சங்கமித்தை வருகையும் தமிழரெம் பிஞ்சுகளும்! SANGHAMITTA’S ARRIVAL AND OUR KIDS!

அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட மல்லாவி நகரில்,  எங்களின் வீரஞ்செறிந்த மன்னன் பண்டார வன்னியன் அவர்களின் திருவுருவச்சிலை வடிவமைக்கப்பட்டது.

திருவுருவச்சிலையை அமைத்தவர் யார்? அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை ஆராந்தவர்கள்தான் தமிழரெம்மில் அனந்தம்.

எங்கள் அடையாளங்கள் எங்கள் மண்ணில் திட்டமிட்டு அழிக்கப்படும் இவ் வேளையில் அதன் முக்கியத்தை பலர் உணரவில்லை என்பது இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

பகைவருக்கும் பணியாத அடங்காப்பற்று மண்ணின் வீரத்திலகம் பாயும் புலி பண்டார வன்னியனின் திருவுருவச்சிலையில்,

(01.)உயர்ந்த தோற்றம்!
(02.)விரிந்த மார்பு!
(03.)ஒடுங்கிய இடை!
(04.)பரந்த நெற்றி!
(05.)உரமேறிய தோள்கள்!
(07.)கூரிய பார்வை!

போன்றவை இல்லாமல் போனது ஓர் குறைதான், மறுப்பதற்கு இல்லை.

அதேநேரம்…

பேரரசன் அசோகனின் மகளும் மகிந்தனின் சோதரியுமான பிக்குணி சங்கமித்தை தரையிறங்கியதாக சொல்லப்படும் புதிய அடையாளங்கள் யாழ்ப்பாணத்தின் சம்புத்துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்போர் முடிவடைந்த கையோடு மக்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள முட்கம்பி முகாம்களில் இருந்து சரியான முறையில் மீளக்குடியமர்த்தப்பட முன்னரே இந்தப் புதிய அடையாளம் தமிழர்தம் காலாச்சாரத் தொட்டிலில் தமிழர்களின் விருப்புக்கு மாறாக அமைக்கப்பட்டது.

அவை உள்ளூர் மற்றும் வெளியூர் மக்களின் சுற்றுலாத் தலங்களாகவும் மாற்றமடைந்து வருகிறது.

அதற்கும் அப்பால்…

இன்று எங்கள் சின்னஞ் சிறிய தமிழ்க்குழந்தைகள் கல்விச் சுற்றுலா என்ற பெயரில் அங்கு அழைக்கப்படுகிறார்கள்.

அதன் மூலம் பெரும்பான்மை இனத்தவர்கள் அரச மற்றும் தொல்லியல் திணைகளங்கள் மூலம் எங்கள் சிறார்களின் பிஞ்சுமனங்களில் சிங்களவர்களின் புனையப்பட்ட வரலாற்றினை ஆழமாக பதித்தும் வருகிறார்கள்.

இதைத் தடுக்க முடியாத நாதியற்ற சமூகமாக நாமிருக்கின்றோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 259வது பிறந்த நாள் இன்று (03.01.1760)ஆகும்.

இந்த நன்நாளில் ஒன்றுபட்டுச் சிந்திப்போம் வாரீர்!