போரில் அறம் காத்த பெருவீரன் தர்சன்

 

 

 

உருவாக்கம் – க.குவேந்திரன்

இருள் மட்டுமே துணையாகவிருக்கும் புலம்பெயர் அகதியின் இரவு வேலைப்பொழுது ..! பாரஊர்தியில் ஏற்றிச்செல்லும் பாரங்களைப் போலவே மனதின் பாரமும் அதிகமாயிருந்தது . பணி நிமிர்த்தம் போகும் இடம் வேறொன்று எனினும் என் மனம் மட்டும் தேசத்தின் நினைவுகளோடு தொலைந்தவற்றைத் தேடி பயணப்பட்டிருந்தது.

“தங்க மாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள் நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள் “ என்ற தேனிசையின் பாடல் என் காதுகளில் நுழைந்து கண்களில் கண்ணீரைப் பிரசவித்துக்கொண்டிருந்தது . ஏதோ கடமை தவறியதான ஓர் உணர்வு கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தது
அண்மைக்காலமாக மிகுந்த மனவழுத்தத்திற்கு உள்ளாகி உடைந்து போயிருந்த எனக்கு இன்னும் ஊசி கொண்டு என் உயிரம்புகள் மீது குத்துவதான உணர்வை இப்பாடல் தந்துகொண்டிருந்தது .

பண்பட்ட நிலமிழந்து பத்தாண்டுகள் ஆனபின்பும் இன்றும் புண்பட்ட இனமழுது தீராத் துயரம் நீளும் நிலையிருந்தும் ஆங்காங்கே என் இனமிருந்து எழும் பிக்பொஸ் (Big Boss) புலம்பல்கள் மீது எனக்குள் அத்தனை கோவம் .

“ஆம் அவன் எங்கள் சகோதரன் தான் அவளும் எங்கள் சகோதரி தான் ஒரு போட்டி நிகழ்ச்சிக்காக அயல் நாட்டிற்குச் சென்றார்கள் அவ்வளவு தானே எதற்கு அவர்களை எம் தேசத்தின் அடையாளமாக நோக்குகின்றீர்கள். அவள் தன் உணர்வுகளை வெளிக்காட்டும் போதும் அவன் தன் திறமைகளைக் காட்டும் போதும் எதற்காக இத்தனை கொந்தளிப்பும் பெருமிதமும். ஓ என் இனமே! என்னானது உனக்கு ? அவர்கள் என் இனச் சகோதரர்கள் அவ்வளவு தான் . அவர்கள் எங்கள் தேசத்தின் ஒட்டுமொத்த அடையாளம் அல்ல.”

இப்படியெல்லாம் என் சமூகத்தை நோக்கி எனக்கு நானே சத்தம் போட்ட படி வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த போது தான் அவரின் அழைப்பு என்னை நிலைப்படுத்தியது.

போராளி மருத்துவர் தணிகை!
அவரோடு பேசும் போதெல்லாம் எங்கள் தேசத்தெருக்களில் கைவீசி நடைப்பயணம் போகின்ற அனுபவம் எனக்கு கிடைத்துவிடும்.
பாலை,வீரை,ஈச்சை,உலுவிந்தை தொடங்கி எங்கள் உயிர் காத்த ஈசன்களின் வரலாறு வரை எங்களின் பேச்சு தொடர்ந்திருக்கும் . அவர் இப்போதும் தலைவன் வழிவந்த நல்ல மருத்துவனாகவே பயணிக்கிறார். ஆம் எங்கள் காவற் தெய்வங்களின் வரலாற்றை சாக விடாமல் சந்ததிக்கு கடந்துகின்ற உன்னத பணி அவருடையது.

அவருடைய அழைப்பை இப்பொழுது நான் ஏற்கிறேன்
அவுஸ்திரேலிய நேரம் இரவு 08.00 மணி..

அன்றும் இப்படியொரு முன்னிரவு தான்.. இரண்டாயிரமாம் ஆண்டின் முற் பருவகாலப் பொழுதின் இறுதிப்பகுதி . ஆம் ஓயாத அலை மூன்றென எழுந்த அடங்காத் தமிழன் பரம்பரை ஆனையிரவுப் பெருந்தளத்தை வெற்றிகொண்ட அதே ஆண்டு தான் . தமிழினத்தின் பெரு நிமிர்விற்கு நெற்றிப் பொட்டிட்டுக்கொண்டிருந்தது நிலவு.

நாகர்கோவில் முன்னரங்க காவலரண் அது

ஆம் 1995ம் ஆண்டு செப்டம்பர் 22 ம் திகதி சிங்கள இனவெறியரின் போர் விமானம் மத்திய மகாவித்தியாலயப் பாடசாலையின் மீது குண்டு வீசி எங்கள் பிள்ளைகள் முப்பத்தொன்பது பேரைக் கொன்றார்களே அதே நாகர் கோவில் தான்

பறவைகளின் சொர்க்க பூமியான வடமராட்சியின் கிழக்குப் பகுதியும் ,இயற்கை மண், மணல் வளமும் வரலாற்றுப் பூர்வீகக் குடிகளான நாகர்களின் வழித்தோன்றல்கள் நாம் எனபதற்கான அசைக்க முடியாத ஆதாரங்களையும் சான்றுகளையும் நாக வழிபாட்டு ஆலயத்தையும் சுடுமண் கிணறுகளையும் உடைய அதே நாகர் கோவில் தான்

தீருவார் என்றிகழ்ந்தவர் முன்பே பெருந் தீயெனப் பரவி பெரும்பகையழித்த எம் தீரரைத் தழுவிக் கொண்டிருந்த காற்றின் வெப்பம் தணியாதிருந்தது . மீட்டெடுத்த சொந்த நிலத்தை தக்கவைத்துக்கொள்வதற்கும் அபகரித்து விட்டோடிய நிலத்தை மீட்டெடுப்பதற்குமிடையிலான தன்மானப் போர் உருவேறியிருந்தாலும்
“வேழம் விழுங்கிய விளாம்பழம் போல” எம் சேனைப் படைகள் அரக்கர் படையை ஒன்றுமில்லாது செய்திருந்தன. மூச்சிழந்த மூக்கர் படைகளுக்கு ஒட்சிசன் ஏற்ற சிங்களம் திணறிக்கொண்டிருந்தது.

காவலரண்களில் ஆளணிகளின் தேவை கருதி எம் மக்கள் தம் பிள்ளைகளுக்கு துணையாக தோள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எல்லைப்படையாக, போர்உதவிப் படையாக, மருத்துவ முகாம்களில் மாணவர் படையாக என எமது மக்களின் பணிகள் விரிந்திருந்தன.
ஓயாத அலையாக எழுந்த புலிப் பிள்ளைகளோடு பேரணையாக எழுந்த எம் மக்களின் திரளில் தான் பெற்ற அத்தனை வெற்றிகளும் சாத்தியமாயின என்றால் மிகையாகாது .

அன்றும் அவ்வாறு தான் அந்தக் காவலரண்களில் காவல் காத்துக்கொண்டிருந்தவர்கள் எமது எல்லைப் படை வீரர்கள் பன்னிருவர். ஆங்காங்கே விழும் எறிகணைகளை விட களநிலமை சற்று அமைதியாகவே இருந்திருந்தது.
வழமையை விட தாமதமாகவே இரவு உணவை ஏற்றிவந்த உழவு இயந்திரம் உணவுப் பொட்டலங்களை வழங்கிவிட்டுச் செல்கிறது .

காவற் கடமையில் இருந்த எல்லைப்படை வீரர்கள் உணவருந்தத் தயாராகின்றார்கள். அவர்கள் அனைவருமே ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்
ஆம் விவசாயப் பெருமக்கள் வாழும் பசுமைப்பூமி விசுவமடுவைச் சேர்ந்தவர்கள் தான் அவர்கள் . இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் உறவுமுறை உடையவர்களாகவும் இருந்திருந்தார்கள். நிலவொளியின் வெளிச்சம் அவர்களுக்கு தங்கள் குடும்பங்களை நினைவுபடுத்தியிருக்க வேண்டும் .

நிலவொளியிருத்தி அம்மா தந்த பிடிச்சோற்றை , நிலாக்காட்டி தன் பிள்ளைக்கு சோறூட்டிய நினைவை,தன் மனைவியோடோ காதலியோடோ முற்றத்தில் நிலா ரசித்து கதை பேசிய தருணங்களை, தங்கையை, தந்தையை என ஏதோவொரு ஞாபகம் அவர்களுக்குள்ளும் வந்து போயிருக்க வேண்டும் எல்லோரும் வட்டமாக இருந்து ஒன்றாகச் சாப்பிடுட அமர்கின்றார்கள்.

கட்டளைப் பணியகத்தால் சரியான முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதும்
நித்தம் இடப்பெயர்வுகளுக்குள்ளும் விமான இரைச்சல்களுக்குள்ளும் கந்தகப் புகைக்குள் இயல்பு வாழ்வென வாழ்ந்தவர்களுக்கு களமுனை பெரும் அச்சத்தையோ மாறுபட்ட இடம் என்கின்ற புரிதலையோ வழங்கியிருக்கவில்லை.

உணவேற்றி வந்த உழவு இயந்திரத்தினையும் சற்று அலட்சியமாகவே உணவருந்த அமர்ந்த வீரர்களையும் எதிரியின் வேவு அணி பகலெனப் பரவியிருந்த பௌர்ணமி ஒளியில் அவதானித்திருக்க வேண்டும் .
சுற்றியிருந்த வீரர்கள் கட்டியிருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்து ஒரு வாயேனும் உண்டிருக்கவில்லை. எதிரி ஏவிய எறிகணைக் குண்டு அவர்கள் நடுவில் வீழ்ந்து வெடிக்கிறது.

எறிகணை விழுந்த இடமும் தொலைத்தொடர்பு சாதனங்களின் பதிலின்மையும் ஏதோ அசம்பாவிதம் நடைபெற்றதை ஊர்ஜிதம் செய்தன
களமுனை மருத்துவர்களான மேஜர் மாறன் அவர்களும் தணிகை அவர்களும் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு விரைகின்றார்கள் .

தன் மனைவியை , பிள்ளைகளை, குடும்ப உறவுகளை விட்டு எங்களுக்காக எல்லைக் காவலில் நின்ற எம் வீரர்கள் பத்து பேர் அதே இடத்தில் உண்ட சோறு தொண்டையில் இறங்கும் முன் இரத்த வெள்ளமாகிக் கிடந்தார்கள். பலத்த காயங்களோடு காணப்பட்ட இருவரை மட்டும் மருத்துவர்களால் காப்பாற்றி பின் தள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிந்திருந்தது.

மரணமும் ,இரத்தமும், சதைத் துண்டங்களும் களமுனை மருத்துவர்களுக்கு புதியனவையல்ல என்றாலும் சோற்றுப் பருக்கைகளின் மேல் சிதைந்து போயிருந்த அந்த வீரர்களின் மரணம்
மனதில் பெரும் காயத்தையும் எதிரி மேல் கோபத்தையும் உண்டுபண்ணுகிறது .
உணவருந்தும் போது உயிர்துறந்த அந்த உத்தமர்களின் உறைந்த குருதியோடு
மருத்துவர் மேஜர் மாறன் அவர்கள் தமது நிலைக்குச் செல்லாமல் நேராக களமுனை கட்டளை பீடத்தில் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் பளை , நாகர்கோவில் ஒருங்கிணைப்பு தளபதியாகவிருந்த லெப்.கேணல் தர்சன் அவர்களை நேரில் சந்திக்கிறார்.

தர்சன் !
அறிவும் ஆற்றலும் அழகும் ஒருங்கே இணைந்த மொத்த உருவம்
இன்று ரூ சிக்ஸ், ரூ சிக்ஸ்… என்று களமுனைகளில் அதிகம் உச்சரிக்கப்படும் யோகராசா யுகின் மனோ தனது ஆரம்பப்பள்ளியை யாழ் அச்சுவேலி சென் திரேசா பாடசாலையில் கற்கிறார்.அது பெண்கள் பாடசாலையானபடியால் தரம் ஐந்துக்கும் மேல் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில யாழ் பத்திரிசியார் ( St. Patrick ‘s College ) கல்லூரியிலும் தனது உயர் தரம் வரை தொடர்கிறார்.

பள்ளி நாட்களில் நடைபெறும் கணித விஞ்ஞான போட்டிகளில் எப்போதும் முதல் பரிசு இவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதாய் இவனுடைய ஆளுமை விரிந்திருந்தது. விளையாட்டுக்களிலும் இவன் சளைத்தவனல்ல. பேச்சுக்கு அதிகம் முக்கியமளிக்காமல் செயல்களை நிறைவேற்றுவதில் உள்ள வேகம் இவனை ஒரு தலைத்துவப் பண்பாளனாக அப்போதிருந்தே அடையாளப்படுத்தியிருந்தது.

அச்சுவேலியிருந்து தெல்லிப்பளைக்காண தினப் பயணத்தில் இராணுவ சோதனைச்சாவடிகளின் கொடுபிடியே ஆரம்பத்தில் இவனுக்குள் பெரும் அசதியையும் ஆத்திரத்தினையும் சிங்களப் படைகள் மேல் ஏற்படுத்தியிருந்தது எனலாம்.
அதன் பின்னர்
1983 இல் தமிழ்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட யூலைக் கலவரம் , இலங்கை இந்திய இராணுவங்களின் அடக்குமுறைகள் , தியாக தீபம் திலீபனின் வீரமரணம் உள்ளிட்ட அனைத்தும் இவன் மனதில் விடுதலைப் போருக்கான தீயை மேலும் மூட்டியிருந்தன.

1990 களில் முதலாம் கட்ட ஈழப்போர் முனைப்புப்பெற தன்னையும் ஒரு விடுதலைப்போராளியாக மாற்றிக்கொள்கிறார் தர்சன் .
இயல்பிலேயே கணித விஞ்ஞானப்பாடங்களில் ஏற்பட்டிருந்த ஆர்வமும் ஆற்றலும் தர்சனுக்கு வரைபடங்களைக் கையாள்வதிலும் , GPS, Compass கருவிகளை துள்ளியமாக இயக்குவதிலும் முதன்மையாளனாக வளர்த்தெடுத்தது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அத்தனை களமுனைகளிலும் இவனின் பாதமும் பதிந்திருந்தது.

குறிப்பாக பூநகரிக் கூட்டுத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது கனரக இயந்திரத்துப்பாக்கியுடன் சமராடியவன் அங்கு விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்ட ராங்கியினை அதன் பின்னரான நாட்களில் பொறுப்பேற்ற அணியுடன் இணைந்து அதனை இயக்குவதிலும் பயிற்சி பெற்றிருந்தான் . அதனை செலுத்தக்கூடிய ஓட்டுனராகவும் தர்சனின் ஆளுமை பரந்திருந்தது .

இவ்வாறு பல்துறைசார் ஆற்றல் மிகுந்த தர்சன் கனரக மோட்டார் அணியுடன் இணைந்து செயற்படத் தொடங்கி பின்னர் கேணல் கிட்டு பீரங்கி படையணியின் முன்னணித் தளபதிகளில் ஒருவராக வளர்ச்சியடைந்திருந்தான்.

களமுனைகளில் தர்சன் மோட்டார் ஒருங்கிணைப்பில் இருக்கிறார் என்றாலே போதும் களத்தில் நிற்கும் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் அத்தனை நம்பிக்கை பிறக்கும் . எதிரியின் உச்சந்தலையில் எறிகணை விழுத்துவதில் தர்சனுக்கு நிகர் தர்சனே . மூத்த தளபதிகளின் பெரும் நம்பிக்கைக்கு உரியவனாக பல வெற்றிச் சமர்களின் நாயகனாக விளங்கிய தர்சனின் போரியல் சாதனைப் பட்டியல்களை நீட்டிக்கொண்டே போகலாம் என்றவாறு
தணிகை தன் நினைவுகளைத் தொடர்கிறார்…

“ அண்ண நாங்கள் வேவு எடுத்து தாரம் அண்ண இதே போல ஒரு தாக்குதல நாங்கள் செய்ய வேணும் . எதிரி சாப்பிட்டுக்கொண்டிருக்கேக்க அவன்ட உச்சந்தலையில செல் போட வேணும் அண்ண”
உயிர் காக்கும் மருத்துவர் மாறனின் கண்கள் அவர் உடலில் படித்திருந்த இரத்தத்தைப் போலவே சிவந்திருந்தன. எதிரியை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கின்ற அவரின் கோபம் துப்பாக்கியின் முனை போலவே அவர் விடும் மூச்சில் சுட்டுக்கொண்டிருந்தது .

தம்மோடு துணைநின்ற மக்கள் படை வீரர்கள் பத்து பேரின் இழப்பு தளபதி தர்சனின் மனதிலும் பெருந்தீயை மூட்டாமல் இல்லை
மாறனின் கரங்களை இறுகப் பற்றுகிறார் தர்சன். அந்த இறுக்கம் அவர் சொல்லப்போகும் வார்த்தைகளின் உறுதியைச் சொல்லிக்கொண்டிருந்தன. “மாறன் கட்டாயம் இதுக்கு பதிலடி குடுப்பம்,இத விட பெரிய இழப்ப குடுப்பம் ,ஆனா அவன் செய்தது போல சாப்பிடும் போது வேணாம்,உலகுக்கே தர்மத்தைப் போதித்த புத்தனின் பிள்ளைகள் வேண்டுமானால் அறம் தவறிப் போகட்டும் , எமது மக்களுக்காக சத்தியவழியில் சாகத் துணிந்த நாங்கள் அறம் பிழைக்க வேண்டாம்” என்ற தர்சனின் வார்த்தைகள் பிரபாகரனின் பிள்ளைகளிடம் புத்தன் தர்மத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற செய்தியை உணர்த்திக்கொண்டிருந்தது .

கொத்துக்கொத்தாக கற்பிணிப்பெண்களையும் குழந்தைகளையும் முள்ளிவாய்க்காலிலே கொன்றொழித்த பௌத்த பேரினவாதத்தினையும்
போரில் அறம் காத்த எங்கள் புனிதர்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்.

04.11.2000 அன்று யாழ் கிளாலி காவலரண் பகுதி ஒன்றின் ஊடாக களநிலைகளை அவதானித்துக்கொண்டு வரும் போது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் நெஞ்சில் குண்டேந்தி லெப் கேணல் தர்சன் வீரச்சாவடைகிறார் . என்று சொல்லிமுடித்தவுடன்…..

தம்பி எங்கள் புனிதர்களின் வரலாற்றை உலகத்திற்கும் எங்கட தலைமுறைக்கும் நாம் கொண்டுசெல்ல வேண்டும் என்கின்ற தணிகையின் தளம்பிய குரலும் ஏதும் பேசாமல் அணைந்துவிட்ட தொலைபேசியும் அவர் கண்ணீரை எனக்கு விளக்கியது .. இன்னும் வேகமாக என்னைத் தயார்படுத்துகிறேன் . நா(ன்) ம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மீதமிருக்கிறது.
பயணங்களுடன்…

க.குவேந்திரன்