அலைபேசி, மடிக்கணினி, டப்லெட் மின்கலங்கள் பழுதடைதல் நாம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை ஆகும். சரியான பாவனை நடைமுறை மூலம் இதனை தவிர்க்கலாம் என்கிறது மின்கலத் தயாரிப்பு மற்றும் மின்கல நல பல்கலைக்கழகம்.
மின்கலத்தினை 100% சார்ஜ் ஏற்றக்கூடாது. உச்ச பட்சம் 95% சார்ஜ் ஏற்றினால் போதுமானது.
ஒரே நேரத்தில் 95% சார்ஜ் ஏற்றக் கூடாது. 20% அல்லது 25% ஆகப் பிரித்துப்பிரித்து சார்ஜ் ஏற்ற வேண்டும்.
தவறுதலாக 100% சார்ஜ் ஏற்றப்பட்டு விட்டால் பதட்டப்படத் தேவையில்லை. 100% மின்னேற்றம் நிகழ்ந்ததும் மின்னேற்றம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும்.
ஆனாலும் தொடர்ந்து மின்னேற்ற இணைப்பில் விடுவது ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
உதாரணமாக நாம் கதைக்காவிடினும் எம் அலைபேசி மின்னைப் பாவிக்கும். சிம்கார்ட், லொக்கேசன், போன்ற இன்னபிற வசதிகளால் மின் பாவிக்கப்படும். இதனால் மின்னிழப்பு ஏற்படும். தொடர்ந்து மின்னேற்ற இணைப்பில் அலைபேசி இருக்கும் போது, 1% மின்னிழப்பு ஏற்பட்டதும் மின்னேற்றம் நிகழும். 10, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு நிகழும். இதனால் மின்கலத்துக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு மின்கலத்தின் ஆயுள் முடியக் கூடும். எனவே தொடர்ந்து மின்னேற்ற இணைப்பில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
சிவப்புக் கோட்டுக்குக் கீழே மின்னிலை செல்ல அனுமதிக்கக் கூடாது. உதாரணமாக ஐ போனில் 20% வரை மின்னளவு குறைந்ததும் மின்கல அடையாளம் சிவப்புக்கு மாறும். தன்னை அபாயம் நெருங்குகிறது என்பதை எமக்கு மின்கலம் அறிவிக்கும் அபாய சமிக்கையே இது.
ஆக மொத்தத்தில் மின்கலத்தின் மின்னளவு 25% முதல் 95% வரை இருக்குமாறு சார்ஜ் போட்டால் மின்கல ஆரோக்கியம் மேம்பட்டு ஆயுள் அதிகமாகும்.