எரித்திரியா..

535

1890 இல் செங்கடல் சாலையோரம் இத்தாலியால் குடியேற்ற நாடாக உருவாக்கப்பட்டது எரித்திரியா. 1896 இல் எதியோப்பியா மீது இத்தாலி படை எடுத்தது. அப்படை எடுப்பின் போது எரித்திரியா தன் தளங்களை இத்தாலிக்கு வழங்கியது. ஆனாலும் படையெடுப்பு எதியோப்பியாவால் முறியடிக்கப்பட்டது.

1936 இல் இத்தாலி மீண்டும் எதியோப்பியா மீது போர் தொடுத்தது. இம்முறை எரித்திரியா இத்தாலியுடன் இணைந்து போரிட்டது. இத்தாலி எதியோப்பியாவை தன் ஆளுகைக்குள் கொண்டுவந்தது.

இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலியின் ஆதிக்கம் முடிவுக்கு வர எதியோப்பியாவும் எரித்திரியாவும் இங்கிலாந்தின் வசமாகின. 1952 இல் இங்கிலாந்து எரித்திரியா-எதியோப்பியா இணையாட்சியை உருவாக்கினர். 1962 இல் எரித்திரியச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு எதியோப்பியா ஒற்றையாட்சிக்குள் வந்தது. எரித்திரியாவின் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது.

ஆரம்பத்தில் எரித்திரிய விடுதலைப் போராட்டத்தை எரித்திரிய விடுதலை முன்னணி முன் நின்று நடத்தியது. அவ்வமைப்பின் தலைமைகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகச் சிலர் பிரிந்து சென்று எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினர். இன்னும் சிறு சிறு குழுக்களும் தோன்றின. ஆனாலும் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி விடுதலைப் போரில் முன்னிலை பெற்றது.

எதியோப்பிய இராணுவம் மீது கொரில்லாட் தாக்குதல் நடத்தி, ஆயுதங்களைக் கைப்பற்றி, அவர்களையே திருப்பித் தாக்கத் தொடங்கியவர்கள் காலப்போக்கில் மரபுவழி போர் புரியும் அளவுக்கு தம்மை வளர்த்துக் கொண்டனர். 1977 இல் எரித்திரிய விடுதலைப் போரின் ஏக பிரதிநிதிகளாக தம்மைப் பிரகடனப்படுத்தினர். பெரும்பான்மை எரித்திரியர்களும் அவர்கள் பின் திரண்டனர்.

ஆனாலும் எரித்திரிய விடுதலை முன்னணியும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கத் தவறவில்லை. ஒரு எல்லையில் அவர்கள் போரிட்டு எதியோப்பியாவிடமிருந்து இடங்களை மீட்க, இன்னொரு புறம் கொரில்லா முறையிலும் மரபு வழியிலும் எதியோப்பிய இராணுவத்தைத் தாக்கி எரித்திரியாவின் பெருநிலப்பரப்பைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி.

 இவ்விரு இயக்கங்களினதும் இரு முனை தாக்குதலைச் சமாளிக்க முடியாத எதியோப்பியா எரித்திரியாவை விட்டு முற்று முழுதாக விலகி, எரித்திரியத் தனிநாட்டுப் பிரகடனம் கைகூடும் வேளை வந்தபோது எதியோப்பியாவுக்கு உதவ சோவியத் ஒன்றியம் முன்வந்தது. ஆயுத தளபாடங்களை எதியோப்பியாவுக்கு வாரி வழங்கியது.

சோவியத்தின் ஆயுத உதவியுடன் 1978 இல் இழந்த இடங்களை மீட்க பெரும் படை நகர்வை மேற்கொண்டது எதியோப்பியா. 100000 வரையானோர் கொண்ட படையணி மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதில் எதியோப்பியாவின் இரு பிரதான விடுதலை இயக்கங்களும் தற்காப்புத் தாக்குதலை நடத்திய வண்ணம் தந்திரோபாயமாகப் பின்வாங்கினர். என்றாலும் எரித்திரிய விடுதலை முன்னணி இந்தச் சண்டையில் பெரும் இழப்பையும் பின்னடைவையும் சந்தித்தது.

குறுகிய நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்ட எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணி மீது அவ்வப்போது தாக்குதல் நிகழ்த்தினாலும் அவை எல்லாம் தோல்வியில் முடிந்தன. மிகவும் கூர்மையான போர்த்தந்திரம் மூலமாக எதியோப்பியாவை வீழ்த்தினர் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர். பொறுப்புப் பொறுத்துப் பார்த்த சோவியத், தன் நேரடி நெறிப்படுத்தலில், 120000 படையினரைக் கொண்டு,  எரித்திய மக்கள் விடுதலை முன்னணியை முற்றாக அழித்தொழித்து  எரித்திரியாவை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் 1986 இல் சண்டை நடத்தியது.

சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பொழுது, எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியின் சிறப்புக் கொமோண்டோ அணி அசுமேரா விமான நிலையத்தில் ஊருடுவி அதிரடியாகத் தாக்கியது. 40 வரையான விமானங்கள், எரிபொருள் குதங்கள், ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட்டன. எதியோப்பியா நிலைகுலைந்தது. இத்தாக்குதலிலிருந்து மீள முன் எரித்திரிய விடுதலை முன்னணி உள்ளிட்ட ஏனைய போராட்டக் குழுக்கள் ஆங்காங்கே ஊடுருவி எரித்தியப் பகுதிகள் பலதைக் கைப்பற்றித் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

திக்கெங்கும் ஊடுருவலும் தாக்குதலும் உயிர், உடமை, இட இழப்புகளும் ஏற்பட எதியோப்பியா திக்கித் திணறியது. திணறத் திணற அடித்தார்கள் என்பதுக்கமைய இன்னொரு அடி இடியாக எதியோப்பியப் படை மேல் வீழ்ந்தது.

எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் இன்னொரு ஊடுவலைச் செய்து அதிரடியாகத் தாக்கினர். எரித்தியப் பகுதியின் அவப்பேடு எனும் இடத்தில் அமைக்கப்பட்டு, எரித்திய முற்றுகைப் போரை நடத்திக்கொண்டிருந்த எதியோப்பிய தலைமையகம் அதிரடித்தாக்குதல் மூலம் கைப்பற்றப்பட்டது. ஒட்டு மொத்த எரித்திரியாவும் எரித்திரிய இயக்கங்கள் வசம் வந்தன.

அடுத்தது என்ன? பேச்சு வார்த்தைதானே.. உலகப் பெரியண்ணன் அமெரிக்கா உள்ளே வந்தது. சுதந்திரம் பற்றி மக்களின் அபிப்பிராயம் அறிய வாக்கெடுப்பு நடத்துவோம் என்றது. அது தொடர்பாகப் பேசுவோம் வாங்க என்றது. எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் உசாராக பேசலாம்… வாக்கெடுப்பு நடத்தலாம்… ஆனால் அடிச்சுப் பிடிச்ச இடத்தை நாங்கள்தான் ஆளுவோம் என்றார்கள். இடைக்கால அரசை அமைத்தார்கள்.

 இலண்டனில் பேசத் தொடங்கினார்கள்.. முடிவு கண்டார்கள்.. 1993 ஏப்பிரல் 23-25 இல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் சுதந்திரத்தை விரும்பினர். 1993 ஏப்பிரல் 27 இல் எரித்தியா தனிநாட்டுப் பிரகடம் செய்யப்பட்டது. மே 24 ஐ விடுதலை நாளாக அதிகாரபூர்வமாகக் கொண்டாடுகிறது எரித்திரியா..

இவ்வாறு போராடி விடுதலை அடைந்த எரித்திரியாவின் இன்றைய நிலை மகிழ்வானதாக இல்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டியது வருத்தமான கட்டாயமாகிறது.