விசால மனசும் கவலை உப்பும்

90

பல கஷ்டங்களையும் கவலைகளையும் சுமந்தபடி புத்தபிரானைத் தேடி ஒருவர் வந்தார். அவருடைய முகமும் உடலும் வாடி இருப்பதை புத்த பெருமான் அவதானித்தார்.

ஒரு குவளை தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து அவனுக்குக் குடிக்கக் கொடுத்தார் புத்தர்.

நீண்ட தூரம் பயணம் செய்து வந்த அவன் மடக்கென்று உப்புக் கலந்த நீரைக் குடித்தான்.

உப்புக் கரிக்க சடக்கென நீரைத் துப்பினார் பக்தர். உடனடியாக புத்தர் அதே அளவு உப்பை பக்கத்தில் இருந்த ஆற்றில் கலந்து விட்டு ஆற்று நீரை அள்ளிப் பருகுமாறு கூறினார்.

அவனும் தாகம் தீர ஆற்று நீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

உடனே புத்தர் “கவலைகளும் கஷ்டங்களும் கலந்ததுதான் வாழ்க்கை. உன் மனது குவளை போல் குறுகியதாக இருந்தால் கவலைகளும் கஷ்டங்களும் வாழ்வை கரிக்க வைக்கும். உன் மனதினை ஆறு போல் விசாலமாக வைத்திருந்தால் கவலைகளும் கஷ்டங்களும் கரைந்து வாழ்வு இனிக்கும்” என்றார்.

சிந்தை தெளிந்த பக்தன் மகிழ்வுடன் விடைபெற்றுச் சென்றான்.

ஆம்! எங்கள் மனங்களை விசாலமாக்கினால் கவலைகளும் கஷ்டங்களும் கரைந்து காணாமல் போய் எங்கள் வாழ்வு இனிதாகும்.