வைத்திய கலாநிதி பத்மலோசினியை வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் மாவட்ட வைத்தியராக கடமையாற்றிய காலத்தில் இருந்தே அறிமுகமானோம்.
டொக்ரர் பத்மலோசினி அவர்களின் ஆளுமையும்,துணிச்சலும் மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பாங்கினையும் வேறு எவரிடமும் இல்லை என்பதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கின்றேன்.
வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குள் அத்துமீறி ஆயுததாரிகளாக நுழைந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த நோயாளிகளை மிலேச்சத்தனமாகத் தாக்கியதைத் தொடர்ந்து அப்போதைய பிரஜைகள் குழுவினராகிய நாங்கள் யாக்கருவில் இருந்த பிரிகேடியர் சமேராமைச் சந்தித்து நிலைமையை விளக்கினோம்.
அந்த பிரிகேடியர் உடனடியாகவே வைத்தியசாலைக்கு வருகை தந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்ட கப்டன் மேனனை உடனடியாக அழைத்து தாக்குதலை மேற்கொண்ட அனைவரையும் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் கொண்டு வந்து நிறுத்தினார்.
அந்தச் சம்பவத்தினால் கோபமுற்றிருந்த டாக்டர் பத்மலோசினி அவர்களை வைத்தியசாலையின் அறையில் நிற்கவைத்துவிட்டு மேசையின் மேல் ஏறி அமர்ந்தபடி அந்த நிகழ்வை ஆக்கிரோசமாகக் கூறினார்.
இதற்கான நட்ட ஈட்டை நீங்கள்தான் வழங்கவேண்டுமென்றும் கூறிய அவரது ஆளுமையையும், துணிச்சலையும் பார்த்து வியப்படைந்தோம்.
அதன் பின்னரான காலப்பகுதியில் ஆனையிறவு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது,அதனைச் சூழ்ந்த தென்னந்தோட்டத்தில் பங்கர் அமைத்து காயப்பட்ட போராளிகளுக்கு அவரும், தேவா அன்ரியும் ஏனைய மருத்துவப் பிரிவுப் போராளிகளும் இயந்திரம் போல் நின்று செயற்பட்டு முதலுதவி செய்து கொண்டிருந்தபொழுது, அவர்களுடன் நானும், என்னுடன் வந்திருந்த சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்களும் அங்கே நின்று முதலுதவியைச செய்து பலரது உயிரைக் காப்பாற்றியிருந்தோம்.
அடுத்தடுத்து வலியினால் அழுது துடிதுடித்தபடி போராளிகளைக் கொண்டு வந்த பொழுது எவ்வித பதற்றமும் அடையாது எனக்கும் என்னுடன் வந்திருந்த
தொண்டர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, எங்களையும் விரைவாகத் தொழிற்படவைத்த அந்த மனிதநேயத்தையும், நெடிதுயர்ந்த ஆளுமையையும் அன்று பார்ததுப் பிரமிப்படைந்தோம்.
அஃதே,
அடுத்து எனது மகளின் திருமணத்திற்கு அவரது கணவர் கரிகாலனுடன் வாழ்த்திச் சென்ற அந்த அன்புள்ளத்தையும் பார்த்தேன்…….
இவ்வளவு மகத்தான ஒரு இளகிய நெஞ்சம் கொண்ட ஒரு இரும்புப் பெண்ணை எங்கள் வாழ்நாளில் என்றுமே பார்க்கமுடியாது……
அன்றும் சரி இன்றும் சரி எத்தனை வைத்தியர்கள் இப்படி உயிர்த்துடிப்புடன் செயற்படுகின்றார்கள்…..?
– வல்வை ஆனந்தராஜா –