கப்பலேறிய வயவையூர் மானம்!

406

குறிப்பிட்ட காணொளி ஒன்றில் வயவையூரின் மானம் கப்பலேற்றப்பட்டுள்ளது.

நக்கலும் நையாண்டியும் கலந்து நாட்டு நடப்பை நச்சென்று போட்டு உடைப்பவை இவ்வாறான காணொளிகள். எந்த ஒரு நபரையும், எந்த ஒரு ஊரையும் குறிப்பிட்டுக் குத்துவதில்லை இவ்வகைக் காணொளிகள். பொதுவாகக் குத்துவார்கள். பொருத்தமானவர்கள் தாமகவே குத்திக் கொள்வார்கள். மற்றவர்கள் சிரித்து மகிழ்ந்து விழிப்படைவர். இதுதான் இவ்வகை காணொளிகளின் மரபு.

ஆனால் இந்தக் காணொளியில் வசாவிளானைக் குறிப்பிட்டுக் குத்தி உள்ளார்கள். வரம்பை மட்டும் அல்லாமல் மரபையும் மீறிக் குத்தியுள்ளார்கள். மலினமான அரசியலில் கூட,  “சம்மந்தர்” எனும் உண்மைப் பெயரை “பம்பந்தர்” என்று குறிப்பிட்டுத்தான் குத்துவார்கள். சட்டச்சிக்கலை தவிர்க்க என்பதையும் தாண்டி மரபாகவும் இது உண்டு. அவ்வகை மலின அரசியல் காட்சியிலும் கீழான ஒரு “பிரச்சாரக் காட்சியாகவே” இந்த காணொளி உள்ளது.

ஆம்..! இவர்கள் யாருக்காகவோ கீழிறங்கிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். எங்கள் ஊரைப்பற்றி எதுவும் தெரியாத, எங்கள் ஊருடன் எவ்வித உறவும் இல்லாத இவர்களுக்கு என்ன “தேவையோ” அதனைப் பெற்றுக்கொண்டு அல்லது பெறுவதற்காக இவர்கள் கீழிறங்கி வேலை செய்திருக்கிறார்கள். அதனால் அவர்களை நாம் கண்டுகொள்ளத் தேவை இல்லை.. ஆனால் இவர்களைக் கொண்டு இந்த “வேலை”யைச் செய்தவர்களுக்கு சிலவறரைச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

விட்ட இடத்தில் மக்கள் போய் குடியேறவில்லை என்கிறீர்கள். குடியேறிய மக்களுக்கு உலக வசாவிளான் அமைப்புகள் உதவவில்லை என்கிறீர்கள். வேற ஊராக்களுக்கு உதவுகிறார்கள் என்கிறீர்கள். உலக வசாவிளான் அமைப்புகள் எல்லாம் குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் உள்ளது என்கிறீர்கள்..

நீங்கள் உண்மையானவர்களாகவும் நேர்மையாளராகவும் இருந்தால் இதையெல்லாம் சுட்டிக்காட்டி திருத்த முயன்றிருக்க வேண்டும்.. ஒத்து வரவில்லையா தட்டிக் கேட்டிருக்க வேண்டும். அதற்கும் சரியாகவில்லையா.. பொதுச்சபையை கூட்டி கருத்துப் பரிமாற்றத்தை நிகழ்த்தி பெரும்பான்மை முடிவோடு ஒத்துப் போயிருக்க வேண்டும்.

  பொத்துச்சபை முடிவோடு உங்கள் மனச்சாட்சி இசைய மறுத்தால், அல்லது பொதுச்சபை கூட்டி உரையாட மறுத்தால் “இன்ன பணிகளை நீங்கள் செய்யவில்லை. நான் செய்ய ஆசைப்படுகிறேன். உங்கள் ஆதரவையும் உதவியையும் தாருங்கள் என்று இசைந்து செயலாற்றி இருக்க வேண்டும்.

அமைப்புகள் மறுத்தால்,   உங்கள் சமூக சேவை செய்யும் இயல்பு  உங்களை ஓதுங்கி இருக்க விடவில்லை என்றால்,  உங்கள் நிலையோடுள்ளோரோடு இணைந்து வசாவிளான் அமைப்புகள் செய்யாத வேலைத்திட்டங்களை நீங்கள் செய்து முடிக்க வேண்டும்..

 செயற்பாடுகளை ஆராய்ந்து வயவர்கள் தாங்கள் விரும்பிய பக்கம் வந்து நிற்பார்கள். அதை விடுத்து குற்றம் சாட்டிக் கொண்டு திரிவதும், கோழை போல் ஒழிந்து கொண்டு கீழ்த்தரமான முறையில் காணொளிகளை வெளிவிட்டு   அவதூறு பரப்புவது ஊருக்குத்தான் கேடு. இனிமேலாவது ஊருக்கு ஊறு விளைவிக்கும் செயல்களை செய்யாதீர்கள்.

செய்வீர்களேயானால், ஒன்றியம் பிறந்த மறு நாளே ஒன்றியத்தை அழித்துக் காட்டுகின்றோம் என்று வன்ம சபதம் ஏற்றவர்கள்,

மற்றும் ஒன்றியம் வேலை செய்யத் தொடங்க முன்னே இவங்க வேலை சரியில்லை என்று சொன்ன குழப்பவாதிகள் போல் நீங்களும் ஆகி விடுவீர்கள்.

இதைச் செய்தவர்கள் யார் என்பதை வெளிக்கொணரும் வலு இருந்தும் வயவன் இணையம் அதை செய்ய விரும்பவில்லை. ஏனென்றால், ஊருக்கு செய்ய வேண்டியவை நிறைய உண்டு.. அவை இன்னும் செய்யப்படவில்லை. செய்யப்பட வேண்டும்; நீங்களும் செய்வீர்கள் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.