தாயாகிய தனித்துவம்

“தாயாகிய தனித்துவம்” எனும் கனதியான இந்த
நன்நூலின் எமது தமிழ்பேசும் சமூகத்திற்கு இன்னுமோர் வரப்பிரசாதம் ஆகும்.

நூலின் ஆசிரியர் வைத்தியப் பெருந்தகை யாழ் தென்மராட்சி மண்ணில் அவதாரம் எடுத்து அறப்பணி ஆற்றும் நல்ல மானுடன் ஆவார்!

எம் செம்மண்ணில் சமாதானக் கூத்து அண்ணாவியர் எரிக் சொல்ஹெய்ம் அவர்களால் அரங்கேற்றப்பட்ட கால கட்டத்தில்
யாழ்ப்பாணத்தின் மருத்துவபீடத்திலும் அதற்கு வெளியேயும்
பின்னர் யாழ் போதான வைத்தியசாலையிலும் எங்கள் விரிவுரையாளராக பல பெறுமதி மிக்க
போதனைகளைச் செய்தவர்!

இன்று முதுநிலை விரிவுரையாளராக உயர்ந்து நிற்கும் இந்தப் பெருந்தகை எமக்குப் போதித்த நல்லறிவானது இனமத பேதம் ஏதும் இன்றி இன்றும் பலருக்கும் பயன்பட்டே வருகின்றது.

உலகத் தமிழினம் சந்தித்த மிகப் பெரும் மானுட அவலம் நிகழ்ந்தேறிய
“#முள்ளிவாய்க்கால்” வரை இந்தப் பெருந்தகை உவந்த பெருத்த செல்வம் எந்தனூடாகவும் பயணப்பட்டது.

ஆம், ஆட்லெறிகளும் ஆயிரம் கிலோ விமானக்குண்டுகளும் ஆர்பரித்தெழுந்த ஊழிக் காலத்தில் பல ஆயிரம் உயிர்களைப் பாதுகாக்க எனை ஒத்த எந்தன் தோழமை வைத்தியர்களுக்கும் அடியேனுக்கும் பயன்பட்டது.

வைத்தியக் கலாநிதி கந்தையா குருபரன் அவர்கள் முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்து சேவை செய்யாவிட்டாலும் தனது #அரூபகரங்கள் கொண்டு இடையறாது இன்னலைகளைச் சந்தித்த #ஈழத்திசைகள் எங்கணும் மகத்தான சேவை புரிந்தார் என்று உரைத்தால் அது மிகையான கூற்று அல்ல!

“இந்த நூல் தமிழ்பேசும் சமூகத்துக்குப்
பெரும் சேவை செய்யக் காத்திருக்கின்றது” என்ற சேதி தமிழ்த்தாயின் ஆன்மாவை நிச்சையம் நிறைத்து பெருமிதம் கொள்ள வைக்க வல்லது ஆகும்! 📕