ஈழத்தமிழும் தமிழ் இலக்கியமும்

91

தொன் தமிழ் இலக்கியங்கள் இலக்கணத்திற்கு உட்பட்டு இருந்தன. ஈழத் தமிழர் படைப்புகளை இந்திய தமிழரும் இந்தியத் தமிழர் படைப்புகளை ஈழத்தமிழரும் புரிந்திடக் கூடிய வகையில் இருந்தன.

கடைக்கழகம் தாண்டி நாயன்மார் காலத்தில் தேவாரத் தமிழாக உருமாற்றம் கொண்ட தமிழும் இரு நாட்டுத் தமிழராலும் புரியக் கூடியதாக இருந்தன.

சித்தர்களின் மூலம் தன்னைத் தக்க வைத்துக்கொண்ட தமிழையும் அனைத்து தமிழரும் புரிந்து கொண்டனர்.

புதுக்கவிதை வடிவத்தில் தமிழ் இலக்கியம் பயணப்பட்ட துவக்கத்தில் பாரதியார், பாரதிதாசன் போன்றோர் பயன்படுத்திய தமிழையும் அக்கால ஈழக்கவிகள் பயன்படுத்திய தமிழையும் அனைத்து தமிழரும் புரிந்து கொண்டனர்.

ஆனால் நவீன காலத்தில், வழக்குத் தமிழைக் கொண்டு வடிக்கப்படும் இலக்கியங்களை உள்வாங்குவதில் சிக்கலான நிலை உண்டு.

இந்திய தமிழ் வழக்கை, ஈழத்தமிழரிடம் இந்திய திரைப்படங்கள் கடத்தியதன் விளைவாக தற்கால இந்தியத் தமிழ் இலக்கியங்களை உள்வாங்குவதில் ஈழத் தமிழருக்கு பிரச்சினை குறைவு.

ஆனால் ஈழத் தமிழ் வழக்கில் உருவாகும் இலக்கியங்கள் அடைவு இந்திய வாழ் தமிழரிடம் இல்லை என்றே சொல்லலாம்.

இந்திய தமிழ் திரைப்படங்கள் இந்திய தமிழ் வழக்கை ஈழத்தவருக்கு அறிமுகப்படுத்தியது போல் ஈழத் திரைத்துறை ஈழத் தமிழ் வழக்கை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தவில்லை. அந்தளவுக்கு வளரவும் இல்லை.

இவ்வாறு ஈழத் தமிழ் வழக்கு இந்தியாவுக்கு அந்நியமான நிலை நீடித்தால், ஈழத் தமிழ் இலக்கியங்கள் தனிமைப்படும் சாத்தியம் உண்டு. அவ்வாறு தனிமைப்படுமாயின் இலகுவில் “அழிக்கப்படக்” கூடிய அபாயமும் உண்டு.

ஈரானியத் திரைப் படங்கள் உலகத் திரை அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்திய காரணங்களைக் கண்டறிந்து, திருக்குறள் உலகளாவிய அளவில் போற்றப்படும்  காரணத்தைக் நன்குணர்ந்து நாமும் தற்காலத்தில் இலக்கியங்கள் படைப்போமேயானால் அழிவு அபாயத்திலிருந்து ஈழ இலக்கியங்கள் தப்பித்து விடும்.

குறிப்பு – தற்காலத் தமிழ் இல்லக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஈழத் தமிழ் இலக்கியங்கள் சில உண்டென்பதையும் நாம் மறுக்க முடியாது.