பாடும் பறவைகளின் இன்னிசை ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகோலும்!🎶❤️🐤

தென்றல் தவழும் எங்கள்
தென்னந்தோப்புக்களில் தென்னங்கிளிகளின் மொழி கேட்டு (இ)லயித்து
வாழ்ந்தது நம்மினம்.

பச்சை நிறக்கிரீடத்துடன் நெடிதுயர்ந்த
பனந்தோப்புகளின் அருகே பலவித பறவைகளின் பாடல்கள் கேட்டு இன்புற்று வாழ்ந்தது நம்மினம்.

வேப்பமரக் கிளையிலிருந்து கூவும் வரிக்குயில்களின் இனியகுரலுக்கு பதில் குரல் கொடுத்து பரவசம் அடைந்தது நம்மினம்.

பார்க்குமிடமெங்கும் “பறவைகள் சரணாலயமா?” எனத் திகைக்க வைக்கும் எழில்மிகு மண்ணில் வாழ்ந்தது நம்மினம்.

இடையே இயந்திர வல்லூறுகளின் இரைச்சலால் நிலைகுலைந்து போனது.

இடையே பிளிறிய இயந்திர யானைகளின்
இராட்சத இரைச்சலால் கதிகலங்கிப் போனது.

இரும்புத்துலா என பென்னம்பெரிய ஆட்லெறிகளால் தமிழரின்
செவிப்பறைகள் கிழிவடைந்து போனதும் உண்மைதான்!

நுனி நாக்கினால் மானுடநேயம் பேசும் மேற்கு நாடுகளும் ‘சர்வதேச தொண்டு நிறுவனங்கள்’ என்ற பெயரில் எம் தாய்நிலத்தில் தங்கி நின்று வேடிக்கை பார்த்தது.

ஆம்,
உலக சுகாதார நிறுவனம் சொன்னதோர் அறிவுரையால் என் மனப்பறவை இன்று பின்னோக்கிப் பறப்பதை தவிர்க்க முடியவில்லை.

நாளும் பறவைகளின் இசை கேளுங்கள் என்பதுதான் அந்த அறிவுரை.

நலவாழ்வுக்காக நாளும் 10,000 பாதங்கள் பதிப்பது போல,…

நலவாழ்வுக்காக நாளும் ஐவகை பழங்கள், மரக்கறிகள் உண்பது போல,…

நாள் தோறும் 05 நிமிடங்களாவது பாடும் பறவைகளின் இன்னிசை கேட்பது ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகோலும் என்பதை நவீன மருத்துவ ஆய்வுகள் நிரூபித்து நிற்கிறது.

நகரம் அதுவும் உலகப் பெருநகரம் நரகமாகாமல் பாதுகாக்க சிட்டுக் குருவிகள் இன்னிசை மழை பொழிந்ததை பதிவு செய்து உள்ளேன்.

கேளுங்கள்!

பாருங்கள்!

மகிழுங்கள்!

குறிப்பு-
(இயந்திர வல்லூறுகள்:யுத்த விமானங்கள்)
(இயந்திர யானை: யுத்த டாங்கிகள்)