வரத்தின் விலை முயற்சி

தோமஸ் அல்வா எடிசனின் ஆசிரியர், எடிசனை எதற்கும் உதவ மாட்டார் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார். மருத்துவர்களோ அவருடைய தலையை ஆராய்ந்த பின் அவருடைய தலை இயற்கைக்கு மாறாக உள்ளது எனக் கூறி, எடிசனின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும் என்றனர்.

இதைப் பற்றி எல்லாம் கவலை அடையாத எடிசனின் தாயார், எடிசனை முன்னேற்ற உறுதி பூண்டார். ஆசிரியரான அவர் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். அவருடைய கடும் முயற்சியின் பெரும் பலனாக எடிசன் விஞ்ஞானி ஆனார்.

எந்த எடிசனின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்றார்களோ அந்த எடிசனால்தான் இன்று உலகம் வெளிச்சமாக உள்ளது. அதற்குக் காரணம் எடிசனின் தாயாரின் முயற்சியும் கடின உழைப்பும்.

மனிதனுக்கு மூளை முக்கியம் எனில் மூளைக்கு முக்கியம் முயற்சி ஆகும். எனவே முயற்சி எனும் விலை கொடுத்து வெற்றி எனும் வரம் வாங்குவோம்.