கர்ண வதம்
வாலி வதத்தில் ஒரே ஒரு காரணம். ஒரே ஒரு பாணம்.
அதுவே கர்ணனின் மரணம் எடுத்தால் பல காரணங்கள். பல பாணங்கள். கர்ணன் சூரியனின் மகன் என்றாலும் சூதனாக வளர்கிறான். சூழ்னிலையால் வாலி இராவணனை தோழமை கொண்டது போல துரியோதனனை தோழமை கொள்கிறான் கர்ணன்.
கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி.
கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான்.
ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும்.
கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் – நாராயணாஸ்திரம் – பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது.
கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான்.
கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் தர்மம்.
பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான்.
கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை. ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார்.
கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா?
பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது.
கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை.
வாலி – இராவணனின் நட்பை யாரும் சிலாகிப்பதே இல்லை. ஆனால் கர்ணன் – துரியோதனின் நட்பு புகழப்படுகிறது.
வாலி போல அறியாமல் மரிக்கவில்லை கர்ணன். அவனின் மரணம் அவனுக்குத் தெரிந்தே இருக்கிறது.
குந்தியிடமும் கண்ணனிடமும் தன் இறப்பை முன்னறிவிக்கிறான் கர்ணன். தான் சேற்றில் சிக்கிக் கொண்டதையே சொல்கிறான். அவனுக்கு வாய்ப்பு இருக்கிறது, துரியோதனனுக்காய் போரிட்டாலும் தர்மன் ஆள்வதே இறுதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குமே இருக்கிறது.
அவனுள்ளத்தில் எத்தனை போராட்டங்கள் இருந்திருக்கும் என்று எண்ணும் போதே தலை சுற்றி கிறுகிறுக்கும்.
வாலி பலவான். கர்ணன் திறமை மிக்கவன். வாலிக்கு இராமன் தூதனுப்பவில்லை. கர்ணனிடம் தானும் பேசுகிறார். குந்தியையும் பேச வைக்கிறார்.
வாலியோ கர்ணனோ இராமனும், கிருஷ்ணனும் விதிமீறல் செய்வார்கள் என்பதை நம்பவே இல்லை.
கர்ணனின் மரணத்தில் பல தர்ம விவாதங்கள் செய்யப்பட்டு அவனின் மரணத்தின் காரணம் அலசப்பட்டது போல வாலியின் மரணமும் பட்டி மன்றக் கருப்பொருளாகவே இருக்கிறது.
வாலியின் தரப்பில் பேசப்படும் பொழுது அவன் கொல்லப்பட்ட விதம் மட்டுமல்ல, அவன் ஏன் கொல்லப்பட்டான் என்ற காரணமும் விவாதத்திற்கு ஆளாகிறது.
காரணம் வாலியின் மரணத்திற்குப் பின் தாரையை சுக்ரீவன் சேர்த்துக் கொண்டான் என்பதுதான்.
அது விதவை மறுமணமா என்பதையும் ஆராய்தல் வேண்டும்.
மகாபாரதத்தின் கர்ணன் வதம் ஒப்பிடத்தகுந்த ஒரு தர்மமே ஆகும்.
வாலியைப் பற்றி நாம் அறிந்ததை விட கர்ணனைப் பற்றி நாம் அறிந்தது மிக அதிகம்.
வாலி அங்கீகாரம் பெற்ற வீரன். கர்ணன் அங்கீகாரத்திற்கு ஏங்கும் வீரன்.
வாலிக்கும் கூடா நட்பு இருந்தது. கர்ணனுக்கும் கூடா நட்பு இருந்தது.
வாலி சினத்தின் வசப்பட்டு தம்பியின் மனைவியை கவர்ந்தான்.
கர்ணனும் உணர்ச்சியின் வசப்பட்டே தம்பியரின் மனைவியின் மானபங்கத்திற்கு துணையாய் நின்றான்.
வாலியோ கர்ணனோ வேறுவிதமாய் இருந்திருந்தால் மிகப் பெரிய யுத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
கர்ணனின் கவசகுண்டலமோ வாலியின் வரமோ அவர்களைக் காக்கவில்லை.
இப்படி வாலி-கர்ணன் மத்தியில் நிறைய ஒற்றுமைகளைக் காணலாம்.
இந்த உலகில் எது மிக அதிகம் நினைக்கப்படும்?
வள்ளுவர் மிக அழகாக இதை மிக அழகாக சொல்லுவார்.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் வருவது. பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் எப்பொழுதும் விவாதிக்கப்படும். எண்ணப்படும். அது அவ்வளவு எளிதில் மனிதர்களால் மறக்கப்படாது.
உலகத்தில் பலகதைகள் இந்த ஒரு காரணத்தினாலே மிகவும் புகழ்பெற்றதாக இருக்கின்றன.
ஆரம்பத்தில் இருந்தே தர்மம் ஜெயித்தது. .தர்மம் ஜெயித்துக் கொண்டே இருக்கிறது என்று இருந்திருந்தால் இந்தக்கதைகள் இரு தலைமுறைகளைத் தாண்டி இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இறுதியில் தர்மம் ஜெயித்தது என்று சொல்லி இருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் தர்மம் எது என்று ஒரு கேள்வியை வாசகனை நோக்கி வீசி அவனுடைய மனதை ஆராயத் தூண்டும் கர்ணன் மரணம் மற்றும் வாலி மரணம் ஆகிய இரண்டும் மஹாபாரதத்தில் நம்மைக் கட்டி நிறுத்துகின்றன.
தன்னை விட மிகப்பலவானான ஒருவனை வீழ்த்த வாலிவதம் எப்பொழுதும் உதாரணமாகிப் போகிறது. எதிரியைப் பலமுனை யுத்தத்தில் சிக்க விட்டு பலவீனமாக்கி வெல்வதற்கு கர்ண வதம் உதாரணமாகிப் போகிறது.
வெற்றியில் பெருமை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்பதை இரண்டுமே உணர்த்தும்.
பலம் மிக்கவர்களின் கேடு என்ற கோணத்தில் இந்த இரு நிகழ்ச்சிகளும் எப்பொழுதும் ஆராயப் பட்டுக் கொண்டே இருக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான தொடர்பு… இராமாயணத்தில் இந்திரன் மகனைக் கொல்ல சூரியன் மகனுக்கு உதவுகிறான் இராமன். இந்தக் கணக்கை நேர் செய்ய மகாபாரதத்தில் சூரியன் மகனைக் கொல்ல இந்திரன் மகனுக்கு உதவுகிறான் கிருஷ்ணன்.
கர்ணன் என்ற ஒரு பாத்திரம் இல்லாவிட்டால் துரியோதனன் இந்த அளவு ஆடியிருக்க முடியுமா என்பதே சந்தேகம்தான். சகுனியையோ தம்பியரையோ நம்பி இவ்வளவு பெரிய இக்கட்டில் அவன் காய் நகர்த்தி இருக்கவே முடியாது.
கர்ணனின் வீரம், அஸ்திர ஞானம் மற்றும் திறமை பற்றிய பல விளக்கவுரைகள் உண்டு. அவனுடைய வில் விஜயம் என்னும் வில். பரசுராமரின் வில்.
பரசுராமனின் இன்னொரு வில் மிகப் புகழ் பெற்றது, அதன் பெயர் கோதண்டம். விஷ்ணுவின் வில் எனப்படும் அது பரசுராமனால் இராமனுக்கு அளிக்கப்பட்டது.
பரசுராமர் தன்னுடைய அனைத்து ஆயுதங்களையும் அஸ்திரங்களையும் துரோணருக்குக் கொடுத்தார்.
பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் அவரே குரு. ஆக பரசுராமர் இதன் மூலம் மீண்டும் ஷத்ரிய குல அழிவிற்கு வழி வகுக்கிறார். அவரின் சீடர்கள் இன்றி மகாபாரதமே இல்லை.அவரின் பரசு ஓய்வெடுத்தாலும் ரவுசு தீரலையே!!!
கண்ணன் கீதையில் கர்மங்கள் தன்னை தீண்டாது என்று அர்ஜூனனுக்கு உரைக்கிறான். அப்படி இருக்கையில் கர்ம வசத்தினால் வேடன் கையால் அடிபட வேண்டிய அவசியம் என்ன? கடந்த பிறவியின் கர்மங்களை இந்த பிறவியில் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் பரமாத்மாவான கண்ணன் ஏன் வாலி வதத்திற்கு இந்த பிறவியில் பலனை அனுபவிக்க வேண்டும்? கண்ணன் நினைத்திருந்தால் வேறு வகையில் கூட புறப்பட்டு போயிருக்கலாம் அல்லவா?
பரசுராமனும் அதே விஷ்ணுவின் அவதாரம்தானே!.. இராவணன் மூவரிடம் தோற்கிறான்.
1. கார்த்தவீர்யார்ச்சுனன் ( இவரும் விஷ்ணுவின் அவதாரம்)
2. வாலி
3. இராமன்.
கார்த்தவீர்யார்ச்சுனனை சாய்த்த பரசுராமரே இராவணனைச் சாய்த்திருக்கலாமே? இன்னொரு அவதாரம் ஏன் அவசியமானது?
1. பிரம்மன் தூக்கத்தில் தொலைத்த வேதங்களை மீட்க எடுத்தது இமைகளே இல்லா மீன் அவதாரம்.
2. அவசரத்தில் தவறுகள் செய்து பலமிழந்த தேவர்களுக்கு அமிர்தம் கடைய அமைதியே உருவான நிதானமான கூர்மாவதாரம்.
3. பூமியைக் காக்க சேற்றில் புரளும் வராக அவதாரம்.
4. மனித மிருகத்தை அழிக்க மிருக மனிதனாய் நரசிம்மம்.
5. கொடையாய் உயர்ந்தோனை குடையுடன் கூடிய குட்டையனாய் அடக்கியது .
6. வெறிகொண்ட ஷத்ரியரை அழிக்க ஞானம் கொண்ட முனிகுமாரனாக பரசுராமன்.
7. பெண் பித்தனை அழிக்க ஏகபத்தினி விரதனாய் இராமன்.
8. முள்ளை முள்ளால் எடுப்பது போல சூதை சூதால் அழிக்கும் கண்ணன்.
இப்படி அவனது அனைத்து அவதாரக் காரணங்களிலும் ஆற்றும் காரியத்திற்கேற்ப தன்னை தகுதிபடுத்திக் கொள்கிறான் இறைவன்.
தன்னுடைய எந்த காரியத்திற்கும் ஒரு காரணத்தை இணைத்தே காட்டுகிறான் அவன். இறைவனும் அவனுரைக்கும் தர்மத்திற்கு உட்பட்டவனே என்பதையே இது காட்டும். உலகில் எந்த மதத்திற்கும் இல்லா பெருமை, இறைவன் தானே தர்மப்படி வாழ்ந்து காட்டுவது என்பது இந்து மதத்தில் மட்டுமே உண்டு. உங்களில் நான் இருக்கின்றேன்.. உலகெங்கும் இறைவனே இருக்கிறான் என்ற தத்துவங்கள் இதனால் மட்டுமே நிலைபெறுகின்றன.
இராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதாரம் இரண்டுமே முழு அவதாரங்கள் ஆகும். ஆகவே அவ்வவதாரங்களில் உண்டாகும் கர்ம வினைகளை தீர்க்க வேண்டியது அவருக்கும் கடமை ஆகிவிடுகிறது.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்பது மாபெரும் தத்துவம்.
துன்பம் வரும் வேளையில் ஒரு நிமிடம் பொறுமையாய் சிந்திப்போம். இத்துன்பம் வரக் காரணம் எதோ கர்ம பலன். ஆக இத்துன்பத்தை அனுபவிப்பதால் ஒரு கெட்ட கர்மம் தொலைகிறது என எண்ணிக் கொள்ள வேண்டும். அப்பொழுது துன்பமே கூட கடவுளாய் தெரியும். சிரிக்க முடியும்.
மற்ற அவதாரங்களுக்கு முழுமையான வாழ்க்கை கிடையாது. பரசுராமருக்கு மரணமில்லை. எனவே இராமாவதாரத்தில் செய்த கர்மங்களை நீக்கிக் கொள்வது கிருஷ்ணனுக்கு சரியானதே.
இறைவனும் தர்மத்திற்கு கட்டுப்பட்டவனே என்ற எண்ணமே தர்மத்தின் மீதான மதிப்பை வளர்க்கும்.
நமது புராணங்களைப் படித்தால் ஒன்று புரியும்.
“வரம் வாங்காத அசுரனும் இல்லை”
“சாபம் வாங்காத தேவனும் இல்லை”
இருந்தும் அசுரர் அழிய – அகங்காரமும்
தேவர்கள் வாழ – தவறுணர்ந்து திருந்தலும்
காரணம் என்பதே புராணங்கள் சொல்லும் கருத்து.