சினிமா தருமம்

முள்ளும் மலரும்’ திரைப்படத்தை எமக்காய்த் தந்த முழுநிலவு தொடர்பான குறுங்கதை இது.

‘மகேந்திரன் எனும் மகோன்னத கலைஞன் சினி வானில் மறைந்தாரம்’ எனும் சேதி கேள்விப்பட்ட போது அடியேனின் நினைவுப் பெட்டகத்திலிருந்து வெளியே வீசப்பட்ட ஓர் நினைவுத்திவலை இது எனவும் கூறலாம்.

தமிழ்வானில் முழுநிலாவான அவர் தொடர்பில் பெரிதாய் உரைக்க யான் ஒரு கலைஞன் அல்ல.

சதா கூத்தும் பாட்டும் கலையுமென வாழும் வயவை எனும் பதிதான் என் ஊராயினும் சாதாரண சுவைஞனேதான் ஆதலினால் சிறிதாய் சொல்கிறேன்.

“ஆணிவேர்” திரைப்படம் வன்னிப் பெருநிலப்பரப்பின் பல இடங்களிலும் யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியிலும் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இவர் மகன் இயக்குனர் ஜான் மகேந்திரன் மற்றும் நடிகர்களான
திரு.நந்தா,மதுமிதா,நீலிமா ஆகியோர் அந்தப் படப்பிடிப்பில் ஈழக்கலைஞர்களுடன் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு முக்கியமான கட்டத்துக்கு வைத்தியசாலைக் காட்சி ஒன்றினைத் தயார் செய்ய ஈழதேசத்தின்
மருத்துவத்துறையிடம் உதவி கோரப்பட்டது.

கிளிநொச்சி மாநகரில் அமைந்திருந்த சத்திரசிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அக்காலத்தில் கடமையில் இருந்தவர் Dr. குயின்ரஷ் ஜீவன் இமானுவேல் (அமுதன்).

எங்கள் திரைப்படம் தத்ரூபமாய் மிகவும் உயிரோட்டமாய் அமைய வேண்டும் என நினைந்த Dr. குயின்ரஷ் ஜீவன் ஒரு நோயாளர் விடுதியை ஒதுக்கித் தருவதாக திரு ஜானிடம் சொன்னார்.

முகம் கடுமையாகிய திரு ஜான்
அதை உடனடியாகவே மறுத்தார். காரணம் கேட்ட போது “அப்படிச் செய்வது சினிமா_தருமம் ஆகாது” அதையும் தாண்டிச் செய்தால் அப்பாவிடம் தப்பமுடியாது என்றார்.

அவர் தந்தை மகேந்திரன் மாஷ்ரர் சொன்ன மந்திரத்தை மகன் மீறுவதாய் இல்லை என்பது எமக்கு விளங்கியது.

ஆதலினால் திரு ரோமியல் மற்றும் Dr கு.காந்தன், Dr அமுதனுடன் அடியேனும் இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சனி,ஞாயிறு ஆகிய விடுப்பு நாட்களில் அந்தக் காட்சி அமைப்புக்கு உதவி செய்து அவரின் சினிமா தருமத்துக்கு துணை நின்றோம்.

தருமத்தின் துரையாகிய எந்தையிடம் தானதருமங்களையும்,
தலைவனிடம் யுத்த தருமம் உட்பட பல தருமங்களையும் அறிந்து கொண்ட நாம் “சினிமா தருமம்” என்ற மகேந்திரன் மாஷ்ரரின் தருமத்தையும் அவரின் மகன் வழியாக அறிந்து கொண்டோம்.

சிந்தை எல்லாம் நிறைந்த ஐயாவே
எந்தையுடன் சொர்க்கத்தில் ஓய்வு எடுங்கள்!🙏