அழகான இந்த ஒளிப்படம் எனைத் தொண்ணூறுகளின் மதியத்திற்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.
எங்கள் தங்கத் தாய்நிலத்தில் அங்கமாகிய ஒவ்வொரு ஊருக்கும் அல்லது ஒவ்வொரு பிரதேசத்திற்கும் நனிசிறந்த தனிச்சிறப்புக்கள் உண்டு.
அந்த வகையில் இவை வடமராட்சி மண்ணின் சிறப்பு உணவு வகைகள் ஆகும்.
பருத்தித்துறையின் ஓடைக்கரைத் தோசை போல பருத்தித்துறை வடையும் தனித்துவச் சுவை கொண்டது.
நடுவே இருக்கும் “புளுக்கொடியல்”ஐ விட ஏனைய அனைத்து பலகாரங்களும் வடமராட்சியில் இருந்து மணலாற்றுக்கு ஒரு குறித்த கால இடைவெளியில் மக்களால் அன்போடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு.
ஆங்கு ஒரு தங்ககத்தில் வைத்துச் சின்னஞ் சிறிய பைகளில் பிரித்து ஆளுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ பைகள் வீதம் சண்டை நடைபெறும் நேரங்களில் போராளிகளுக்கு வழங்கப்படுவதைப் பார்த்திருக்கின்றேன், சுவைத்திருக்கின்றேன்.
போராளிகளின் அகராதியில் இதற்கு “உலர்_உணவு” என்று பெயர்.
புகை கண்டு பகை தாக்கிடுவான் எனும் காரணத்தால் சமையல் செய்ய முடியாத வேளைகளில் ஏதோ ஒரு மர நிழலில் அல்லது மறைவில் சமைத்த உணவை போராளிகளில் கரங்களில் நேரத்துக்கு நேரம் சேர்க்க முடியாத காலங்கள் இருந்தன.
அந்த நேரங்களில் வடமராட்சி மண்ணின் அன்னையரின் திருக்கரங்களால் அருளப்பட்ட இந்த பலகாரங்களும் போராளிப் புனிதர்களின் பசி தீர்த்துத் தாயகப் பணிதனை தாமும் நிறைவேற்றியிருக்கின்றன.