குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை

குடாரப்பு தரையிறக்கம்: இரண்டாம் நாள் மாலை
************************************

குடாரப்பு தரையிறக்கத்தில் பல நூறு போராளிகளை சில மணி நேரத்தில் தரையிறக்கிய பணியில் பங்கு கொண்டு சிறப்பான பணிதனை ஆற்றியவர்களை கடந்து ஆனையிறவு வெற்றியை பற்றி கதைக்க முடியாது.

அந்த வகையில் அலைகடலை தாண்டி தரைவேங்கைகளை பக்குவமாய் தரையிறக்கிவிட்ட கடல்வேங்கை
கடற்புலி லெப்.கேணல் எழில்கண்ணன் பிரதான பங்கினை வகித்தார்.

படையணிகளை வெற்றிகரமாக தரையிறக்கம் செய்துவிட்டு தொடர்ச்சியாக வந்த நடைகளில் ஆயுத உணவு விநியோயகம் செய்திட தன்னால் இயன்றளவு முயற்சிகளை எடுத்தவர்.

வெற்றிகரமாக தரையிறக்கம் நடைபெற்ற இரண்டாவது_நாள் எதிரி எமது நடவடிக்கையினால் அதியுச்ச விழிப்பு நிலையினை அடைந்துவிட்டதால் ஸ்ரீ லங்கா கடற்படையினர் முழுமையான தமது பலத்தையும் மாங்கனித்தீவின் வடகிழக்கு திசையில் திருப்பிவிட்டிருந்தார்கள்.

நூறு கடல்மைல்களை துல்லியமாக அவதானிக்க கூடிய அதி நவீன இஷ்ரேல் தயாரிப்பான் “மிதக்கும்_கோட்டை”கள் போன்ற கப்பல்கள் உட்பட பல சுப்ப டோரா படகுகள்( Super Dvora)வடமராட்சி கிழக்கின் கடல் முழுவதையும் ஆக்கிரமித்தன.

காங்கேயன்துறை,திருகோணமலை கடற்படை தளங்களில் இருந்து விரைந்து வந்த எதிரியின் சுப்படோறாக்கள் ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் பயங்கரத்தையும் விஞ்சியே நின்றன.

அத்தனை கடல் வியூகங்களையும் உடைத்துக் கொண்டு லெப்.கேணல் எழில்கண்ணன் தலைமையிலான படகுத் தொகுதி சுண்டிக்குளம் கடலோரம் இருந்து தன் பயணத்தை தொடர்ந்தது.

தாளையடியை அண்டிய கடலோரம் வரை வெற்றிகரமாக பெருமளவு உடன் சமைத்த உணவு, உலர் உணவு மற்றும் ராங்கி எதிர்ப்பு ஆயுதமான எஸ்.பி. ஜி 9(SPG – 9) உட்பட சில கனரக ஆயுதம் உட்பட நடைபேசி(வோக்கி)களுக்கான மின்கலம் உட்பட அந்த களத்துக்கான அத்தியாவசிய பொருள்களுடன் அந்த படகுத் தொகுதி வந்து கொண்டிருந்தது.

அபிவிருத்துயடைந்த நாடுகளின் உயர் கடற்படை பயிற்சி மற்றும் அதிநவீன கண்காணிப்பு வசதிகளுடன் கடலில் நின்று கொண்டிருந்த எதிரியின் தாக்குதல் வியூகத்தினுள் ஈற்றில் அந்தப் படகு அகப்பட்டுக்கொண்டது.

#கடற்சூரியன் என புகழப்படும் இந்த வீரன் அந்த நிலையிலும் தன்னையும் படகுத்தொகுதியையும் சம நிலைப்படுத்தி தனது படகினை விடுதலைப் புலிகளினால் தரையிறக்கத்தின் மூலம் புதிதாக தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த செம்பியன்பற்று கடற்கரையினை நோக்கி செலுத்திவிட்டிருந்தார்.

படகு தரைதட்டிய சில விநாடிகளில் மயக்க நிலையினை அடைந்தார். தலையில் ஏற்பட்ட பலமான காயமே இந்த வீரனை கோமா(Coma stage) நிலைக்கு இட்டுச் சென்றது.

படகு தொகுதிக் கொமாண்டரான லெப்.கேணல் எழில்கண்ணன் விழுப்புண் அடைந்த நிலையில் செம்பியன்பற்றில் அன்றிருந்த களமுனை வைத்தியசாலையில் எங்களால் சிகிச்சை அளிக்கப்பட்டார்.

அங்கேயே பராமரிக்கப்பட்ட எழில்க்கண்ணன் தரைப்பாதை பிடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து கட்டைக்காட்டில் அமைக்கப்பட்டிருந்த Dr.தூயவன் அவர்களின் கடமையிலிருந்த
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

உடல் தேறிய பின்னரும் பல களங்களை கண்ட இந்த எங்கள் தங்கக் கடற்சூரியன் 07.08.2006 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில்
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்”.