ஏழலையில் அவதாரம் எடுத்து குமுறும் எரிமலையாய் எதிரி முன் எழுந்து நின்றவர் வரலாறு பென்னம் பெரியது.
சொற்களுக்குள் சிக்காத பெருவீரனின் காதைதனை முழுமையாகச்செப்பிடவொண்ணாததால் இடையிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்.
ஆம், கொடிய நோயினால் பீடிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முன்னர் சில காலம் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த கீர்த்திகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஓய்வு நிலையில் இருக்கவேண்டியவர் ஓயவில்லை.
வைத்தியசாலையில் இருந்த வண்ணமே நிர்வாக வேலைகளையும் கவனித்தவாறே இருந்தார்.
தமிழீழ படைத்துறையின் தொழில்நுட்ப, எந்திரவியல் வளர்ச்சிக்காக அதியுயர் மதியுகம் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருந்த அவரது பணிதனை ஆற்ற யாரும் இல்லை என்பது அவருக்கு தெரியும்.
கொடிய நோய் உங்கள் உடலை தீண்டிய வண்ணம் உள்ளது என எங்கள் மூத்த வைத்தியர்கள் ராஜு அண்ணருக்கு சொன்ன பின்னும் எந்தச் சலனமும் அவர் வதனத்தில் தெரியவில்லை.
“கரிகாலன் படை காலனைக் கண்டு அஞ்சுவதில்லை”… என என் தந்தையார் எழுதிய வரிகளின் அர்த்தத்தினை அவர் முகத்தில் மொழிபெயர்த்தேன்.
எல்லாவற்றுக்கும் அப்பால் அவர் நாளும் அதிகாலையில் துயில் எழுந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவார்.
ஆங்கிலமொழி மூலமான தனது கற்றல் நடவடிக்கையின் பின்னர் சற்று தொலைவிலிருந்து வரும்
போராளிகளுக்காய் காத்திருந்து அன்பாய் கதை பேசி தனக்கு தெரிந்த அனைத்தையும் கற்பிப்பார்.
கொடும் புற்று நோய் சிகிச்சைக்காய்
வெளிநாடு செல்லும் வரை அவர் நேரசூசியில் கிஞ்சித்தும் மாற்றம் செய்யவில்லை.
இன்றளவும் இந்தியப்படைகளையும் இலங்கைப் படைகளையும் கதிகலங்க வைத்த ஜொனி மிதி வெடி தொடர்பான தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த செயல்வீரன் ராஜு அண்ணா ஆவார்.
மிக சொற்ப மூலப்பொருட்களை கொண்டு அதி உச்ச தொழில்நுட்ப சாகாசங்களை தமிழர்தம் படைகள் நடாத்தியதன் பின்னால் இருந்தவர்தான் இந்தக் காணரும் வீரர்!
வெற்றிகளின் நாயகனை
“அகம்”தனில் ஆழநினைந்து
“கரம்”தனைக் கூப்பி
“சிரம்” தனை தாழ்த்தி
நிமிர்வோம்!
(25.08.2002)