நேற்று காலை அவசரமாய் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தேன்.
“ஹாய்” …… மெல்ல பக்கமாய் வந்த காரில் என் நண்பர்.
இறக்கினார் கார் கண்ணாடியை. “வணக்கம் ” என்றபடி பார்த்தேன்….
வாயிலே புகையும் சிகரெட்.
அருகே பள்ளி செல்லும் ஆறு வயது மகன்.!!
அவனுக்கு ஆஸ்துமா இருப்பது எனக்குத் தெரியும்..
நெருங்கிய நண்பர் அவர். எனவே உரிமையுடன்
அவர் வாயிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி எறிந்தேன்…
“உங்களால் உங்களின் அழிவை நிறுத்த முடியவில்லை…
உங்கள் சிகரெட்டால் கூடவே உலக மரங்கள் அழிவது போதாதா..
உங்கள் குலக் கொழுந்தும் கருக வேண்டுமா…?”
நண்பரின் கண்களில் அடிபட்ட வலியும், வேதனையும்.
அவர் மகன் முகத்தில் ஆச்சரியமும், சிறு முறுவலும்….
நண்பரிடம் நான் பகிர்ந்துகொண்ட கருத்துகள்
இங்கே மன்றத்தில் உங்களுடனும்……
ஆஸ்துமா என்றால் என்ன?
இது ஒரு பரவலான நோய்.
மூச்சுக்குழாய், அதன் கிளைகள் எதிர்பாராத தருணங்களில்
சாதாரண நிலை (விட்டம்) யில் இருந்து, திடீரென
சுருங்கி விடும் நிலை. மீண்டும் மீண்டும் நாம் அழைக்காமலேயே
வலிய நம் நுரையீரல் வீட்டுக்கு வந்து வந்து போகும் வேண்டாத விருந்தாளி.
அவர் இல்லாத நேரம் வீடு நல்லாகவே இருக்கும்!!
இந்த மாற்றம் சில மணி நேரங்களில்…ஏன் சிலருக்கு
சில நிமிடங்களிலேயே கூட நிகழ்ந்துவிடும்.
மூச்சுக்குழாயின் (Air-ways, Trachea and its branches..–> Bronchi)
அகவணிச் சவ்வு ( Bronchial Mucosa) அழற்சியால்
சிவந்து, வீங்கி, நீர்ச் சளி தேங்கி இந்த விட்டக்குறுகல் நேர்கிறது.
ஏன் வருகிறது ?
இந்த அழற்சிக்கு முக்கியமான தூண்டுதல்கள்:
வீட்டுத் தூசி
போர்வை, தலையணை ” அழுக்கு”
இலை, பூ மகரந்தங்கள்
செல்லப்பிராணிகளின் கேசம், காய்ந்த எச்சில்
புகை (அடுப்பு சமையல் அறையிலோ, அப்பாவின் வாயிலோ இருக்கலாம்)
உடற்பயிற்சி
குளிர்க்காற்று
பி.எஸ். வீரப்பா, மதன்பாப் பாணி சிரிப்பு
மனநிலை சோர்வு, தளர்வு ( பிளஸ் 2 தேர்வுகள்…!!!)
இவற்றின் ஒட்டுமொத்த பெயர் : ஒவ்வாதவை (Allergens)
யாருக்கு வரும் ?
எந்த வயதிலும் வரலாம்.
சிறுவயதில் வந்தால், டீன் ஏஜில் குறைந்து மறைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
உறவினருக்கு இருந்தால், நமக்கு வரும் சாத்தியம் சற்று அதிகம்.
நோய்க்குறிகள் என்ன ?
வறட்டு இருமல்
நார் போல் துப்ப சிரமம் தரும் சிறு சளி
விசில் போல் மூச்சுடன் சப்தம் (Wheezing)
சாதாரணப் பணிகளுக்கே மூச்சு வாங்குதல்
சும்மா இருக்கும்போதே மூச்சு (வெளியே) விட சிரமம்.
-இளசு