இக்கட்டான சூழ்நிலைகளில் தமிழ் தன்னை தக்க வைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பல. அவற்றுள் ஒன்று தேவாரங்கள். அத்தேவாரத்தமிழ்சுவையை நாம் பெரிதாகக் கவனிப்பதில்லை. இந்த ஆதங்கமே தேவாரத்தமிழை நானாயத் தூண்டியது.
உண்மையோ பொய்யோ.. நாயன்மார் பாகம் சமூக அக்கறை கொண்டதாகவே உள்ளது. ஒதுக்கப்பட்டோர் நாயன்மார்களானது. கடவுளைக் காட்டி ஒதுக்கப்பட்டோரை கடவுளே ஆட்கொண்டது என பல சமூகச்சீர்கேடுகளை தகர்த்ததும் நாயன்மார் காலத்தின் பங்காகும்.
நம்பிக்கை இருந்தால்தான் மருந்து கூட வேலை செய்யும். இறையெனும் நம்பிக்கையும் இசையெனும் மருந்தும் எதையும் சாதிக்குமன்றோ.
எல்லாவற்றையும் விட மேலாகக் கருதுவது நாயன்மார் நாவிருந்து விழுந்த தமிழாகும். மந்திரம் இல்லாமல் இறவனை பூசிக்க தமிழ்கொண்டு கட்டப்பட்ட தேவ ஆரங்கள் தேவர்கள் மொழி வடமொழி மட்டுமே எனும் கருத்தை உடைத்து தமிழும் உயர்ந்ததுதான் என்று நிரூபித்தன.
அத்தேவாரத்தமிழை தொடராகக் காண்பதே இப்பதிவின் வழியாகும்.
தேவாரங்களையும் அதன் பொழிப்புரைகளையும் மனனம் செய்திருக்கின்றோம். அவற்றின் சுவையை முழுமையாக நுகர, நாங்களே பிரித்து பொருள் மேய்வது பேருதவியாக இருக்கும்.
எனக்குத் தெரிந்த தேவாரங்களையும கருத்துகளையும் எழுதுகிறேன். நீங்களும் எழுதலாமே.