வயவை மக்கள் விழிக்க வேண்டிய நேரம்

567

எங்கள் காணிகள் எங்களுக்குக் கிடைக்கும். மின்மின் மன்றம் மீண்டும் உதைபந்தாட்டத்தில் கோலோச்சும். சந்தியடி பழையபடி களைகட்டும். சந்தை கூடும். ஆலயமெங்கும் சங்கொலி கேட்கும். ஒழுங்கைகள் எல்லாம் உயிர் பெறும். 

ஈராண்டுக்கு முன் பலரும் இப்படித்தான் நம்பினோம். வயவையூரின் எல்லைப் புறங்கள் சில விடுபட்டதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமைப்புகளை உருவாக்கினோம். முகநூல்களில் குழுமங்களை பதிவுசெய்தோம். மிக மிக ஈடுபாட்டுடனும் சுறு சுறுப்பாகவும் வேலை செய்தோம். ஊர்ப்பணியை நாங்கள்தான் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு அமைப்பும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படும் அளவுக்கு இருந்தது ஈடுபாடும் சுறுசுறுப்பும். ஆனால் இந்தப் போட்டி தந்ததென்னவோ எதிர்மறை விளைவுதான். 

நான் தான் செய்வேன்.. நான் தான் செய்வேன் என்ற போட்டிதான் வயவை மக்களை பிரித்து வைத்திருக்கிறது. நாங்கள் செய்வோம் என்ற கோட்டில் இயங்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆர் குத்தினாலும் அரிசி ஆனால் சரி என்ற நிலைக்காவது நாம் வர வேண்டும். 

நிற்க, நாட்டில் வயவையூருக்கென இரு அமைப்புகள் இயங்கத் தொடங்கின. ஒன்று வயவையூரை விடுவிப்பதற்காகவும் மற்றது மீள் குடியேறியோருக்கான உதவுவதற்கும் இயங்குமென மக்களால் நம்பப்பட்டது. மக்களின் நம்பிக்கை நிறைவேறி உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது மக்களின் பொறுப்பு.

ஆம்.. அப்படியே இயங்குகின்றன என்றால் காணி விடுவிப்பதில் உள்ள சுணக்கத்துக்கான காரணத்தை நாட்டில் உள்ளவர்கள் கேட்டறிதல் வேண்டும். அங்குள்ள அமைப்புகளைப் பலப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் தத்தமது நாட்டில் உள்ள அமைப்புகளிடமும் தாயக்கத்தில் உள்ள சொந்தங்களிடமும் கள நிலவரங்கள், செயற்பாட்டு நிலவரங்களைக் கேட்டறிதல் வேண்டும்.  கேட்டறிந்து, கலந்து பேசி, அடுத்த கட்ட நகர்வுகளைத் திட்டமிடல் வேண்டும். 

நேர்த்தியான திட்டமும் ஒருமித்த உழைப்பும் இல்லாமல் ஊரின் விடுதலையும் மீளெழுச்சியும் சாத்தியமில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். உணர்ந்து ஒன்றுகூடி ஒன்றுபடுவோம்.