தமிழன் பெருமை பேசும் பிரம்மாண்டக் கோட்டை மண்ணில் புதைந்த விசித்திரம்..!

478

வரலாற்று சிறப்பு மிகு புதுக்கோட்டையின் சங்ககாலப் பெயர் பன்றிநாடு. “ராஜராஜ வளநாட்டு பன்றியூர் அழும்பில்”என்று பிற்காலச் சோழர் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. சங்க காலத்தில் சோழநாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் எல்லையாக புதுக்கோட்டைப் பகுதி தமிழகத்தை ஆண்ட அனைத்து வம்ச மன்னர்களுக்கும் போர்க்களமாக விளங்கியுள்ளது. இன்றைய நிலையில் போர்க்களங்கள் அழிந்துவிட்டன! ஆனால் அவை கூறும் வரலாறு நமது முன்னோர்களின் வீரத்திற்கு வித்தாக உள்ளதை இன்றளவும் காண முடிகிறது. அவ்வாறு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள ஓர் அரிய பொக்கிஷம் தான் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மண்ணில் புதைந்த கோட்டை. வாருங்கள், தற்போது அக்கோட்டை எந்த நிலமையில் உள்ளது, பின்னணி என்ன என்பதை அறிவோம்.

உலகை ஆண்டத் தமிழன் பொக்கிஷம்

சங்க காலத் தொல்லியல் சின்னங்களை தொல்லியல் துறை தற்போது கீழடி, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்து வருகிறது. இதில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முன்பாக நமது முன்னோர்களின் வாழ்விடங்கள், நாகரிகம், கட்டமைப்பு, கடல் கடந்து அவர்கள் செய்து வந்த வாணிபம் என பல அரிய பொக்கிஷங்களை கிடைக்கப்பெற்றது. பின், தமிழர்களின் பெருமையை முறியடிக்கும நோக்கில் இந்திய அரசாங்கத்தால் தொல்லியல்பணிகள் நிறுத்தப்பட்டது நாம் அறிந்ததே.

அதுக்கும் மேல…

கீழடி, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து, அதற்கும் மேலாக, சங்க காலத்திற்கும் முற்பட்ட, 2500 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழர்கள் கட்டிய மிகப்பெரிய கோட்டை ஒன்று புதுக்கோட்டைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் நாம் அறிந்த பிற கோட்டை போல் அல்லாமல் இக்கோட்டையானது மிகப்பெரிய வட்ட வடிவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மண்ணில் புதைந்த வரலாறு

தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டையின் சுற்றளவு மட்டும் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. தற்போது, இந்தக் கோட்டையின் அடித்தளப் பகுதிகளை மட்டுமே நம்மாள் காண முடியும். அந்த அடித்தளச் சுவற்றின் பிரம்மாண்டமே நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும். இந்த அடித்தளச் சுவறைச் சுற்றிப் பார்க்க, இரு சக்கர வாகனம் அல்லது ஒரு காரில் தான் சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றால் நினைத்துப் பாருங்கள் அக்காலத்தில் எத்தகைய ஆட்சியும், கட்டமைப்பும் இருந்திருக்கும் என்று.

தமிழரின் பேர் சொல்லும் கோட்டைச் சுவர்

8 கிலோ மீட்டர் சுற்றளவு என்பது நம்மால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று தான். இதற்காக அக்காலத்தில் பயன்படுத்திய தொழில் நுட்பம் இன்றளவும் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோட்டையின் அடித்தளகத்தில் சுமார் 2 அடி உயரத்திற்கு சரளைக் கற்களைச் சுற்றி அடித்தளமாகப் போட்டிருக்கிறார்கள். புதுக்கோட்டைப் பகுதியைச் சுற்றிலும் செம்மண் அதிகளவில் கிடைக்கும். சுத்தமான செம்மண் அதிகளவில் இங்கே இருப்பதால் அதனை தண்ணீரில் குழைத்துப் பூசி மழையிலும், புயலிலும் கரையாமல் இருக்கும் அறிவியலை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகிலேயே பெரிய அகலச் சுவர்

முற்றிலுமாக சிதிலமடைந்து காணப்படும் இந்தக் கோட்டையின் சுவற்றின் அகலம் புதிதாக காண்போர் கண்ணை பெரிதாக்கிவிடும். இந்த சுவற்றின் அகலம் மட்டுமே 60 அடியில் இருப்பதை அறியலாம். உலகத்திலேயே இது வரை இவ்வளவு பெரிய அகலத்தில் உருவாக்கப்பட்ட சுவர் இதுவாகத் தான் இருக்கும் என்கின்றனர் தொல்லியல் துறையினரும், பொறியியல் வல்லுனர்களும். இதன் உயரம் குறைந்தது 15 அடியாவது இருந்திருக்கும் என்று இதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் குழு அறிவித்துள்ளது.

எத்தனை பேரின் உழைப்பு ?

இந்த வட்டக் கோட்டையைக் கட்ட எத்தனை ஆயிரம் மக்கள் ஈடுபட்டனர் ? இதைக் கட்டி முடிக்க எத்தனை காலம் ஆனது ? என்ற விபரம் கண்டறிய முடியவில்லை. இருப்பினும், ஆய்வில் இந்தக் கோட்டையின் உட்பகுதியில், இதற்குள் வசித்த மக்களின் உபயோகத்திற்காக உருவாக்கப்பட்ட குடிநீர்க் குளம் காண முடிகிறது. இந்தக் குளத்தைச் சுற்றி, சங்க காலச் சுவடுகளும் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், இவையனைத்தையும் முழுமையாக ஆராய்ந்து தமிழரின் முழு வரலாற்றையும் வெளிக்கொண்டுவர ஏதோ நம் அரசாங்கம் மட்டும் முயற்சிகளை மூடி வைத்திருப்பது வேதனையான விசயம் தான்.

 

Oneindia.com