விண்ணைத்தேடி – அறிவியல் மைல்கற்கள் – 8

429

எழுத்தாக்கம் – இளசு

ஹிப்பார்கஸ் (கி.மு. 190 – 120)

விண்ணைத்தேடி, அதனால் மன்ணில் உண்டாகும் மாற்றங்களைத்தேடி
விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ள சிநேக இழைகளைத் தேடி
ஒரு மனிதன் எத்தனை கண்டுபிடித்தறிய முடியும்?

அம்மனிதன் நம் நாயகன் ஹிப்பார்கஸாய் இருந்தால்
எத்தனையோ கண்டுபிடிக்க முடியும்.

ஹிப்பார்கஸ் அக்காலம் வழங்கிய மிகப்பெரிய வானியல் ஞானி.
கவனிப்பதை கணக்குப் போட்டு , இயற்கையின் இயல்புகளை
அதன் சூட்சுமங்களை இனம் கண்டு சொன்ன தீர்க்கதரிசி.

அதுவரை வந்ததைக் கவனித்து சொல்வது மட்டுமே என்றிருந்த கிரேக்க வானியல்
ஹிப்பார்கஸால் வருவதைக் கணித்து சொல்லும் ஆருட இயலாய் மாறியது.
ஜியோமெட்ரி, டிரிகோணோமெட்ரி – இவற்றில் வல்லவரான ஹிப்பார்கஸ்
இவற்றின் கணக்குகளால் கணித்துச் சொன்ன விண்ணக உண்மைகளின் பட்டியல் நீளமானது.

பாபிலோனின் கணிதம், கிரேக்கத்தின் கணிதம் என்ற இரு அரை நிஜங்களை
இணைத்து முழுமையான புதுக்கணிதம் தொகுத்த செயல்வீரர் ஹிப்பார்கஸ்.
360 டிகிரி வட்டத்தை மேற்குக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே.

ஹிப்பார்கஸ் விண்டு சொன்ன விண்ணக உண்மைகளில் சில:

1) ஒரு ஆண்டு என்பது = 365 நாட்கள் + 5 மணிகள் + 55 நிமிடங்கள்.

2) பருவங்கள் எல்லாம் சரிசமமான காலநீளம் கொண்டவை அல்ல –
வசந்தம் = 94.5 நாட்கள்
கோடை =92.5 நாட்கள்
இலையுதிர்காலம் = 88.125 நாட்கள்
பனிக்காலம் = 90.125 நாட்கள்.

3) சூரியனுக்கும் பூமிக்கம் இடையே உள்ள தூரம் –
மிகக் குறைச்சல் – ஜனவரி 4
மிக அதிகம் – ஜூலை 4

4) மாதம் என்பது = 29 நாட்கள் + 12 மணிகள் + 44 நிமிடங்கள் + 2.5 நொடிகள்.
( இன்றைய அறிவியலில் இது ஒரே ஒரு வினாடி அதிகம்.
எண்ணிப்பாருங்கள்.கி.மு.வில் இதைக் கண்டுபிடித்துச் சொன்னவரின் அசாத்திய திறமையை!!!!)

5) அவரின் வாழ்நாளுக்கு முந்திய 800 ஆண்டுகளில் எப்போதெல்லாம் சந்திரகிரகணம்
நிகழ்ந்திருக்கக்கூடும் என்று ஒரு பட்டியல்.

6) கண்ணால் பார்க்கக்கூடிய நட்சத்திரங்கள் 850ன் தொகுப்பு, வரைபடம்.
அவற்றின் பிரகாசத்துக்குத் தக்க இடமளித்த பட்டியல் ( மேக்னிடிட்யூட் பட்டியல் என்ற
அவரின் இத்தொகுப்பு இன்றும் பயனாளப்படுகிறது!!!!)

7) கி.மு. 134 -ல் ஸ்கார்பியோ ( விருச்சிக) நட்சத்திரத் தொகுப்பில் புதிய உறுப்பினர் சேர்ந்துகொண்டதைக்
கண்டு சொன்னது

8) பகலும் இரவும் சரிசமநேரமாய் இருக்கும் இரு ஈகியூனாக்ஸ் நாட்கள் செப்டம்பர், மார்ச்சில்
வரும் என்று யூகித்துச் (சரியாய்ச்) சொன்னது

9) நட்சத்திரக் கோலப்புள்ளிகள் வானவாசலில் மிக மெல்ல இடம் மாறிவருகின்றன
என அறிந்து சொன்னது

10) வசந்தத்தின் முதல் நாள் சூரியன் உதிக்கும் புள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை
ஒரு டிகிரி நகர்ந்து வருவதை ஆராய்ந்து சொன்னது – அதன் காரணம்
சுற்றிவிட்ட பம்பரமாய் தன்னைத்தானேயும் சுற்றும் பூமி ஒரு முறை தள்ளாடி
மறுமுறை அதே தள்ளாட்டத்தை விட்ட இடத்திலே தொடங்க 25,800 ஆண்டுகள் ஆகும்
என அதிசயத்தக்கவகையில் கணித்துச் சொன்னது.

இப்படி பத்தும் சொன்ன ஹிப்பார்கஸ் பத்தோடு பதினொண்ணு வகை அறிஞர் அல்லர்!
அறிவுக்கணித கயிறேறி விண்ணைத் தேடியவர்.