யார் தலைவன்?

670

ஒருவர் மகத்தான ஓர் இலட்சியத்தை மேற்கொள்வதும் அதற்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணிப்பதும் ஒரு மகத்தான செயலாகும். வாழ்நாள் குறுகியது. அதை ஒரு பெரிய காரியத்தின் பொருட்டுத் தியாகம் செய்து விடுங்கள். நம் வாழ்க்கையை ஒரு மாபெரும் இலட்சியத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டால் தான் அந்த வாழ்க்கைக்கே ஒரு மதிப்பு உண்டு. நீ மனிதனாகப் பிறந்திருக்கிறாய். நீ வாழ்ந்து மறைந்ததற்குப் பின்னால், ஓர் அழியாத அடையாளம் எதையாவது விட்டுச் செல். அவ்வப்போது உலகத்திடமிருந்து உங்களுக்குப் பலமான அடி கிடைக்கலாம். அதற்காக மனம் குலையக் கூடாது. கணநேரத்தில் அது சரியாகிவிடும்.

ஒவ்வொரு சமுதாயத்திலும் தீமைகள் இருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரியும். அந்தத் தீமைகளை எல்லோராலும் அடையாளம் காட்ட முடியும். ஆனால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு வழி காண்பவன் தான் மனித குலத்தின் உண்மையான நண்பன். நீ உன்னைத் தியாகம் செய்தால் மட்டுமே, பிறரின் இதயங்களை வெல்ல முடியும்.

மனித குலத்தைக் கத்தியின் மூலம் ஆள நினைப்பது முழுக்க முழுக்கப் பயனற்ற வீண் முயற்சியாகும். தீமைகள் செய்வதற்கு அதிகாரம் பயன்படுத்தப்படும்போது, அது மிருகத்தனமாகிவிடுகிறது. அதிகாரத்தை நல்லதுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். யாருக்கும் தனிச்சலுகை இருக்கக் கூடாது. இந்தத் தனிச்சலுகையின் தலையிலடித்து அவற்றை ஒழிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட நீங்கள் செய்யப் போகும் மிகப்பெரிய வேலை எது தெரியுமா? நீங்கள் பிறந்த இனத்தின் மேன்மைக்காக, மனித சமுதாயத்தின் நன்மைக்காக, இந்த மாபெரும் தொண்டிற்காக உங்களை அர்ப்பணித்துக் கொள்கின்ற தியாகம் தான் அந்தப் புனித வேலை. இந்த வாழ்கையில் என்ன இருக்கிறது? நாம் வாழும் காலம் குறுகியது. எனவே நாம் பெரியதொரு குறிக்கோளை, உன்னதமான கொள்கையை வாழ்க்கையின் இலட்சியமாக ஏற்போம். அதை அடைய வாழ்நாள் முழுதும் பாடுபடுவோம். இதுவே நம்முடைய முற்று முடிந்த தீர்மானமாக இருக்கட்டும். சாஸ்திரங்கள் கூறுவது போல, தன் மக்களைக் காப்பதற்காக, உய்விப்பதற்காக மனித உருக்கொண்டு அடிக்கடி இவ்வுலகிற்கு வருகின்ற இறைவன் நம்மைக் காப்பாராக; நம் குறிக்கோளை முடித்துத் தருவாராக; என்று பிரார்த்தனை செய்வோம்.

-சுவாமி விவேகனந்தர்