மனசுக்கும் தேவை முதலுதவி

பணித்திறன் குறைதல்.. சோம்பல் தன்மை.. உறக்கமின்மை அல்லது அதிக உறக்கம்.. தனிமை நாடல்.. இப்படியான மாற்றங்களை ஒருவரிடம் அண்மைக்காலமாகக் காண நேரின் அவருக்கு உடனடியாக உளவியல் முதலுதவி தேவை.

அதற்காக உளவியல் தாக்குதலுக்குள்ளான ஒருவரிடம் போய் “என்னாச்சு; ஏதாச்சு; எப்படி ஆச்சு; எங்கே ஆச்சு” போன்ற கேள்விகளை அடுக்கினோமேயானால் அவருக்கு எரிச்சல் மேலுடுமே தவிர நிவாரணியாகாது.

அவருடைய பிரசைனையை அவராகவே எம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் தனக்கு நெருக்கமானவர்; பாதுகாப்பானவர் என அவர் நினைக்குமாறு எமது அணுகுதன்மை இருத்தல் வேண்டும்.

சூழலுக்கு ஏற்றவாறு, மிகவும் இயல்பாக அவரோடு உறவாட வேண்டும். இதற்காக தனியான எந்த பயிற்சியும் தேவையில்லை.

நிலாவைக் காட்டி உணவூட்டியப் பரம்பரை எங்களுடையது. பிள்ளை கதைப்பதைப் பற்றிக் கதைத்து நாங்கள் நினைத்ததை பிள்ளைக்குச் சொல்லும் சாகசவாதிகள் நாங்கள். அவ்வளவு மனங்களை வளைக்கும் கலைஞர்கள்தானே எங்களிலிருந்து உருவான அரசியல்வாதிகள்.

எங்களால் முடியும்.. இயல்பான முறையில் உரையாடி பாதிக்கப்பட்டவரை இயல்பாக இழுத்து வரும் இயல்பு எங்களுக்கு உண்டு. இதுதான் உளவியல் முதலுதவி. அதன் பின் உளவியல் நிபுணர் ஒருவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதும் அவசியம்..