தகர்ந்து விடுமா தமிழரின் தாயகக் கனவு.

318

வன்னிமண்ணை விட்டு பணியிட மாற்றம் பெற்ற இராணுவ அதிகாரிக்காக அழுது, அவ்வதிகாரியை விட்டால் தமக்கு நாதி இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்கள் வன்னி வாழ் தமிழர்கள் சிலர்.. 

ஒரு காலத்தில் தாயகத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்காளிகளாக விளங்கிய புலம்பெயர் தமிழர்களின் இந்நாள் அமைதிக்கு கிடைத்த அவமானச் சன்மானமே இந்த அழுகை.

எத்துணை ஞாயப்பாட்டை முன் வைத்தாலும், தாயக சொந்தங்களின் பொருளாதாரத்திற்கும் மனோ பலத்துக்கும் ஆதரவளிக்கா விடில், கடந்த காலங்களில் நாளொன்றுக்கு ஒரு யூரோ சேமித்து நாட்டுக்குக் கொடுத்ததில் எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சு என்ற எண்ணம் எழலாம். அந்த முடிச்சை அவிழ்க்க வேண்டியது இங்கே அவசியமாகிறது.

வன்னியில் அழுதவர்களுக்கு நாங்கள் பொருளாதாரக் கரம் நீட்டி இருந்தால் அவர்கள் தன்மானம், தனிவீரம் உள்ளிட்ட தமிழினக்குணங்களை இழந்து சிங்களத்தை அண்டிப் பிழைத்திருக்க மாட்டார்கள். கண்ணீரும் விட்டிருக்க மாட்டார்கள்.

நாங்கள் இன்னும் பாராமுகமாக இருப்போமேயானால் இந்த அழுகை தாயகம் முழுவதும் பரவும்.  தமிழினக்குணம் அழியும். குணமில்லாத இனம் பிணமாகும். தாயகக்கனவு தகரும்..

இன்னொரு பக்கம் தமிழனை விட சிங்களவன் நல்லவன் என்று சொல்லும் தமிழன் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் நாம் அடையப் போகும் விபரீதம் விபரிக்கப்பட வேண்டிய தேவை இல்லை.

இவ்விபரீத அனர்த்தம் தடுக்கப்படல் வேண்டும் எனில் தாயக சொந்தங்களின் பொருளாதாரப் பலத்தைக் கட்டி எழுப்ப புலம்பெயர் தமிழர் முன்வர வேண்டும்.

நாங்கள் என்னதான் தலைகீழாக நின்றாலும் இப்பேரனர்த்தம் நிகழ்வதை தடுக்க இயலாதென காலச்சூழல் கூறுவதாகக் கருதியே பலர் பாராமுகமாக உள்ளோம்.  இனத்தின் இருப்பை தக்க வைத்தால் தேசம் அமைய வாய்ப்புண்டு. இனத்தில் இருப்பு இல்லாது போனால் எவ்வித சாத்தியமும் இல்லை என்பதை அத்தகையோர் உணர வேண்டும்.

அதாவது, நாளை வேறு வடிவத்தில் உரிமைப் போராட்டம் முன்னெடுக்கப் பட வேண்டும் எனில், தாயகத்தில் தமிழின இருப்பு அவசியம் ஆகும். அவ்விருப்பை தக்க வைக்க அங்குள்ளோரின் பொருளாதாரப் பலத்தின் பெரும்பங்காளிகளாக நாம் ஆக வேண்டும்.

தவறின் சிங்களம் இடையில் புகுந்து உதவுவதாக பாவனை காட்டி தமிழின அழிப்பை சுலமாகச் செய்துவிடும். 

எப்படிச் செய்வது எனும் தடுமாற்றம் இருக்கலாம்.  ஒற்றையாக நிற்பதை விட ஒன்றாக நிற்பது மிகப்பெரும் பலமாகும். ஊர்சார், தேசம்சார், பள்ளிசார், சமூகம்சார் அமைப்புகள் பல எமக்கருகில் உருவாகியுள்ளன. அவற்றுள் நம்பிக்கையான ஒரு அமைப்பின் மூலம் பொருளாதாரப் பலத்தை கட்டி எழுப்ப முயலலாம். 

இது ஒவ்வொரு தமிழனுடைய கட்டாயக் காலக் கடைமையாகும்.