நாள் : 45
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :5
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இப்பொழுது வரை வள்ளுவர் சொன்னது இல்வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பது. இப்பொழுது அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறார் வள்ளுவர்.
இல்வாழ்வின் பயன் என்ன – அறம்.
இல்வாழ்வின் பண்பு என்ன – அன்பு.
இத்தனை இரத்தினச் சுருக்கமாக உலகத்தில் எந்தப் பண்பாடும் இல்லற வாழ்க்கையை வரையறுத்தது இல்லை.
இல்வாழ்க்கைக்கு ஆயிரம் பண்புகள் இல்லை. மணமக்களுக்கான வாழ்த்தில் இதை ஒரளவுக்கு நானும் சேர்க்க முயற்சித்து இருக்கிறேன் இப்படி.
நல்மனை தனக்கு நான்காம் சுவர்கள்
நன்றாய் மனதில் பதித்திடுவீர்
செல்வன் சேர்மதி மூத்தோர் இளையோர்
சேர்ந்திட இல்லம் பலமாகும்
அன்பே கூரை அறமே வாசல்
இன்சொல் தானே சாளரமாம்
இன்பம் பொழியும் இம்மனை தனக்கு
நம்பிக்கைத் தானே கடைக்காலாம்.
ஆக போன அதிகாரத்தில் அறம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்த வள்ளுவர், இந்த அதிகாரத்தில் இல்லறம் என்பதே அறம் செய்யத்தான் என உறுதியாக மனதில் பதிய வைக்கிறார். நாம் இதை நம் சந்ததிகளுக்கு பதிய வைக்க வேண்டும். அறத்தைச் செய்!. அன்போடு செய்!!! என்று.