வரலாறு பகரும் மணலாற்றுக் காட்டில் அமைந்திருந்த மைக்கல் (காமதேனு) பேஷ் தொடர்பான கதைகளை சென்ற பதிவில் வாசித்திருப்பீர்கள்.
இன்றைய நாளில் மைக்கல் முகாமுக்கு அடுத்துள்ள “சுவேசன்_முகாம்” குறித்துப் பார்க்க உள்ளோம்!
01) நிசாம் முகாம்
02) அதிரடி பயிற்சிப் பாசறை
03) குட்டுவன் முகாம்
04) ஜீவன்(உதயபீடம்) முகாம்
05) முரளி முகாம்
06) சோமேஷ் முகாம்
07) நீதிதேவன் முகாம்
08) காராம்பசு முகாம்
09) விடியல் (மகளிர் பாசறை)
10) சதீஷ் (நாசகாரி)…முகாம்
11) கிருஷ்ணா (அமுதகானகம்)
12) இந்திரன் முகாம்
13) சுவேசன் முகாம்
என அந்தக் காட்டுக்குள் சின்னனும் பெரிதுமாக பற்பல அதிசயத் தங்கங்களும் பாசறைகளும் காணப்பட்டது….
ஒரு நாள் கிருஷ்ணா எனும் மருத்துவப் பாசறையில் நின்றிருந்த எனை மேஜர் காவஷ்கர் அழைத்தார்!
தற்பாதுகாப்புக்காய் அந்த சின்னஞ் சிறிய துமுக்கியையும் எடுத்துக் கொண்டு அவரோடு வெளிக்கிட்டேன்!
எனை மெல்ல நிமிர்ந்து பார்த்த மேஜர் கவாஷ்கர்…”
“ஒரு பையும்(Bag) எடுத்து வாரும்” என யாழ்ப்பாணப் பாணியில் சொன்னார்!
அவர் சொன்னதற்கு அமைய பையையும் எடுத்துக் கொண்டு பாலைமரமும் முதிரை மரமும் அணிவகுத்து நிமிர்ந்து நிற்கும் காட்டிடை நடந்து போய்க் கொண்டிருந்த போதுதான் இடைவழியில் எங்கே போகின்றோம் எனக் கேட்டேன்!
“பணிசும் பாணும்/Bun and Bread” 🍞 “வாங்கப் போகின்றோம் என மேஜர் கவாஷ்கர் சொன்னார்!
மணலாற்றுக் காட்டின் எல்லைகளைத் தாண்டி வெளியே உள்ள ஊருக்குப் போகப் போகின்றோம் எனும் மகிழ்வோடு எட்டி எட்டி நடந்தேன்!
சிறிது தூரம் போனவுடன் “சுவேசன்பேஷ்” வந்துவிட்டதென அவர் மகிழ்ச்சியை தனது முகத்தில் படரவிட்டபடி என்னிடம் சொன்னார்!
அது ஒரு சாதாரண தங்ககம் என்றே எண்ணிய எனக்கு ஓர் அதிர்ச்சி அங்கே காத்திருந்தது.
ஆம், அது ஒரு வகையான இன்ப அதிர்ச்சியாக உடலெங்கும் கொடிவிட்டுப் பரவிப் பரவசமூட்டியது!
செங்கல் சூளை (Brick clamp) கொண்ட அந்த பென்னம் பெரிய கொட்டகைகளின் உருமறைப்பினுள்ளே ஒரு வெதுப்பகம் இயங்கிக் கொண்டிருந்தது!
புகை கண்டால் பகை தாக்கிடுவான் எனும் எச்சரிக்கை உணர்வோடு பொதுவாகவே புகையை அதிகம் உண்டாக்காத விறகுகளே காட்டு முகாம்களில் சமையல் மற்றும் தண்ணீர் கொதிக்க வைக்கப்பாவிப்பது வழமை!
இந்த நிலையில் இங்கே ஒரு வெதுப்பகமா (Bakery) என வியந்து நின்ற எனைப் பார்த்த போராளி வேந்தன் ஒரு அர்த்தப் புன்னகை ஒன்றினை வீசிப் பெருமிதமாய்ச் சிரித்தான்!!
மூடி அடைக்கப்பட்டு காற்றுப் புகுவதற்கு மட்டும் ஒரு துவாரம் இடப்பட்ட செங்கல் சூளைகளினுள்ளே முழுமையான தகனம் (Full combustion ) நடைபெறும் போது புகை வெளிவருவது சொற்பமாகவே இருக்கும் என மேஜர் கவாஷ்கர் சற்றுச் சிந்தித்துவிட்டு ஒரு விஞ்ஞான விளக்கத்தையும் தந்தார்!!
1988 ஆம் ஆண்டு அண்ணா காட்டில் வாழ்ந்த காலத்தில் அந்த வெதுப்பகமும் அமைக்கப்பட்டதாக மேஜர் புஷ்பலிங்கம் சொன்னார்.
இமைய நாட்டுப் படைகளின் முற்றுகைக்குட்பட்டிருந்த அந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்த வெதுப்பகத்தை அமைக்க பொதுமக்களின் உதவியும் நாடப்பட்டிருந்தமையை அறிந்த போது எந்தன் வியப்பு மென்மேலும் அதிகரித்தது.
வடமராட்சியில் வாழ்ந்து வந்த முத்தான மூதாளர் ஒருவரை கடல் வழியே அழைத்து வந்து தமிழர்தம் நெய்தல் நிலமான “செம்மலை”யில் இறக்கி காட்டுக்குள் அழைத்து வந்து கட்டியதாக அக்காலத்தில் காட்டிடை வாழ்ந்த போராளி மேஜர் காவஷ்கர் மேலும் தொடர்ந்தார்!
தேசப்பற்றுறுதி மிக்க அந்த மூதாளர் தளபதி ஆதவன் (கடாபி) அவர்களின் தந்தை என்பதையும் பின்னாளில் அறிந்து கொண்டேன்!
அலை வந்து மெல்லெனத் தாலாட்டும் அழகான மாங்கனித்தீவில் தமிழர்தம் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு மாகணங்களை இணைக்கின்ற இந்த மணலாறுப் பிரதேசம் “இதயபூமி” என அழைக்கப்படுகின்றது.
நன்றி!
தொடரும்!…
-வயவையூர் அறத்தலைவன்-
✊