👑இளவரசர் ஜோஜ் 👑 (PRINCE GEORGE)

எத்துணை பழைமையான பெயர் இந்தக் குட்டி இளவரசருக்கு!

பெயரில் “இளமை”யும் “புதுமை” யும் தேடும் தமிழருக்கு இங்கிலாந்தின் இளவரசரின் பெயர் பாடம் தருகிறது.👑

‘பழமை’யைப் பருகிப் பருகி இனிமை காண்பவர்கள் இங்கிலாந்துக்காரர்கள்.

முன்பள்ளிக்கு முதன் முதலாகக்(06/01/2016) காலடி வைக்கும் இளவரசரை ஒளிகொண்ட இவ் ஒளிப்படம் சுட்டி நிற்கிறது.

(PRINCE GEORGE was all set for his first day at nursery on 06/01/2016 with a rucksack on his back.)

நவீன உலகின் நாகரீகத் தொட்டிலில் அண்மையில் பிறந்த குட்டி இளவரசரின் இந்தக் கிழப்பெயர் எனக்கு எங்களின் முன்னைய புலர்வொன்றை நினைவில் கொண்டு வருகிறது.

‘யாழிசை’ என்றும் ‘குழலிசை’ என்றும் மகள்மாருக்குப் பெயர் சூட்டியனார் ஓர் வைத்தியப்பெருந்தகை.

எங்களுக்கு உடலமைப்பியல் விரிவுரையாளராகவும் (Anatomy Lecturer) மருத்துவப் பாடமும் தந்தவர்.

மகனுக்கு ‘இராசேந்திரன்’ எனப் பெயர் சூட்டினார்.

அடங்காப்பற்று மண்ணில் அன்று இருந்த பெருந்தமிழுணர்வாளர் சிலர் கூட அந்தப் பெயரை சீரணிக்கமுடியாமல் இருந்தனர்.

கிழட்டுப் பெயர் அவர் எனச் சிலர் முதுகின் பின்னேயும் சிலர் முகத்தின் முன்னேயும் கிண்டலும் செய்தனர்.

ஆனாலும்…

இலட்சியத்தில் இரும்பான அவர் தன் முடிவில் எந்தச் சிறுவிட்டுக் கொடுப்போ நெகிழ்ச்சியோ இல்லாமல் இராசேந்திரச் சோழனின் பெயரை தன் ஏகபுத்திரனுக்குச் சூடி அழகு பார்த்தார்.

தமிழ் மீது தீராக்காதல் கொண்ட வைத்தியப்பெருந்தகையின் அந்த முன்னுதாரணச் செயற்பாட்டின் பின் சுற்றயலில் நிறைய சோழ மாமன்னர்களும், சோழப்பட்டத்து அரசிகளும், இளவரசர்களும், இளவரசிகளும் அவதாரம் எடுத்தார்கள்.

ஆம்,

“செயலே சிறந்த சொல்”

(இராசேந்திரச் சோழன் கி.பி. 1012-1044)