புத்தாயிரமாம்(Y2K) ஆண்டின் பங்குனி நம்பிக்கையின் மாதமாகத் தமிழரிடை பதிவானது.

“பங்குனி வெயிலில் போறவனைப் பார்ப்பதே பாவம்!”

“பங்குனி மாதத்தில்தான்
தரமான பனங்கள்ளு ஊறும்”

“பங்குனியில்தான் எங்கள் தன்மானத் தந்தை பாயும் புலி பண்டாரவன்னியன் வழிபாடு செய்த வற்றாப்பளை அம்மனுக்கு விழா எடுப்போம்”

“பங்குனித்திங்களில் தான் எங்கள் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் பொங்கல்”

என தமிழர்களின் வாய்களில் பல விடையங்கள் பேசப்படும் மாதமாக இருந்த பங்குனி மாதமதை புத்தாயிரம் (2000) ஆண்டில் ஓர் பெரு நம்பிக்கையின் மாதமாக அல்லது பெரு வெற்றியின் மாதமாக தமிழர்தம் மனங்களில் பதியப்பட்டது.

மார்ச் கிரெகொரியின் நாட்காட்டியின் மூன்றாவது மாதமாகும்.

இம்மாதம் “மார்ஸ்” என்னும் உரோமானியப் போர்க்கடவுளின் நினைவாகப் பெயரிடப்பட்டது.

தமிழர்களைப் பொறுத்த வரையிலும் அவர்கள் “பால்ராஜ்” எனும் தம் போர்க் கடவுளை அதிகம் நினைக்கும் மாதம் ஆகும்.

ஆம், அப்படியொரு பங்குனியில்தான் வடமராட்சியின் கிழக்கு சுடுமணலில் காயப்படும்மக்களுக்காகவும், விழுப்புண் அடையும்
போராளிகளுக்காகவும் காப்பகழிகள் அமைத்துக்கொண்டிருந்தோம்.

மணல் மண்ணின் தன்மை இறுக்கமானது அல்லவே அதனால் நீரில் எழுத்துப் போல அது முடியாத காரியமாகவே இருந்து கொண்டிருந்தது.

எதிரியும் பலமுனைகளில் இருந்தும் ஆட்லெறி, ஐந்து இஞ்சி எறிகணைகள் என எங்கள் மக்கள் பெருமளவில் தங்கியிருந்த செம்பியன்பற்று பிலிப்பு_நேரியார்_ஆலயத்தை அண்டிய பிரதேசத்தில் அள்ளிக்கொட்டிக்கொண்டேயிருந்தான்.

அந்த நேரத்தில்தான் சுண்டிக்குளத்திலிருந்து கடற்புலிகளின் அரசியற்பிரிவைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்தினார்.

போரில் சிக்குண்ட மக்கள் சுண்டிக்குளம் பகுதியில் தங்குவதற்காக கொட்டகைகள்_அமைத்து_விட்டு_பெரிய_வாகனம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.

அங்கிருந்த அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார்தான் தன் பங்கு மக்களையும் அயலூர் மக்களையும் காத்து நிழலாக நின்றவர். ஆதலால் அருட்தந்தை ஊடாகவே மக்களுடன் பேசி பாதுகாப்பான சுண்டிக்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்ல முற்பட்டார்.

மக்கள் பின்னே செல்ல மறுத்துவிடடார்கள்.

எல்லாமே பயன் அற்றுப்போய் அவர் எங்களிடம் வந்தார்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துக்கட்ட (Wound Dressing) முதல் நாளும் அவர்களுக்கு ஏற்புவலித் தடுப்பு ஊசி (Anti Tetanus Toxoid) போடுவதற்கு என இரண்டாவது நாளுமாக, இரண்டு நாட்கள் முன்னரே அவர்களுடன் பழகியவர்கள் என்ற முறையில் உதவி மருத்துவர் வண்ணனும் மருத்துவத் தாதி அருள்நங்கையும் அடியேனும் அவர்களுடன் பேசினோம்.

அதன் பின்னர் சிலர் சம்மதித்தனர்.

இப்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்தவர்களிடம் காரணம் கேட்டோம்.

இஞ்சை வந்திருக்கிறது பால்ராஜ் தம்பி, ஆனையிறவில் உள்ள ஆமி இரண்டொரு நாட்களில் ஓடிவிடுவான்”…

பிறகு “நாங்கள் ஏன் ஓடுவான்…?”

என்று இராணுவ ஆலோசகர்கள் போல எங்களிடம் திரும்பக் கேள்வி கேட்டார்கள்.

ஆம், தமிழர்கள் தம் காவல் தெய்வங்களை வெகுவாகவே நம்பினார்கள். அதிலும் சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் (Man of Valour) அவர்களை மக்கள் மலையாகவே நம்பினார்கள்.⚓️

(26/03/2000 – 22/04/2000)