பைபிளும்(Bible) ரைபிளும்(Rifle) உச்சரிப்பு முறையில் கிட்டத்தட்ட ஒத்தொலிக்கும் தன்மையது கொண்டவை!
அஃதே,
ஏறத்தாழ ஒரே கால கட்டத்தில் அதாவது 15ஆம்,16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் தமிழகத்திற்கும் தமிழீழத்திற்கும் அதிகம் அறிமுகமாயின!
இரு வெவ்வேறு வகையான முகங்கள் கொண்ட பொருட்கள் அறிமுகமாகிய போதிலும் “அறம்”தனை அன்றாடம் போற்றியே வாழும் இனத்தினர் Bible ஐ இலகுவில் உள்வாங்கி அரவணைத்துக் கொண்டனர்!
Bible ஐ எனும் நூலினை “விவிலியம்”எனவும் “பரிசுத்த வேதாகமம்” எனவும் தமிழாக்கமும் செய்தனர்!
பழந்தமிழர் எழுதி வைத்த எத்தனையோ பனுவல்கள் “ஓலைச்சுவடி”களில் இருந்து நவீன அச்சு இயந்திரம் ஏற முன்னரே “விவிலியம்” அழகாய் அச்சேறியது.
தமிழகத்தின் தரங்கம்பாடியில் முதன் முதலில் தமிழில் அச்சேறிய நூல்களில் விவிலியமும் ஒன்று எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது!
ஆனாலும்,
ஐரோப்பியர் கொண்டு வந்த ரைபிளை (Rifle) துவக்கு என்றும் துப்பாக்கி என்றும் அவர்களது மொழியிலேயே அல்லது போர்த்துக்கீச மொழியிலேயே வழங்கப்பட்டு வந்தது!
யுத்தம் அநாகரிகமானது என்ற புரிதலுடன் வாழ்ந்து வந்த உலகின் மூத்த குடிகளான தமிழரினம் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் ஐரோப்பியர்கள் கொண்டு வந்த ரைபிளை (Rifle) ஏறெடுத்தும் பார்க்கவில்லை!
ஆனாலும்,
ரைபிளை (Rifle) பார்க்க வைத்தனர் சகோதர இனத்தவர்கள்!
யுத்தம் அநாகரிகமானது என்றிருந்த எம்மவர் மனங்களில் தவிர்க்க முடியாமல் மாற்றத்துக்கான வித்துக்கள் சிங்களப் பேரினவாதிகளால் விதைக்கப்பட்டது.
ஐம்பதுகளில்(50s) பாணந்துறை ஆலயத்தின் ஏதுமறியா அர்ச்சகர் அடித்துக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டு அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் மிருகத்தனமானத் துன்புறுத்தப்பட்டனர்!
அறம்தனை அன்றாடம் போற்றியே வாழும் இனத்தில் சிலர் “அறச்சீற்றம்” கொண்டனர்!
அறவழிப் போராட்டம் தோல்வி மேல் தோல்விகள் கண்ட போது ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாமல் பரிணமித்தது!
“பைபிலை”த் தொட்ட கைகளினால் இனி நான் “ரைபிலை”த் தொடமாட்டேன்!
என்றுரைத்த வண்ணம் அறநெறிப் பாடசாலையில் பயின்ற என் நண்பனும் ஈற்றில் தமிழீழப்போரில் குதித்து ஆகுதியானான்:
ஆம், கொட்டமடித்த கொடுங்கோல் கொண்ட
சிங்களத் தலைமை எம் செம்மண்ணில் நிகழ்த்திய கொடுமை அத்தகையது!
அந்த ஆயுதவழிப் போராட்டம் ஆரம்பக் கட்டத்தை அடைந்த காலகட்டத்தில் தமிழகத்தவர்களும் தமிழீழத்தவர்களும் அவர்கள்தம் தலைமையும் தமிழ்ப்பண்டிதர்கள், தமிழ்த்துறையின் தலை வணங்காப் பேராசியர்களுடன் கலந்துரையாடி “துப்பாக்கி” எனும் போராயுதத்தை அழகாய் “துமுக்கி” என தமிழாக்கம் செய்தனர்!
தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் தந்தை’ என்று போற்றப்படும்”மொழி ஞாயிறு” ஞா.தேவநேயப் பாவாணர் தமிழறிஞர்கள் நிறைந்த சபையில் முன்மொழிந்தார்!
பேரறிஞரின் அழகான முன்மொழிவினைத் தொடர்ந்து தமிழீழப் போர்க் களங்கள் எங்கும் சன்னங்கள் வழியே சிங்களத்துடன் சத்தமிட்டு நாங்கள் பேசிப் பேசியே வழிமொழிந்தோம்!
ஆம்,
துவக்கு அல்லது துப்பாக்கி என வேற்று மொழியில் அழைக்கப்பட்ட “துமுக்கி” தமிழரிடையே நிலையாய் நிமிர்ந்து கொண்ட காதைச் சுருக்கம் இதுவே ஆகும்! ✊