குடாரப்புத் தரையிறக்கம் – நான்காம் நாள் – வழி திறக்கப்பட்டது…

குடாரப்பில் கடல்வழி தரையிறங்கிய அணிகளுக்கான தரைப்பாதை திறக்கப்பட்டமை ஆனையிறவு முற்றுகை போருக்கான முதல் கட்ட வெற்றி ஆகும்.

இந்த தரைவழிப்பாதை திறக்கப்பட்ட அந்த கணங்களின் உற்சாகத்தையும் மகிழ்வினையும் வார்த்தைகளில் வடிக்க முடியாது.

களத்திலும் தளத்திலும் நின்ற போராளிகளுக்கும் களநிலவரங்களை நன்கு அறிந்த பொதுமக்களுக்கும் கால்கள் தரையில் முட்டவில்லை.

வன்னிப் பெருநிலப்பரப்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே அமைந்துள்ள எல்லைக் கிராமத்தில் தொடங்கி கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி ஆழியவளை, உடுத்துறை, தாளையடி ஊடாக அந்த தரைப்பாதையை ஏற்படுத்தியவர் பிரிகேடியர் தீபன் ஆவார்.

பிரிகேடியர் தீபன் அவர்களின் கட்டளையை ஏற்று சமராடிய படையணிகளாவன

(01)புலனாய்வுத்துறைப் படையணி

(02)கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணி

(03)ஜெயந்தன் படையணி

(04)ராதா வான்காப்பு படையணி

ஆகிய படையணிகளுடன் வேறு சில அணிகளும் களமாடி அந்தச் சண்டையை வென்றனர்.

நீண்ட கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரின் பதின்மூன்று (13) கிலோமீற்றர்கள் நீளமான இராணுவ வேலிகளையும் தளங்களையும் தங்ககங்களையும் கைப்பற்றி தகர்த்தழித்து தரைப்பாதையை தமிழினத்தின் விறலோன்கள் திறந்தனர்.

விழுப்புண் அடைந்த வீரர்களையும் படுகாயமடைந்த சில பொதுமக்களையும் வன்னியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பக் கிடைத்தமை ஆறுதல் தந்தது.

அஃதே,

முற்று முழுதாக தீர்ந்துவிட்ட மருந்துவ பொருட்களையும் உடனடியாகவே வன்னியிலிருந்து எடுத்துக் கொள்ளவும் முடிந்தது.

நான்காவது நாளாகிய இந்த நாளில் தாளையடி பெருந்தளம் மீட்கப்பட்டு கண்ணிவெடி, பொறிவெடிகள் ஆகியன முழுமையாக அகற்றிடாத அந்த நேரத்தில் எங்களைப் பார்க்க ஜவான் அண்ணர் விரைந்து வந்தார்.

ஆம், இருபத்தொரு (21) ஆண்டுகளுக்கு முன்னர் இதே மார்ச் மாதம் “புலிகளின்குரல்” வானொலிப் பணிப்பாளர் திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்கள் இத்தாவில், நாகர்கோவில் களமுனைகளில் போராளிகளைச் சந்தித்து வாழ்த்துக் கூறி உற்சாகம் ஊட்டினார்.

ஓரிரு தடவைகள் அல்ல பல தடவைகள் பெட்டிச்சமர் நடைபெற்ற பகுதிக்கு வந்தார்.

சமர்களநாயகன் தொடக்கம் சாதாரண போராளிகள், சிறப்பு எல்லைப்படை வீரர்கள் வரை ஒவ்வொரு வரையும் அவர்களின் காவலரண்களுக்கு சென்று சந்தித்து கைலாகு கொடுத்து வாழ்த்தினார்.

“ஊரிலும் புலம் பெயர் நாடுகளிலும் எங்கடை சனம் வெற்றிச் செய்திக்காக பிரார்த்தித்த வண்ணம் இருக்கின்றனர்” என திரு.தமிழன்பன் (ஜவான்) அவர்கள் சொன்ன போது பல போராளிகள் ஆனந்தக் கண்ணீர் (Tears of joy) வடித்தனர்.

அஃதே,

களமுனை வீரர்களின் உள்ளத்துச் சிந்தனைகளையும் மக்களுக்குச் சொல்ல வேண்டிய சேதிகளையும் பேட்டிகளாக எடுத்துச் சுடச்சுட பகல் நேர தமிழீழ வானொலியிலும் இரவு நேர புலிகலின் குரல் வானொலியிலும் (VoT) ஒலிபரப்புச் செய்தார்.

திருமிகு தமிழன்பன் (ஜவான்) அவர்களை போலவே விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினர் திருமிகு காக்கா (சங்கர்) அவர்களும் தொடர்ந்து வந்த நாட்களில் களத்திற்கு வருகை தந்தார்.

இருவருமே நல்லூக்கம் நல்கியதுடன் நின்றுவிடாது அந்த வியன்களத்தை வரலாறாகவும் பதிவு செய்தார்கள்.

காக்கா அண்ணனால் எழுதப்பட்ட அந்த வரலாற்று ஆவணமானது
“மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்” எனும் பெயரில் நூல் வடிவில் வெளியீடு செய்ய்ப்பட்டது.

🎖♟🎖