தமிழ் ஆன்மாவை நிறைவாய் நிறைத்த நத்தார் வழிபாடு! 🤗

ஒரு நத்தார் நாளில் மல்லாவி தேவாலயத்திற்கு மருத்துவர் அமுதன் அவனையும் அழைத்துச் சென்றார்.

அருட் தந்தை கருணாரத்தினம் (Rev. Father Mariampillai Xavier Karunaratnam) அடிகளார் தலைமையில் இரவுப் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆம், கிளி ஃபாதர் என தமிழர்களால் வாஞ்சையோடு அழைக்கப்படும் எங்கள் தேசத்து அருட் தந்தையால்
ஆங்கு தூய தமிழில் பூசைகள் நடைபெற நடை பெற அவன் அனலிடை அகப்பட்ட மெழுகாய் உருகத் தொடங்கினான்!

பாமரருக்கும் படித்தவர்களுக்கும் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் அந்தப் பூசை ஓசை
நயம் பெற்று இலங்கியது!

வழக்கொழிந்து போன வடமொழியாகிய சமஷ்கிருத மொழிப் பூசைகளைக் கேட்டுப் புளிச்சுப் போன காதில் தேவனே நேரில் வந்து தேனூற்றுவதாய் உணர்ந்து உவகை பொங்கிட நின்றான்!

தன் பங்கு மக்களுக்காய் மன்றாடும் ஒரு பங்குத்தந்தை அந்தப் பங்கு எல்லைகளையும் கடந்து போரிடை வாழும் ஒட்டுமொத்த தமிழருக்காய் மன்றாடினார்!

பொருளாதார மற்றும் பெருத்த மருந்துத் தடைகளால் வாடும் வன்னி மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்!

தேசநலன் எனது கடன்
தேன்தமிழே எனது திடன்…

என்ற வைரவரிகளை உச்சரித்துக் கொண்டே தங்கள் உயிரிலும் மேலாக தாங்கள் நேசித்த மக்களுக்காய் எல்லைகளில் எழுச்சி பெற்று நின்ற போராளிகளுக்காய் வேண்டினார்!

மார்கழி மாதத்தின் மாரி மழையிலும் மின்னல் இன்றிப் பொழியும் சன்ன மழையிலும் நனைந்து துவட்டாத ஈரத்தலைகளுடன் எல்லையில் நிமிர்ந்து நின்ற தனது தேசத்தின் பெண் போராளிப் பிள்ளைகளுக்காய் முதலின் வேண்டினார்!

அஃதே, அந்த வேண்டுகையின் பின்னர் ஆண் போராளிகளுக்காகவும் எல்லைப்படை வீரர்களுக்காகவும் வேண்டினார்!

பூசை நிறைவுதனை எய்தியவுடன் இறை சேதியையும் அன்பையும் அழகாய் சுமந்து கொண்டு வெளியே வந்தார்!

ஒவ்வொருவராக “கைலாகு” கொடுத்து கட்டியணைத்து முத்தமிட்ட எங்கள் பங்குத் தந்தை
அண்ணளவாய் ஆறடி வளர்ந்த அவனை நிமிர்ந்து பார்த்து மீண்டுமொரு முறை
அர்த்தப் புன்னகையுடன் இறுக அணைத்து முத்தமிட்டார்!

ஆம், முதலாவது முத்தத்தில் அல்லது கட்டிய தழுவுகையில் அவன் கழுத்தில் கட்டி அடி நெஞ்சு வரை நீண்டிருந்த அந்தப் புனிதப் பொருளை பங்குத் உணர்ந்து கொண்ட போது சிவில் உடை தரித்து நின்ற அவன் யார் என்பதை நன்கு புரிந்து கொண்டார்!

இப்போது இரண்டாவது தடவையும் அவனை தீராத வாஞ்சையோடு அணைத்துக் கொண்டு அன்பினையும் அப்பழுக்கில்லாத தனது தேசப்பற்றுதலையும் பகிர்ந்து கொண்டார்!

நத்தாரும் நத்தாருக்கான இரவுப் பூசையும் நடைபெற்று இருபது ஆண்டுகளுக்கு மேலாகச்
சென்றாலும் இவன் ஆத்மாவை வருடிய அந்தப் பூசையிலேயே பாலன் ஜேசு
பிறப்பினை நேரில் கண்டான்!

– வயவையூர் அறத்தலைவன்-