செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது. ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு.
“வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்.
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஓர் அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.
ஓடைகளிலும் நதிகளிலும் சலசலத்து மின்னியோடுவது நீரல்ல; எம் மூதாதையரின் குருதி. நாங்கள் உங்களுக்கு இவற்றை விற்போமானால் நீங்கள் நினைவிலிருத்த வேண்டும் இவற்றின் புனிதத்தை. துல்லியமான நீர் நிரம்பிய ஏரிகளில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு பிம்பமும் எங்கள் மக்களின் வாழ்வியலை, நினைவுகளைச் சொல்கின்றன. நீரெல்லாம் என் அப்பனுக்குத் தகப்பனின் குரலில் முணுமுணுக்கிறது.
நதிகளோ எம் சகோதரர்கள். அவை எம் விடாய் தீர்க்கின்றன. அவை எங்கள் ஓடங்களைச் சுமக்கின்றன. எம் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றன. ஆதலினால் எம் நதிகளிடம் ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இந்த நிலத்தை யாம் விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலை மதிப்பற்றது, சூழலின் வாழ்வத்தனையும் அது தாங்குகிறது என்று நினைவிருத்துவீர்களாக. எம்முடைய தாத்தனுக்கு அவனது முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக்காற்றுதான் அருளிற்று, இதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒருவேளை உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தைத் தருவோமானால், நீங்கள் அதனைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன்மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்ததை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் போதிப்பீர்களா? இந்த பூமி நம் தாய் என்றும், எது இந்த நிலத்துக்கு நேர்கிறதோ அது இந்த நிலத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் நேரும் என்றும்?
நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஓர் இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.
கடவுள் ஒருவரே. பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் படைப்புக் கடவுளின் மீது நிகழ்த்தப் படுவதே. உங்களுக்கு இறுதியில் என்னவாகும் என்பது எங்களுக்கு விளங்காப் புதிர்தான். எல்லா எருதுகளையும் கொன்று குவித்த பின், எல்லாக் குதிரைகளையும் அடக்கியபின் என்னாகப் போகிறது? அடர்வனங்களின் பகுதிகளெல்லாம் மனிதக் கூட்டத்தின் மூச்சுக் காற்று படர்ந்தபின், பசுமலைகளின் சிகரங்களை மின்கம்பிகளின் பின்னல்கள் மறைக்கும்போது… செறிந்த காடுகள் எங்கே? அழிந்தன..உயர் வானில் பறக்கும் பருந்துகள் எங்கே? போயே போயின…
அப்புறமென்ன? உயிர்த்திருப்பது இல்லாமலாகி, வாழ்தல் மட்டுமே எஞ்சும்.
கடைசி செவ்விந்தியனும் அவனது கானுயிரோட்டமும் மறைந்தபின், அவன் குறித்த நினைவென்பது, அலையாடும் புல்வெளியைக் கடக்கும் மேகத்தின் நிழல் போலான பின் இந்த நதிக்கரைகளும் காடுகளும் இங்கிருக்குமா என்ன? எம் மக்களுடைய உயிர்ப்பு இங்கே எங்கிருக்கும்?
தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதை அந்த இறை நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்.
நாங்கள் இந்த நிலத்தின் பகுதி என்பதே போல்தான் நீங்களும். இந்த பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. உங்களுக்கும்தான். இறை என்பது ஒருவரே. செவ்விந்தியனோ வெள்ளையனோ ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் அல்லர். நாமெல்லோரும் ஒருதாய் வயிற்று மக்களே”
கட்டுரை: Prasanna Ramaswamy