்வத்தின் மீதான பற்றும் அற்றுப்போகும்.
இன்று முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம் விருந்தோம்பல் இல்லாமையே அல்லவா? விருந்தோம்பலைக் கடைபிடித்தால் முதுமைக் காலத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.