தலைப்பில்லை

440

கடந்து சென்று விட்டது
இன்னொரு மே பதினெட்டு..

தமிழா..
உன் கால்களைக் கொஞ்சம் பின்னகர்த்து..
உள்விழி திறந்து சற்றே பின்நோக்கு..

வலி சுமந்த மேயல்ல
விழி சுரந்த மாதமல்ல
செந்நீர் வற்றிய எங்கள் பெண்மார்(பு)
கண்ணீர் சுரந்த நாள்..

வலிக்கும் மேலே
அதற்கொரு பெயர் தேடு..

கருக்கலைந்துதான் கண்டிருந்தோம்
அங்கு
உருக்குலைந்த கருக்கண்டோமே..

சிங்கம் தன் விரல் கொண்டு
உருக்குலைத்த கரு கண்டோமே..

கொடூரத்துக்கும் மேல்
அதற்கொரு பெயர் சூட்டு..

தடக்கி விழுந்தாலும்
பிணத்தின் மேல் வீழ்ந்தோமே..
இடமும் வலமும் – சதைப்
பிண்டம் மேல் உருண்டோமே..

அவலத்துக்கும் மேல்
அதற்கொரு அடையாளமிடு…

அறுபட்டு அங்கம் விழ
குருதிக்கடல் பெருக்கெடுத்தோட
குற்றுயிராய் இருந்த குழந்தை
வாஞ்சையுடன் முகம் பார்க்குமே…

முத்தமிட குனிகையிலே
முதுகு பக்கம் சில்லிடுமே..
மூத்த பிள்ளை இரத்தம்
மூஞ்சியிலே தெறுக்குமே.

அழிவுக்கும் மேலே
இதற்கொரு பொருள்தேடு..

ஆடை மாற்ற ஓடையில்லை
காலைக் கடன் உடலில்லை..
உயிர்பிடிக்கப் போன திசை
வெறி பிடித்த மிருக்கக் குகை..

பெண்கள்
பிணமாக்கப் புணர்வோரைக் கேட்டிருந்தோம்..
பிணங்களைப் புணர்வோரை அங்கு கண்டோமே..

சிங்கம் புணர்ந்து பிறந்தவர்கள்
எங்கள் பெண்கள்
பிணங்களைப் புணர்வதைக் கண்டோமே.

ஊழிக்கும் மேலே
அதற்கொரு காலம் தேடு..

இன்னொன்றை உணர்ந்தாயா..
ஆதவன் எரிக்கக் கூடும்..
வானம் இடிந்து வீழக் கூடும்..
என்ற அச்சம் கொண்டிருந்தான்..

குண்டு மழை பொழிந்து அவன்
ஆகாய வழி அடைத்து விட்டான்..
மகா பாரதச் சூழ்ச்சி வலை
மகா வம்சத்தான் பின்னி விட்டான்…

ஓமட தமிழா..

முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்டது
தமிழனல்ல.. அந்தக்
கொள்ளி வாய்க்காலில் செத்து வீழ்ந்தது
மனிதமடா..

உரிமை கேட்டு போரிட்ட நீ
இனி
மனிதம் மீட்கப் போர் தொடு..
மனிதம் மீட்கப் போர் தொடு..

+++++++++++++++++

தமிழர் “வசிக்கும்” இடமெல்லாம் நடந்தன கண்டன அஞ்சலிகளால் முள்ளிவாய்க்காலை மீண்டும் கண்டன கண்கள்..

வழக்கம் போல சட்டெனக் கோபம் பீறிட்டது. பி.பி.சியின் தமிழோசை தொடக்கத்தில் எமக்கிட்ட பெயர் கிளர்ச்சியாளர்கள். அப்பெயர் பயங்கரவாதியாக மாறி போராளிகளாக உருவாக நெடுநாள் பிடித்தது. ஆம்.. பிரபல்யமான ஊடகங்கள் எங்களை விடுதலை வேண்டிப் போராடிபவர்களென அடையாளம் கண்டு கொண்டன. ஆனால் நாங்களோ அதை தக்கவைக்கத் தவறிவிட்டோம்.

அமெரிக்க உள்ளிட்ட மேல்நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் எமை அடைத்த போது அதை வெறும் செய்தியாகவும் பேசுபொருளாகவும் கொண்டோமே தவிர அவ்படைப்புக்கு எதிராக வெகுசனப் போராட்டம் எதையும் முன்னெடுத்ததாக நான் அறியவில்லை.

அதுதான் எம் அழிவின் துவக்கம். இறுதியில் அரங்கேறியது முள்ளிவாய்க்கால் கொடூரம். இதனால் எப்போதும் முந்தி வந்துவிடும் கோபம். கண்டன அஞ்சலிகளால் மீண்டும் முள்ளிவாய்க்காலைக் கண்ட போதும் இதனால்தான் வந்தது கோபம். கொஞ்ச நேரம்தான்.. அதன் பின் ஒரு நிர்ச்சலன நிலை..

அந்நிலையை வடிகட்டி, மௌனத்தை பிரித்தெடுக்க முற்பட்டதில் கிடைத்ததுதான் இக்கவிதை.. இடவா விடவா எனும் இக்கட்டான இடிகளுக்கு நடுவில் அடுக்கிய சொற்களில் நடுக்கம் இருக்கு. திருத்தி அடுக்க விருப்பம் இல்லாததால் அப்படியே