வரலாற்றுப் புகழ் மிக்க குடாரப்புத் தரையிறக்கப் பங்காளி

அருங்கோடைகளில் அருங்கொடையாக தாகம் தீர்க்கும் நீர்நிலையாக அனல் கக்கும் செங்களங்களை தங்கள் அன்பாலும் பெருத்த ஆளுமையாலும் நிறைக்கும் பக்குவம் சில போராளிகளிடம் நிறைந்திருந்தது.

அத்தகைய நிறைந்த ஞானம் கொண்டு தமிழீழப் போர்க்களங்களையும் தளங்களையும் அன்பாலும் உயர் ஒழுக்க விழுமியங்களாலும் நிறைத்தவர் லெப். கேணல் ஞானசுதன் (மணி) அவர்கள்.

ஆட்லெறி, அஞ்சிஞ்சி எறிகணைகளுடன் ஆயிரம் கிலோ விமான குண்டுகளும் ஆர்ப்பரித்த வியன்களங்கள் எங்கும் நித்தம் நித்தம் நிதானமாய் போர்ப்பணி செய்த செங்களச் செம்மல்.

வட தமிழீழம் எங்கும் நடைபெற்ற அனேக சமர்களில் பங்கெடுத்த வயதில் மூத்த ஒரு போராளி.

தமிழர் படைத்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட மரபுவழி சிறப்புப் படையணியான சாள்ஸ் அன்ரனி படையணியில் உறுப்பினராவதென்பது ஒரு போராளிக்கு கிடைக்கப் பெறும் அதியுச்ச பேறு ஆகும்.

அந்த புகழ்மிக்க படையணியின் பொறுப்பு நிலையில் இருக்கும் மாண்பினை பெற்றவர் லெப்.கேணல் மணி அவர்கள்.

அத்துடன் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் சிறப்புத் தளபதியான லெப்.கேணல் இராஜசிங்கன் அவர்களின் ஆலோசகராகவும் அன்பு செலுத்தும் அண்ணனாகவும் இருந்தவர்.

உலகப்பெரும் வல்லரசு நாடுகளுக்கு பெருவியப்பினை உண்டாக்கிய
குடாரப்புத் தரையிறக்கத்தில் பங்கு கொண்டு சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் தலைமையில் தரையிரங்கியவர்.

இத்தாவில் பகுதியில் பெட்டிச்சமரில் களமாடும் பெரும் பாக்கியமும் பெற்ற கீர்த்தி மிக்கவர் மணி அண்ணா என எல்லோராலும் அழைக்கப்படும் இந்த மூத்த போராளி.

சமர்க்களங்களில் வாசம் செய்த மூத்த தளபதிகளின் அதிக மதிப்பினைப் பெற்ற ஒரு ஆளுமையாக எங்கள் மணி அண்ணா திகழ்ந்தார்.

அஃதே,

மூத்த தளபதிகளின் பெரும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்.

மணி அண்ணரின் முத்தான சிரிப்பையும் அகத்தை அப்படியே அள்ளி வெளியே வீசும் முகத்தினையும் ஒரு முறை தரிசனம் செய்தால் குளிர் சந்திரனைப் பார்த்த மகிழ்வு உண்டாகும்.

வசீகரம் கொண்ட அவரது முகத்தாலும் பண்பொழுகும் நடத்தையாலும் அவருக்கு அதிகளவானோர் நண்பர்களாக இருந்தோம்.

களத்திலும் தளத்திலும் மணி அண்ணருடன் மனம்விட்டுப் பேசும் போராளிகள் அதிகமானோர் இருந்தனர். ஆனால் எந்த ஒரு இயக்க இரகசியத்தையும் ஒரு நாளும் யாரிடமும் பேசியது கிடையாது.

சமர்க்களங்களில் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக நடைபெறும் உரையாடல்கள் வானலைகளில் கலக்கும் போது அவை அனைத்துமே எதிரிப் படைகளால் ஒட்டுக் கேட்கப்படும்.

எதிரிப்படைகளின் ஒட்டுக் கேட்டலை கருத்தில் கொண்டே சங்கேத பாசைகள் (Codewords) பயன்படுத்தப்படுவது உண்டு.

சங்கேத பாசைகள் மூலம் சேதிகள் தளபதிகளுக்கிடையே பறிமாறப்பட்டாலும் ஒட்டுக் கேட்கும் (Overhearing) எதிரி சில வேளை அவற்றையும் புரிந்து கொள்வான்.

மேற்சொன்ன காரணங்களால் மூத்த தளபதிகளுக்கிடையேயான சில அதிக இரகசியம் மிக்க தகவல்கள் நம்பிக்கை மிக்க போராளிகளூடாக வாய்மொழி மூலமும் கடத்தப்படுவதுண்டு.

அந்த இரகசிய சேதிப் பரிமாற்றத்தை மூத்த தளபதிகள் மணி அண்ணை ஊடாக செய்வதுண்டு.

களமுனையில் களமாடியதுடன் களமுனை நிர்வாகப் பொறுப்பாளராகவும், களநிலைமை அறிவிப்பாளராகவும் மணி அண்ணா செயலாற்றினார்.

உற்சாகமான உத்வேகமான பல காதைகள் சொல்லி ஊரில் உள்ள இளைஞர்களை எழுச்சி கொள்ள வைத்தவர் அதையே தனது வீட்டிலும் செய்தார்.

தனது தலைமகன் வளர்ந்து இளைஞன் எனும் பருவத்தை அடைந்தவுடனேயே அவனையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மனமுவந்து இணைத்து பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல்
போராளிகளுக்கும் நல்லதோர் முன்னுதாரணமாக வழிகாட்டினார்.

எங்கள் மூத்த தளபதிகள் பலரை கலங்கடித்த ஒரு பெரும் துயராக மணி அண்ணரின் இழப்பு அமைந்திருந்தது.

மணி அண்ணாவுக்கும்🎖 இவருடன் வீரச்சாவு அடைந்த ஏனைய போராளிகளுக்கும் வீரவணக்கம்!