உயிர் கொடை கொடுத்து தன்னினம் காக்கும் எறும்புகள்

499

மும்முரமாகப் போர் நடந்துகொண்டு இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் பிணங்கள். அந்த புல்டாக் எறும்புகளின் (Bulldog ants) படை எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் மிகுந்த பலசாலிகளாக இருக்கின்றன. இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகளால் (Exploding ants) ஒரு கட்டத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்போது எறும்புகள் படையில் இருந்து ஒன்று மட்டும் படைத் தலைவரிடம் வருகிறது.

“நமது படை அழிந்துகொண்டே வருகிறது. இப்படியே போனால் நாம் வாழ்விடத்தை இழக்கவேண்டியது தான்.”

“நானும் அதைத் தான் யோசித்துக் கொண்டிருந்தேன்”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். அந்தப் பார்வை இருவருக்கும் அவர்கள் ஒரே விஷயத்தை யோசிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. “நான் சிந்திப்பதைத் தான் நீயும் சிந்திக்கிறாயா!”

ce-timothy-paine_15514.jpg

Picture Courtesy: CE.Timothy

“ஆம் தலைவா… அவர்களை வரச்சொல்ல வேண்டியது தான். வேறு வழியில்லை.”

படைத்தலைவர் இலைகளால் செய்த ஹாரனை எடுத்து ஊதுகிறார். அந்தப் படை வருகிறது. அடர் சிவப்பு உடம்புடனும், கருப்பு நிறப் பின் பகுதியோடு வீறுநடை போட்டு நடந்துவருகிறது. அது வந்தவுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த மற்ற எறும்புகள் பின் வாங்குகின்றன. இது முன்னேறிச் சென்று எதிரியோடு சண்டையிடுகிறது. எதிரி பலமாகத் தாக்குகிறான். அனைத்தையும் வாங்கிக் கொள்கிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த எறும்புகள் ஒவ்வொன்றாக சமயம் கிடைக்கக் கிடைக்க தனது புட்டத்தைத் தூக்கிக்கொண்டு எதிரியை முறைத்தவாறு நிற்கின்றன. தனது உடலை எவ்வளவு தூரம் தனக்குள்ளேயே இழுக்கமுடியுமோ அவ்வளவுக்கும் உள்ளிழுக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் வெடித்துச் சிதறுகிறது. அது வெடித்ததில் வெளியான மஞ்சள் திரவம் காரத்தன்மை மிகுந்து இருந்ததால் அது எதிரியின் மேல் பட்டதும் அவர்களும் உயிரிழக்கிறார்கள். புல்டாக் எறும்புகளின் படைபலம் குறைகிறது. போர் முடிந்து எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள் வெற்றி பெறுகிறார்கள். அந்தத் தற்கொலைப் படையின் மகத்தான தியாகத்தால் பல்லாயிரம் எறும்புகளின் வாழ்விடம் பாதுகாக்கப் படுகிறது.

Mark_Moffett_15356.png.jpg

Picture Courtesy: Mark Moffett

ஃபேண்டஸி கதை கேட்பது போல் இருந்ததா! இது கதையல்ல, நிஜம்.

போர்னியோ காடுகளில் வசிக்கும் ஒருவகை எறும்பு இனம் தான் இந்த எக்ஸ்ப்ளோடிங் எறும்புகள். இவை ஆயிரக்கணக்கில் காலனிகளாக வாழக்கூடியவை. பொதுவாகவே எறும்புகளை நாம் அவற்றின் ஒருங்கிணைப்பு, அயராத உழைப்பு, நேரம் தவறாமை போன்ற குணங்களுக்காக ஆச்சரியத்துடன் பார்ப்போம். அந்த வரிசையில் இப்போது இந்த எறும்புகளின் தியாக உணர்வும் சேர்ந்துகொண்டது. பொதுவாகச் சிற்றுயிர்களில் ரசாயனப் போர்முறை அதிகமாகவே காணப்படுகிறது. உதாரணமாக பீட்டல் என்ற வண்டு இனம் வேட்டையாடியால் விழுங்கப்பட்டாலும் கூட அதன் உடலில் இருந்து ஒருவகை திரவத்தை வெளியிட்டு அதைக் காயப்படுத்தி அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். கரையான் கூட சில சமயங்களில் தனது தாடைக்குக் கீழ் இருக்கும் சுரப்பியில் இருந்து எதிரியைத் தோற்கடிக்க திரவத் தாக்குதலைப் பயன்படுத்தும். இவ்வாறு சிற்றுயிர்களில் இது பொதுவான யுக்தியாக இருந்தாலும் எறும்புகளில் இதைத் தற்போது தான் கண்டுபிடித்து உள்ளார்கள் விஞ்ஞானிகள்.

Photo_by_Pensoft_Publishers_16205.jpg

Pictutre Courtesy: Pensoft Publishers

ஆங்கிலத்தில் ஆட்டோதிஸிஸ் ( Autothysis) என்று அழைக்கப்படும் இந்த வகைச் செயலுக்கு கிரேக்க மொழியில் சுயத்தைத் தியாகம் செய்தல் என்று பொருள். அந்த இனத்தில் பிறக்கும் இனப்பெருக்கம் செய்யமுடியாத பெண் எறும்புகளே பெரும்பாலும் இந்த வகைத் தியாகத்தைச் செய்கின்றன. அந்தப் பெண் எறும்புகள் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ள தன் உடலை உள்நோக்கி இழுக்கும். இரண்டாகப் பிரிந்து இருக்கும் உடல் பகுதிகளை மடக்கித் தன்னைத் தானே உடைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ளும். அவ்வாறு அது உடையும்போது மஞ்சள் நிறத்தில் பசை போன்ற திரவம் வெளிப்படும். விஷத்தன்மை வாய்ந்த திரவத்தால் பாதிக்கப்படும் எதிரி உயிரினம் இறந்துவிடும்.

தற்கொலைப் படையாகச் செயல்படுவது மட்டுமே இந்த எறும்புகளின் வேலை அல்ல. இருப்பதிலேயே பெரிய தலையைக் கொண்ட எறும்புகள், பல சமயங்களில் எதிரிகள் அவர்களது காலனிக்குள் நுழையாமல் இருக்க அகலமான தனது வாயில் இருந்து வெளிப்படும் உமிழ்நீரைக் கொண்டு தற்காலிகமாக ஒரு தற்காப்புச் சுவரை உருவாக்கும்.

Heinz_Wiesbauer_16353.jpg

Picture Courtesy: Heinz Wiesbauer

மனித உடலில் இருக்கும் செல்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஏதேனும்  ஆபத்தான செல்கள் இருப்பதைக் கண்டுவிட்டால் அதை அழிப்பதற்குத் தன்னையே அழித்துக்கொள்ளும். அதுபோலத் தான் இந்த எறும்புகளும். தமது கூட்டத்தைக் காக்கத் தங்களையே தியாகம் செய்கின்றன. ஹென்றி டேவிட் தோரேவ் எழுதிய பேட்டல் ஆஃப் ஆண்ட்ஸ் என்ற சிறுகதையில் எறும்புகளுக்குள் நடக்கும் சண்டையை அவர் பார்த்ததாக எழுதியிருப்பார். சிறு வயதில் அதைப் படித்தபோது கற்பனைக் கதை என்றே நினைத்திருப்போம். அது எவ்வளவு உண்மை என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது.

விகடன்.கொம்

https://www.vikatan.com/news/miscellaneous/122958-martyr-ants-who-save-their-colony-by-doing-suicide-attempt.html